அகவுரிமை தீர்ப்பு பற்றிய கருத்தரங்கின் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை

0

பத்திரகை செய்தி

நாள்: 29, அக்டோபர்,
இடம்: கவிக்கோ அரங்கம், சென்னை

பங்கேற்றோர்:
அரிபரந்தாமன், முன்னாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்
உஷா ராமநாதன், சட்ட வல்லுநர்
வ.கீதா, பெண்ணிய வரலாற்றியலாளர்

அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதப்படுத்தும் உரிமைகளைத் தீர்மானமான முறையில் உறுதி செய்யும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை இந்திய உச்சநீதிமன்றம் செப்டம்பர் 24ம் தேதி அளித்துள்ளது. இந்த அகவுரிமை (privacy) தீர்ப்பைக் கொண்டாடும் அதே வேளையில் சென்னையில் உள்ள மக்கள் குழுக்களும் சமூக ஆர்வலர்களும் அக்டோபர் 29ம் தேதியன்று ”இந்த தீர்ப்பு அக்டோபர் 30ம் தேதி நிகழ இருக்கும் ஹாதியா வழக்கின் விசாரணைக்கு அடிப்படையாக இருக்கவேண்டும்” என கருத்துரைத்தனர்.

ஹாதியாவின் கதை:

24 வயதான ஹோமியோபதி மருத்துவ மாணவியான ஹாதியா ஒரு சட்டச் சிக்கலின் மையமாக ஆக்கப்பட்டுள்ளார். கேரளத்தின் தி.வி.புரம் ஊரில் அகிலாவாக பிறந்த ஹாதியா, இசுலாத்திற்கு மதம் மாறியது அவருடைய பெற்றோருக்கு பிடிக்கவில்லை. அவரது தந்தை, தனது மகள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டிருப்பதாகவும் அவரை நாட்டை விட்டே வெளியே கொண்டு செல்ல சூழ்ச்சி நடப்பதாகவும் கேரள உயர் நீதி மன்றத்தில் இரு ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்தார். ஹாதியா நீதிமன்றத்தில் ஆஜராகி அவரது குற்றச்சாட்டுக்களை மறுத்தார். தனது சொந்த விருப்பத்தின் பேரில் தான் மதம் மாறியதாகவும் தனது குடும்பத்துடன் வாழ விரும்பவில்லை என்றும் பதிவு செய்தார். ஆனாலும் ஹாதியாவின் தந்தை “கட்டாய” மதமாற்றம் மற்றும் தனது மகள் குடும்பத்துடன் வசிக்காதது ஆகியவற்றை எதிர்த்து வந்தார். அவருடைய வருத்தங்களை கணக்கில் எடுத்துக் கொண்ட நீதிமன்றம் தன்னையே “பேரன்ஸ் பேட்ரியே” எனும் மாற்றுத் திறனாளிகள் மீது அரசு எடுத்துக் கொள்ளக்கூடிய காப்பாளர் ஸ்தானத்தை பயன்படுத்தி ஹாதியா மீண்டும் கல்லூரிக்குச் செல்லவேண்டும் என்றும் அவர் தனது ஹவுஸ் சர்ஜன் படிப்பை முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. ஆனால் ஹாதியா நீதிமன்றத்தில் அடுத்த முறை ஆஜரானபோது தனக்கு திருமணம் ஆகி விட்டிருந்ததை வெளிபடுத்தினார். அவரது சூழல் முன்போல இல்லை என்ற நிலை ஏற்பட்டிருந்ததை அவரது திருமணம் அறிவித்தது. நீதிமன்றம் அவரது திருமணத்தை சட்டபூர்வமானதாக ஏற்க இயலாது எனக் கூறி அவருடைய கணவரின் பிண்ணனி பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டது.

வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே நீதிமன்றம் ஹாதியாவின் திருமணம் ‘அசல்’ திருமணம் இல்லை என்றும் இதில் “நலம்” பெறக்ககூடியவர்களின் தலையீடு உள்ளது என தெரிவித்தது. மேலும் ஹாதியாவின் கணவரின் பிண்ணனி சந்தேகத்துக்கு இடமானதென்றும் ஹாதியா தனது விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்றும் கருத்து தெரிவித்தது. இந்து பெண்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு மணமுடிக்கப்படும் போக்கின் வெளிபாடுதான் இது என்று சொல்லிய நீதிமன்றம் இறுதியில் ஹாதியாவின் திருமணம் செல்லாது என ஆணையிட்டு அவரை அவரது பெற்றோரின் ‘கட்டுப்பாட்டில்’ வைத்திருக்கிறது.அதன் பின்னர் ஹாதியாவின் கணவர் ஷாஹின் ஜஹான் உச்சநீதிமன்றத்தை அணுகி கேரள உயர்நீதிமன்ற ஆணையை ரத்துசெய்யக் கோரினார். உச்சநீதிமன்றம் தேசிய புலனாய்வு நிறுவனத்தை இவ்விஷயத்தில் லவ் ஜிகாத் எனும் பின்புலம் இருக்கிறதா என விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

