அகல பாதாளத்தில் இந்திய பொருளாதாரம்!

0

அகல பாதாளத்தில் இந்திய பொருளாதாரம்!

நாட்டின் பொருளாதாரத்தை குறித்த கவலையளிக்கும் செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. 2019-2020 நிதியாண்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் (ஜி.டி.பி) வளர்ச்சி விகிதம் ஐந்து சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று புள்ளியியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஒ) சில தினங்களுக்கு முன்னால் வெளியிட்ட புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.கடந்த நிதியாண்டில் இது 6.8 சதவீதமாக இருந்தது.

சில வாரங்களுக்கு முன்பு நாடு தற்போது அசாதாரணமான பொருளாதார மந்த நிலையை சந்திப்பதாக நரேந்திர மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.கடந்த ஏழு  காலாண்டு புள்ளி விபரங்களிலும் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் சரிந்துள்ளதையே அரசின் தரவுகளிலிருந்து தெரிய வருகிறது. 2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டில் எட்டு சதவீதமாக இருந்த ஜி.டி.பி 2019-20 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 4.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.அமெரிக்க கிரெடிட் ரேட்டிங் ஏஜன்சியான ஃபிச், 2020 மார்ச் மாதம் முடிவுறும் நடப்பு நிதியாண்டின் மொத்த ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்திற்கான அனுமானத்தை 4.6 சதவீதமாக ஃபிச் குறைத்துள்ளது. கடன் தேவை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதும், நுகர்வோர் நம்பிக்கையை இழந்துள்ளதும், வியாபாரங்களில் ஏற்பட்ட சரிவும் வளர்ச்சி குறைவதற்கான காரணம் என்று ஃபிச் சுட்டிக்காட்டுகிறது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழலில் திளைத்திருப்பதாகவும், கறுப்பு பணத்தை மீட்பதில் தோல்வியை தழுவியதாகவும் குற்றம் சாட்டி தாங்கள் இந்தியாவை வலிமையான பொருளாதார வல்லரசாக மாற்றப்போவதாக கூறி மோடி அரசு ஆட்சிக்கு வந்தது.ஆனால், ஐ.மு. அரசின் ஆட்சி காலத்தை விட கடந்த ஐந்தரை ஆண்டுகளில் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை மோடி அரசின் கீழ் இந்தியா சந்தித்துள்ளது. பொருளாதார துறையின் வீழ்ச்சியை தடுத்து பலப்படுத்துவதற்கு பதிலாக மோடி அரசு, குடியுரிமை விவகாரத்திலும், தேசிய பாதுகாப்பின் பெயரால் சிறுபான்மை சமூகங்கள் மற்றும் மாணவர்களை வேட்டையாடுவதிலும், உயர் கல்வி நிறுவனங்களை காவிமயமாக்குவதிலும், பசு பாதுகாப்பு, கஷ்மீரிகளின் வாழ்க்கையை சீர்குலைத்தல் முதலான இந்துத்துவ செயல்திட்டங்களில் அதிக கவனம் செலுத்துகிறது.

பொது மற்றும் தனியார் துறைகளை தூண்டுவதும், வேளாண் மற்றும் வேளாண் அல்லாத துறைகளை ஊக்குவிப்பதும் பொருளாதார மந்த நிலையை வெற்றிக்கொள்வதற்கான வழி என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இவற்றையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ளவில்லை. மாறாக, ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை அழுத்தம் கொடுத்து கையகப்படுத்துதல், விமான நிலையங்களை தனியாருக்கு விற்பது, வரலாற்று நினைவுச் சின்னங்களை வாடகைக்கு கொடுத்தல், ரயில்வே துறையை தனியார் மயமாக்குதல், லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது முதலான பொருளாதார கட்டமைப்பின் அடித்தளத்தை பெயர்த்தெடுக்கும் வேலையை அரசு செய்து வருகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்திய வர்த்தக சபையின் ஆண்டு விழாவில் உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், “தற்போதைய மந்தநிலையிலிருந்து இந்தியா மீண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு இல்லை” என்றார்.

மோடி அரசின் இந்துராஷ்ட்ராவை நோக்கிய பயணத்தில் நாட்டின் பொருளாதாரம் அகல பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

Comments are closed.