ஃபாலஸ்தீனியரை இரக்கமற்ற முறையில் கொன்ற இஸ்ரேலிய வீரரின் குற்றம் நிரூபணம்

0

ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனின் மேற்குக்கரையில் ஏலோர் அசாரியா என்ற இஸ்ரேலிய, வீரன் காயமுற்று அசைவற்று தரையில் கிடந்த ஃபலஸ்தீனியரை சுட்டுக் கொலை செய்தான்.

பத்து மாதங்களுக்கு முன்னர் ஃபலஸ்தீனின் ஹெப்ரான் பகுதியில் இரண்டு ஃபலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய வீரர்களை கத்தியால் குத்தியதாக கூறப்பட்டது. இதில் ஒருவரை இஸ்ரேலிய படையினர் சுட்டுக் கொன்றனர். மற்றவரை சுட்டுக் காயப்படுத்தினர். இதில் காயமடைந்து அசைவற்று தரையில் கிடந்த ஃபலஸ்தீனியரை 11 நிமிடங்கள் கழித்து ஏலோர் அசாரியா தனது துப்பாக்கியால் அவரது தலையில் சுட்டுக் கொலை செய்தான். இவனது இந்த செயலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இவன் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் இந்த கொலை செய்த ஏலோர் அசாரியா இராணுவத்தில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தின் இந்த முடிவை வலதுசாரி யூதர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். மேலும் அசாரியாவை ஜனாதிபதி ருவன் ரிவ்ளின் மன்னிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, அசாரியாவிற்கு மன்னிப்பு வழங்கும் முடிவை தான் ஆதரிப்பதாக தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது பதிவில், “ஏலார், அவரது குடும்பம், இஸ்ரேலிய வீரர்கள், குடிமக்கள், வீரர்களின் பெற்றோர் மற்றும் எனக்கு இது மிகவும் கடினமான மற்றும் வலி நிறைந்த நாளாகும். ஏலோருக்கு மன்னிப்பு வளங்கப்படுத்வதை நான் ஆதரிக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் இஸ்ரேலின் தொலைகாட்சி சானல் ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில் சுமார் 67% மக்கள் அசாரியாவை மன்னிக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  அசாரியாவின் தீர்ப்பு வழங்கப்படும் போது நீதிமன்றம் முன்னர் கூடி இருந்த வலதுசாரி யூதர்களில் சிலர் அமெரிக்க குடியரசு கட்சியை சேர்ந்தவரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவருமான டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு பதாகைகளை வைத்திருந்தனர்.

இந்த விசாரணையின் போது, தான் சுட்டுக் கொன்ற நபர் காயமடைந்து தரையில் அசைவற்று கிடந்தாலும் அவரது அருகில் கத்தி ஒன்று இருந்தது. மேலும் அவரிடம் வெடிபொருட்கள் இருந்திருக்கலாம். அதனால் அவர் ஆபத்தானவர். அவர் கொல்லப்பட வேண்டியவரே என்று கூறியுள்ளான்.

ஃபலஸ்தீனிய மனித உரிமை ஆர்வலர் ஒருவரால் இந்த தாக்குதல் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் காயமடைந்து தரையில் கிடந்த நபருக்கு தூரமாகவே இருந்துள்ளது. மேலும் அவரிடம் எந்த வெடிபொருட்களும் இருந்திருக்கவில்லை. இந்த வீடியோ சர்வதேச செய்தி நிறுவனங்களுக்கு பகிரப்படவே அது சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இதனால் இந்த வழக்கை கையிலெடுக்க இஸ்ரேல் கட்டாயப்படுத்தப்பட்டது.

பொதுவாக ஃபலஸ்தீனியர்களை கொலை செய்யும் இஸ்ரேலிய இராணுவத்தினர் எவரும் வழக்குகளை சந்திப்பதில்லை. ஆயிரத்தில் ஒன்றாக இப்படி ஒரு வழக்கு நடைபெற்றாலும் அதில் குற்றம் சாட்டப்பட்டவர் தண்டிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2016 ஆம் ஆண்டு இஸ்ரேலிய படைகள் கொலை செய்த ஃபாலஸ்தீனிய சிறுவர்கள் குறித்த செய்தி (இங்கே)

 

Comments are closed.