அக்ஷர்தம் தாக்குதல் வழக்கில் விடுவிக்கப்பட்டவர் பசு வதை வழக்கில் மீண்டும் கைது

0

2002  அக்ஷர்தம் கோவில் தாக்குதல் வழக்கில் சாந்த் கான் என்ற ஷான் கான் என்பவர் 11 வருடம் சிறையில் அடைக்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவருக்கு மரண தண்டனையும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. 11  வருடம் சிறைவாசத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார் சாந்த் கான். சிறையில் இருந்து வெளியாகி இரண்டு ஆண்டுகளில் தற்போது இவரை பசுவதை வழக்கில் மீண்டும் சிறையில் அடைத்துள்ளது காவல்துறை.

காவல்துறை துணை ஆய்வாளர் ஷ்யாம் சிங் யாதவின் கூற்றுப்படி, அவர் வாகன சோதனையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது பீசல்புர் காவல்நிலைய பகுதியில் உள்ள நவாதியா சிடர்கஞ் பகுதியில் ஒரு வாகனத்தை சோதனைக்காக காவல்துறை நிறுத்தியுள்ளது. அந்த வாகனத்தில் 500 கிலோ மாட்டிறைச்சி இருந்ததாகவும் இதனை அடுத்து மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஷான் கான் என்கிற சாந்த் கான், அதீக், மற்றும் ஃபைசான் என்பவர்கள் பரேலியில் உள்ள காகர்டோலா பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் மீது பசுவதை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இவர்கள் சென்ற வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சாந்த் கானை கைது செய்துள்ள காவல்துறை, அவருக்கு ஷான் கான் என்கிற மற்றொரு பெயரும் இருப்பதாக தங்களுக்கு தெரியாது என்று கூறுகிறது. ஆனால் சாந்த் கானின் குடும்பத்தினரோ சாந்த் கானை காவல்துறையினர் வேண்டுமென்றே பொய்யான வழக்கில் சிக்க வைத்துள்ளனர் என்று கூரியுள்ளனர்.

2002 செப்டெம்பர் மாதம் 25 ஆம் தேதி இரண்டு தீவிரவாதிகள் அக்ஷர்தம் கோவில் வளாகத்தில் நுழைந்து 33 பேரை கொன்றனர். மேலும் இந்த தாக்குதலில் 86 பேர் காயமடைந்தனர். இதனை அடுத்து சாந்த் கானை 2003 செம்படம்பர் மாதம் 12  ஆம் நாள் காவல்துறை அக்ஷர்தம் கோவில் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தார் என்று கூறி கைது செய்தது. இவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை அகமதாபாத்திற்கு கொண்டு வந்ததாகவும் அவர்களை நகரம் முழுக்க சுற்றிக் காண்பித்ததாகவும், அவர்களுக்காக 40000ரூபாய்க்கு அம்பாசடர் கார் ஒன்றை வாங்கித் தந்ததாகவும் அதில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வைக்க ரகசிய அறையை செய்து கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கபப்ட்டன. இந்த குற்றச்சாட்டுகளை ஏற்ற POTA நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை அளித்திருந்தது.

பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் சாந்த் கானிற்கு எதிராக போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் அரசுத் தரப்பு வழங்கும் ஆதாரங்கள் மற்ற சாட்சியங்களோடு முரண்படுகிறது என்றும் விசாரணையின் போது பெறப்பட்ட வாக்குமூலங்களும் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களின் சாட்சியங்களோடு முரண்படுகிறது என்றும் அதனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி இவரை 2014 ஆம் ஆண்டு விடுதலை செய்தது.

சிறையில் இருந்து வெளியேறிய சாந்த் கான் தனியார் டாக்சியின் ஓட்டுனராக பணிபுரிந்து வந்ததாக சாந்த் கானின் சகோதரர் தாகிர் கான் கூறியுள்ளார். ஜூன் மாதம் இரண்டு பேரை சாந்த் கான் பிலிபிட்டிற்கு தந்து டாக்சியில் சவாரி ஏற்றிச் சென்றுள்ளார். அவர்களை இறக்கிவிட்டதும் சாந்த் கான் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் செல்லும் வழியில் ஒரு காவலர் அவரை நிறுத்தியுள்ளார். பின்னர் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அவர் மீது பசு வதை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று தாகிர் கான் கூறியுள்ளார்.

இன்னும் சாந்த் கானின் மனைவி நக்மா பர்வீன், காவல்துறை தங்களை மிரட்டி வருவதாக கூறியுள்ளார். சமீபத்தில் பிலிபிட்டில் இருந்து வந்த ஒரு காவல்துறை குழு ஒன்று அவர்கள் வீட்டை தாக்கப் போவதாக மிரட்டியதாகவும் காவல்துறையினரின் அடிக்கடி வருகையினால் தங்களது இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.