ஃபேஸ்புக் அத்துமீறல்: பா.ஜ.க. நிர்வாகி கைது

0

ஃபேஸ்புக்கில் சிறுபான்மை சமுதாயத்தினர் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வந்த சங்பரிவார் அமைப்பை சேர்ந்த கல்யாண் ராமன் என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சிறு வயது முதலே தான் ஆர்.எஸ்.எஸ். ஊழியன் என்றும் அகில பாரத வித்யார்தி பரிஷத்தின் முன்னாள் முழு நேர ஊழியன் என்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஊடகங்களில் பங்கு பெறுபவர் என்றும் தன்னை குறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் கல்யாண் ராமன் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மையினர் குறித்தும் அவர்களின் மத நம்பிக்கைகள் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் தொடர்ந்து பல அவதூறு செய்திகளை தனது சமூக வலைதள பக்கங்களில் இவர் தொடர்ந்து பரப்பி வந்துள்ளார். அத்துடன் சிறுபான்மை இயக்க மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் குறித்தும் சமூக ஆர்வலர்கள் குறித்தும் இவர் மோசமான கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
டிசம்பர் 26 அன்று இவரது ஃபேஸ்புக் பக்கத்தில் நபிகள் நாயகம் குறித்து பதிவிட்ட அவதூறு செய்தியை மையமாக வைத்து மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சிட்லபாக்கம் காவல்துறையினர் கல்யாண் ராமன் மீது வழக்கு பதிவு செய்து இன்று காலை அவரை கைது செய்தனர். கல்யாண் ராமன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

(புகைப்படம்: தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கல்யாண் ராமன் வெளியிட்ட புகைப்படம்)

Comments are closed.