ஒரு வயதுவந்த பெண் தனக்கு பிடித்த மதத்தை வழிபடவும் தன் விருப்பப்படி திருமணம் செய்யவும் எடுத்த முடிவுகளை அவரே  தெளிவாக எடுத்துக் கூறியும் அதை கேரள உயர்நீதிமன்றம் புறந்தள்ளியது துரதிர்ஷ்டவசமானது. அவர் பலவீனமானவர், சுலபமாக ஏமாறக்கூடியவர், அவருக்கு எது நல்லது என அவருடைய பெற்றோருக்குத் தான் தெரியும் எனும் நீதிமன்றத்தின் வாதங்கள் திகைப்பூட்டுவதாய் இருக்கின்றன. அதற்கும் மேலாக போய் நீதிமன்றம் மிக சொற்பமான தரவுகளின் அடிப்படையில் இதனை  லவ் ஜிகாத் என்று புரிந்து கொண்டுள்ளது அதை விட அதிர்ச்சியளிப்பதாய் இருக்கிறது.

இப்படித்தான் ஹாதியா எனும் வயதுவந்த பெண் அவரது பெற்றோர் வீட்டில் சிறைவைக்கப்படும் நிலை உருவானது. அவரது சுதந்திரத்திற்கான உரிமை, தனக்குப் பிடித்த இறைவழிபாட்டை பின்பற்றுவதற்கான உரிமை, சுயவிருப்பின் படி திருமணம் செய்யும் உரிமை என அவருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளிக்கும் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையும் உருவானது. அவரது வழக்கு தீர்ப்புக்காக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் காலகட்டத்தில் தான் அதே உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதி கொண்ட அமர்வு ஒருவரின் அகவுரிமையை திட்டவட்டமாக நிலைநாட்டும் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

“என்ன உணவு சாப்பிட வேண்டும், எத்தகைய ஆடைகள் அணிய வேண்டும், தனிப்பட்ட வகையிலும், சமூக,அரசியல் வாழ்விலும் யாருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அரசு தீர்மானிப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள்என்று நினைக்கிறேன். பிறருடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான உரிமை, பயணம் செய்ய உரிமை, வேண்டிய இடத்தில் வசிக்க உரிமை ஆகியன குறித்து ஒருவர் முடிவு மேற்கொள்வது என்பது ஒருவரின் அகம்சார்ந்த விஷயமாகும், எனவே அது அகவுரிமை பாற்பட்டதாகும். நாம் மேற்கொத்தக்க அந்தரங்க முடிவாகும்… அனைத்து சுதந்திரங்களுக்கும் அகவுரிமைதான் அடிப்படையாக உள்ளது. காரணம், அகத்தின் தனிமையில்தான் தான் தனக்கான சுதந்திரத்தை எவ்வாறுசெயல்படுத்தப் போகிறோம் என்பதை ஒருவரால் முடிவு செய்ய முடியும். அடிப்படை உரிமைகள் அனைத்தையும் ஊடறுத்து செயல்படும் அரசியல் சட்டம்சார் விழுமியமாக உள்ளதுடன், மனிதர்கள் மேற்கொள்ளும் தேர்வுகள், அவர்களின் சுயநிர்ணயம் ஆகியனவற்றுக்குரிய செயற்பாட்டு களத்தையும் அகவுரிமை பாதுகாக்கிறது”

என தீர்ப்பு தெளிவாக கூறுகிறது.  அகவுரிமை குறித்த நீதிமன்றத்தின் இந்த பரந்துபட்ட புரிதல் ஹாதியாவின் வழக்கு மற்றும் இதுபோன்ற வழக்குகளின் தொனியை தீர்மாணிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அரசும் சமூக நிறுவனங்களும் தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை மறுதலித்து, பல சுதந்திரங்களைத் தடுக்கும் கொடுமையின் ஒரு உதாரணம்தான் ஹாதியாவின் வழக்கு. இதுபோன்ற பல உதாரணங்கள் நடந்துகொண்டிருக்கின்றன – பெண்களின் தேர்வுகள் மறுதலிக்கப்படும்போது, ஒடுக்கப்பட்ட- ஏழை மக்களின் சமத்துவம் மற்றும் சுதந்திரத்துக்கான உரிமைகள் பறிக்கப்படும்போது என இவை தொடர்கின்றன. இந்த கருத்தரங்கம் அரச கண்காணிப்பிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இருக்க குடிமக்களுக்கு இருக்கும் உரிமைகளையும் பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் ஆகியவற்றில் அகவுரிமை பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறுவதாக இருக்கும்.

Comments are closed.