அக்லாக்கின் குடும்பம் பசுவை கொன்றதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை: விசாரணை அறிக்கை

0

மாட்டிறைச்சி உண்டார் என்று கூறி அக்லாக் கொலை செய்யப்பட்டு சரியாக ஒரு வருடம் ஆகிறது. அக்லாக்கின் கொலைக்கு நீதி கிடைத்ததோ இல்லையோ அக்லாக்கின் குடும்பத்தினர் இன்றளவும் அலைக்கழிக்கப் படுகின்றனர். அக்லாக்கின் குடும்பம் மீது மூன்று மாதங்கள் முன் பசு வதை சட்டத்தின் கீழ் உத்திர பிரதேச அரசு வழக்கு பதிவு செய்திருந்தது.

சூரஜ்பால் என்ற ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது புகாரின் படி கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி  பிரேம் சிங் என்ற ஒருவர் அக்லாக்கின் சகோதரர் வீட்டில் மாட்டின் அலறலை கேட்டதாகவும், அங்கே அக்லாக் அவரது தாய் அஸ்கரி, அவர் மனைவி இக்ரமன், அவரது மகன் தானிஷ், மற்றும் அவரது மகள் சாயாஸ்தா ஆகியோர் கன்று ஒன்றை தரையில் பிடித்து வைத்திருந்ததாகவும் அக்லாக்கின் சகோதரர் ஜான் முஹம்மத் அந்த கன்றை கத்தியால் அருத்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் காவல்துறையினர் இது தொடர்பான சுர்ஜபாலின் வாக்குமூலத்தையும் பெற்றது.
இவ்வழக்கில் ஜூலை மாதம் அக்லாக்கின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் அவரது சகோதரர் மற்றும் அவரது மருமகள் மீதும் பசுவதை தடைச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகள் அக்லாக்கோ அல்லது அவரது குடும்பத்தினரோ பசுவை கொன்றார்கள் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளனர்.

இரண்டு மாதங்களாக இந்த வழக்கை விசாரித்த உத்திர பிரதேச காவல்துறைக்கு அக்லாக்கின் குடும்பம் பசுவை கொன்றது என்பதை நிரூபிக்க எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இவ்வழக்கை முடித்து அதற்கான அறிக்கையை சுராஜ்பூர் நீதிமன்றத்தில் அதிகாரிகள் சமர்ப்பிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வழக்கு தொடர்பாக விசாரித்த அதிகாரிகள் பல முறை அக்லாக்கின் கிராமத்திற்கு சென்றும் கன்று கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இடத்தை பார்வையிட்டும் இந்த புகாரை மெய்ப்படுத்தும் வகையில் எந்த ஒரு தடயங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் தடவியல் வல்லுனர்கள் பசு கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் உள்ள மணலின் மாதிரிகளை எடுத்து சோதித்த போதும் அந்த இடம் முழுவதிலும் பசுவின் இரத்தம் இருந்ததற்கான எந்த ஒரு தடயமும் இல்லை என்று கூறியுள்ளனர்.

அப்பகுதி காவல்துறை அதிகாரியான அனுராக் சிங், அந்த இடத்தில் பசுவை கொல்ல பயன்படுத்திய கத்தியோ அலல்து எந்த ஒரு ஆதாரங்களோ இல்லை என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், “இங்கு பசு கொல்லப்பட்டதற்கான ஒரு சிறு ஆதாரம் கூட இல்லை. அப்படியான ஒரு ஆதாரம் கிடைத்திருந்தால் கூட இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்போம்” என்று கூறியுள்ளார்.

அக்லாக் குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட 1955 பசுவதை தடை சட்டத்தின் கீழ் ஒருவர் மீது குற்றம் சுமத்த, பசுவை கொல்ல பயன்படுத்தப்பட்ட கத்தி, பசுவின் இரத்தம், அதன் இறைச்சி ஆகியவற்றை காவல்துறை கைப்பற்றியிருக்க வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை இதில் குறிப்பிடப்பட்ட எதுவுமே இல்லை என்று அனுராக் சிங் கூறியுள்ளார்.

மேலும் புகாரளித்தவர்களின் புகார்களில் மிகப்பெரிய முரண்பாடுகள் உள்ளது என்றும் ஆனால் அதை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த தான் விரும்பவில்லை என்றும் அது விசாரணை முடிவு அறிக்கையில் நீதிமன்றத்திடம் அது சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தங்கள் மீதான இந்த பசுவதை தடைச்சட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அக்லாக்கின் குடும்பம் அலஹாபாத் நீதிமன்றத்தை நாடியிருந்தது. மேலும் தங்கள் மீது பசு வதை தடைச் சட்டத்தின் கீழ் பொய் வழக்கு பதிவு செய்வது அக்லாக் கொலை வழக்கை இல்லாமல் ஆக்குவதற்கும் தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும் தான் என்று அக்லாக்கின் குடும்பத்தினர் கூரியிருந்தனர். இதனை அடுத்து இவ்வழக்கின் முடிவு வரும் வரை அவர்களை கைது செய்வதை நீதிமன்றம் தடை செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

Comments are closed.