அக்லாக் கொலை வழக்கை விசாரித்த காவல்துறை ஆய்வாளர் இந்துத்வா தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை

0

அக்லாக் கொலை வழக்கை விசாரித்த காவல்துறை ஆய்வாளர் இந்துத்வா தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை

உத்திர பிரதேச மாநிலம் புலந்த்சர் பகுதியில் டிசம்பர் ஆம் தேதி பசு ஒன்று கொல்லப்பட்டதாக வதந்த பரப்பி வன்முறையில் ஈடுபட்டவர்கள் காவல்துறை ஆய்வாளர் சுபோத் குமார் என்பவரை தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இவர் மாட்டிறைச்சி உண்டார் என்று குற்றம்சாட்டி கொலை செய்யப்பட்ட முஹம்மத் அக்லாக் கொலை வழக்கை விசாரித்து வந்த அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. அக்லாக் கொலை செய்யப்பட்ட போது அப்பகுதிக்கு முதலில் சென்று விசாரணை நடத்தியதும் இவர் தான்.

மாகாவ் கிராமத்தின் அருகே உள்ள காடு ஒன்றில் இறந்த பசுவின் உடல் கிடப்பதாக பரப்பட்ட வதந்தியை அடுத்து அப்பகுதியில் பிரச்சனை எழுந்துள்ளது. இந்து அமைப்பு பலவற்றை சேர்ந்தவர்கள் முன்னின்று வன்முறை கும்பலை திரட்டி இறந்த பசுவின் உடலை சிங்க்ராவதி காவல் சோதனை நிலையதின் முன் வைத்துள்ளனர்.

இது குறித்து கூடுதல் DGP ஆனந்த் குமார் கூறுகையில், “காலை இறந்த பசுவின் உடல் ஒன்று கிராமதிற்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் கிடந்துள்ளது. இதனை அடுத்து வலதுசாரி இந்து அமைப்புகள் இதனை குறிப்பிட்ட சமூகத்தார் தான் செய்துள்ளனர் என்று கூறி சம்பவ இடத்தில் கூடி விட்டனர்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வன்முறை கும்பல் காவல்துறைக்கு எதிராக கோஷம் எழுப்பியும், புலந்த்சாகர் மற்றும் கார்க் இடையேயான நெடுஞ்சாலையை மறித்தும் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த கும்பல் காவல்துறைக்கு எதிராக வன்முறையில் ஈடுபட கூட்டத்தை கலைக்க காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. ஆனால் காவல்துறையின் கட்டுக்கு அடங்காமல் சென்ற வன்முறையாளர்கள் காவல்துறை சோதனை சாவடி, பல இரு சக்கர வாகனங்கள் மற்றும் காவல்துறை ரோந்து வாகனங்களை தீயிட்டு கொழுத்தியுள்ளது.

இந்த வன்முறையில் காவல்துறை ஆய்வாளர் சுபோத் குமார் சிங் மீது கலவரக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவரது இடது கண்ணிமைக்கு அருகில் குண்டு பாய்ந்தது. இவருடன் கலவரத்தில் ஈடுபட்ட 18 வயது (22 வயது என்றும் கூறப்படுகிறது) சுமித் என்பவருக்கும் துப்பாக்கிச்சூடு காயம் ஏற்பட்டது. இது தவிர பல காவலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மீரட்டில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

வலதுசாரி இந்துத்வவாதிகளின் இந்த கலவரத்தை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த கலவரத்தில் பசு பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட சுபோத் குமார் கடந்த 2015 அக்லாக் கொலை வழக்கை விசாரித்து வந்தவர். இவர் பின்னர் வாரணாசிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அக்லாக் கொலை வழக்கில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டதில் சுபோத் குமாருக்கு முக்கிய பங்கு உள்ளது என்று அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாத்ரி அக்லாக் கொலை வழக்கு தொடர்பான விசாரணை இன்னும் துவக்கப்படாமல் உள்ளது. இந்த கொலையில் குற்றம் சுமத்தப்பட்ட 18 நபர்களும் தற்போது பிணையில் உள்ளனர். இந்நிலையில் இவரது மரணம் தாத்ரி வழக்கு விசாரணையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.

