அக்லாக் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளர் வேலை!

0

பசு குண்டர்களால் தாத்ரியில் படுகொலை செய்யப்பட்ட அக்லாக் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நேஷனல் தெர்மல் பவர் கார்பரேஷன் என்ற பொதுத்துறை நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளர் வேலை வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28, 2015 அன்று முகம்மது அக்லாக் மற்றும் அவரின் மகன் தானிஷ் ஆகியோரை பசுவை அறுத்து அதன் மாமிசத்தை சாப்பிட்டதாகக் கூறி பசு குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அக்லாக் மரணம் அடைந்தார், தானிஷ் படுகாயம் அடைந்தார்.
இந்த வழக்கில் 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த 18 நபர்களையும் வெளியே கொண்டு வருவதாக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க. தலைவர்கள் கூறினர். அதேபோல் இப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் கூட சிறையில் இல்லை. 17 நபர்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியே உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபரான ரவின் சிசோடியா உடல் நலக்குறைவு காரணமாக சிறையிலேயே மரணம் அடைந்தார். அவரின் உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டதும் மத்திய கலாசார துறை அமைச்சர் மகேஷ் சர்மா அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. அத்துடன் ஆரம்ப பள்ளியில் சிசோடியாவின் மனைவிக்கு வேலை வழங்கப்படும் என்றும் எட்டு இலட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் உறுதி கொடுக்கப்பட்டது.
தற்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 நபர்களுக்கு நேஷனல் தெர்மல் பவர் கார்பரேஷனில் ஒப்பந்த தொழிலாளர் பணி வழங்கப்பட்டுள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. நிர்வாகம் மற்றும் பா.ஜ.க. தலைவர் தேஜ்பால் நகர் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து இவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கு தாங்கள் வேலை கொடுத்துள்ளதாகவும் இதற்கும் அக்லாக் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நிர்வாகம் கூறியுள்ளது.
‘தங்களின் குடும்பத்தை பாதுகாக்க ஒருவருக்கு வேலை கிடைப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் படுகொலை நடந்து இரண்டு வருடங்கள் கழித்து குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாததுதான் பிரச்சனையாக உள்ளது’ என்று அக்லாக்கின் மகன் முகம்மது ஜான் கூறியுள்ளார்.

Comments are closed.