அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழலில் சத்திஷ்கர் அரசின் பங்கை வெளிப்படுத்திய பிரஷாந்த் பூஷன்

0

கடந்த வியாழன் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழலில் பா.ஜ.க ஆளும் சத்திஷ்கர் மாநிலத்தின் பங்கை வெளியிட்டுள்ளார். அதில் சத்திஷ்கர் மாநில முதல்வர் ராமன் சிங்கின் மகன் அபிஷேக் சிங், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்கு சர்விஸ் ஏஜென்டாக பணியாற்றியதாகவும் இதற்காக அவருக்கு அவரது பிரிட்டிஷ் விர்ஜின் தீவிகளில் உள்ள வங்கி கணக்கில் ஒப்பந்தத்தின் 30% பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கில் இது குறித்து குறிப்பிட்ட அவர், UPA அரசின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தம் மிகவும் சந்தேகத்திற்குரியது என்றும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இன்னும், எங்காவது ஒரு நிறுவனத்தின் பெயரையும், ஹெலிகாப்டரின் மாடல் எண்ணையும் குறிப்பிட்டு சர்வதேச அளவில் டெண்டர் விடப்பட்டதை கேள்விப்பட்டதுண்டா என்றும் சத்திஷ்கர் மாநில அரசின் டெண்டர் இத்தகையது தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூஷன் வெளியிட்டுள்ள செய்தியின் படி 2007 ஆம் ஆண்டு சத்திஷ்கரின் பா.ஜ.க அரசு A-109 ஹெலிகாப்டரை இத்தாலிய நிறுவனம் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் இடம் இருந்து வாங்கியுள்ளது. இது 2006 அவ்வரசினால் விடப்பட்ட டெண்டரை அடுத்து நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த ஹெலிகாப்டரை 5.5 மில்லியன் டாலர்களுக்கு வாங்க முடிவு செய்தது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் தங்களின் ஹாங்காங் கிளையான ஷார்க் ஒசீயன் நிறுவனத்திடம் இருந்து அதனை பெற அறிவுறுத்தியது என்றும் ஆனால் இந்த ஒப்பந்தம் 6.1 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு முடிவு செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதே ரக ஹெலிகாப்டர் 2006 இல் 5.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல்களை தான் பனாமா பேப்பர்களில் வெளியான தகவல்களை ஆராயும் போது கண்டறிந்ததாக பிரஷாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் முடிவடைந்ததும் ராமன் சிங்கின் மகன் அபிஷேக் சிங்கின் பிரிட்டிஷ் விர்ஜின் தீவிகளில் உள்ள நிறுவனமான Quest Heights Limited நிறுவன கணக்கில் Shark Ocean நிறுவனத்தால் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிறுவனம் அபிஷாக் சிங் என்ற பெயரில் இருப்பதாகவும் அதில் அபிஷாக் என்று இருப்பது எழுத்து பிழை தான் என்றும் ஆனால் அவரது முகவரி சத்திஷ்கர் முதல்வர் ராமன் சிங்கின் முகவரி என்றும் அந்நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரராக அபிஷேக் சிங் உள்ளார் என்றும் இரண்டு நிறுவனங்களும் பண பணிமாற்றத்திற்கு UCB வங்கியை பயன்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.