ஃபலஸ்தீன்: காஸாவுக்கு விடிவு பிறக்குமா?

0

தனது அடாவடிகளின் தொடராக, சென்ற வருடம் ஃபலஸ்தீனின் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கும் அதிகமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்தனர்.
ஃபலஸ்தீனியர்கள் நடத்திய எதிர்தாக்குதலில் இஸ்ரேலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இஸ்ரேலின் தொடர் தோல்விகளின் ஒரு அங்கமாக இந்த தாக்குதலும் இடம்பெற்றது. பல்வேறு தரப்பினரின் தலையீட்டை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் மத்தியில் சமாதான உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது. இதன் ஓர் அங்கமாக காஸா மீதான பொருளாதார தடை நீக்கப்படும் என்றும் காஸாவின் விமான நிலையம் மற்றும் துறைமுகம் மீண்டும் செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதுவரை இவை பேச்சுவார்த்தை அளவிலேயே தொடர்கின்றன. தற்போது ஹமாஸ் இயக்க தலைவர் காலித் மிஷ்அல் மேற்கொண்டு வரும் தொடர் சந்திப்புகளும் வெளிநாட்டு பயணங்களும் காஸாவின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் உடனான சமாதான உடன்படிக்கை கையெழுத்தாவதை குறித்து காலித் மிஷ்அல் சமீபத்தில் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேருடன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பு கத்தாரில் நடைபெற்றது. மத்திய கிழக்கிற்கான முன்னாள் சமாதான தூதுவராகவும் பிளேர் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளேர் உடனான சந்திப்பு குறித்து ஃபதாஹ், இஸ்லாமிக் ஜிஹாத், பாப்புலர் ஃப்ரண்ட், டெமாக்ரடிக் ஃப்ரண்ட் உள்ளிட்ட ஃபலஸ்தீன அமைப்புகளுடன் ஹமாஸ் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இஸ்ரேல் உடனான சமாதானத்திற்கான விதிமுறைகள் அனைத்து தரப்பினரின் ஆலோசனைக்கு பின்னரே எட்டப்படும் என்று ஹமாஸ் கூறியுள்ளது.
இதனிடையே செப்டம்பர் மாத மத்தியில் காலித் மிஷ்அல், சவூதி அரேபியாவுக்கு சென்று மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸை சந்திப்பார் என்று ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜூலை மாதம் சவூதி சென்ற மிஷ்அல், மன்னர் மற்றும் இளவரசர் முகம்மது பின் நயீஃப் ஆகியோரையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் மற்றும் சவூதி இடையேயான உறவின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக மிஷ்அல் தெரிவித்தார். ‘ஹமாஸ் இயக்கத்தை புறக்கணிக்கும் போக்கை முந்தைய மன்னர் அப்துல்லாஹ் மேற்கொண்டு வந்தார். தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது’ என்று அரசியல் விமர்சகர் அத்னான் அபூ அம்ர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே காஸாவின் புனர்நிர்மானத்தை மையமாக வைத்து ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே புதிய ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று துருக்கியும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. எட்டு ஆண்டுகால பொருளாதார தடைகள், மூன்று யுத்தங்கள் என சவால்களை சந்தித்து வரும் காஸா பிரதேசத்திற்கு விடிவு காலம் பிறக்குமா என்பதை அறிய இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

Comments are closed.