கொல்லப்பட்ட காவல்துறை ஆய்வாளரின் சகோதரி, சுபித் குமார் கொலை செய்யப்பட்டது ஒரு சதிச் செயல் என்று தெரிவித்துள்ளார். அவர் தாத்ரி அக்லாக் படுகொலை விசாரித்தவர். அதனால் தான் அவர் கொல்லப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் சுபோத் குமாரை வீரமரணம் அடைந்தவர் என்று அறிவித்து அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தங்களுக்கு பணம் எதுவும் தேவையில்லை என்றும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பசு பசு பசு என்று மட்டுமே கூறிக்கொண்டு இருப்பவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் சுபோத் குமார் கொலை வழக்கு தொடர்பாக பாஜக வின் இளைஞர் பிரிவு தலைவர் சிகர் அகர்வால், பஜ்ரங்தள் அமைப்பின் மாவட்ட தலைவர் யோகேஷ் ராஜ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் உபேந்திர ராகவ் உட்பட பல வலது சாரி இந்து அமைப்பு தலைவர்களின் பெயர்கள் முக்கிய குற்றவாளிகளாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதில் பசுவதை தொடர்பான புகாரில் முதன்மை புகார்தாரர் என்று ராஜின் பெயர் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் தான் காவல்துறைக்கு எதிராக மக்களை திரட்டி கலவரம் செய்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுவதை என்று கூறி போராட்டம் நடத்திய பலர் காவல்துறை சம்பவ இடத்திற்கு செல்லும் முன்னரே உருட்டுக் கடைகள், கூர்மையான ஆயுதங்கள், கைத்துப்பாக்கிகள் ஆகிய ஆயுதங்களை வைத்திருந்தனர் என்று தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர் சுபோத் குமாரை கலவரக்காரர்கள் கற்களைக் கொண்டு தலையில் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமுற்ற அவரை அவரது ஓட்டுனர் அங்கிருந்து காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்று வழிமறித்த அந்த வன்முறை கும்பல் அவரை தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளது. இது குறித்து அந்த காவல்துறை ஓட்டுனர் கூறுகையில், “அவர்கள் எங்களை மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்கவில்லை. அவனை சூடு அவனை சூடு என்று கத்திக்கொண்டே எங்களை விரட்டினர். நான் என் உயிரைக் காப்பாற்ற அங்கிருந்து ஓடிவிட்டேன். அந்த கும்பல் காவல்துறை ஜீப் அருகே சென்றதும் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாதுஎன்று கூறியுள்ளார். இந்த கும்பல் காவல்துறை அதிகாரியின் சர்வீஸ் துப்பாக்கி மற்றும் மூன்று அலைபேசிகளை திருடிச் சென்றதாகவும் தெரிகிறது.

சுபோத் குமாரை துரத்திய கும்பல் தொடர்ச்கியாக காவல்துறையினர் மீது துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே வந்ததாக தெரிகிறது. சுபோத் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி சுபோத் குமார் மீது துப்பாக்கிச்சூடு காயத்துடன், பல கூர்மையான மற்றும் கடினமான ஆயுதங்களால் தாக்கப்பட்ட காயங்களும் உள்ளது தெரியவந்துள்ளது.

மொத்தத்தில் இந்த வன்முறை தொடர்பாக 80 நபர்கள் மீது கலவரம் செய்தது , காவல்துறை அதிகாரி மற்றும் மற்றொரு நபரை கொலை செய்தது முதலிய குற்றம் தொடர்பாக இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவுகள், 147,148, 149, 332, 353, 341, 302, 307, 436 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 27 நபர்களின் பெயர்களை காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் 50 இல் இருந்து 60 நபர்களை குற்றவாளிகள் பட்டியலில் சேர்ந்துள்ளது. இதுவரை இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை நான்கு பேரை கைது செய்துள்ளது என்று கூறப்படுகிறது. முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்களில் மீதி நபர்களை கைது செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மூத்த காவல்துறை கண்காணிபாளர் கிருஷ்ணா B.சிங் தெரிவித்துள்ளார்.

Comments are closed.