அசாராம் பாபு வழக்கு: சாட்சிகள் மீது தொடரும் தாக்குதல்

0

சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரின் மகன் நாராயண் சாய் ஆகியோருக்கு எதிரான சூரத் பாலியல் வழக்கில் சாட்சியான மஹேந்திர பாவ்லா நேற்று பானிபட்டில் சுடப்பட்டார். அசாராம் பாபு வழக்கில் தாக்கப்படும் ஆறாவது சாட்சி மஹேந்திரா பாவ்லா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மஹேந்திரா மீது துப்பாக்கியால் சுட்டனர். மஹேந்திராவுக்கு பாதுகாப்பிற்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரி அவருக்கு பாதுகாப்பு அளிக்காமல் சென்றதை தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்னர்தான் மஹேந்திராவுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.
மஹேந்திராவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவரின் உடல் நலத்தில் முன்னேற்றம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு மஹேந்திராவை தவிர வேறு சாட்சிகள் இல்லை என்றும் அவர் கொடுக்கும் தகவல்களில் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மஹேந்திராவுக்கு பாதுகாப்பு வழங்க தவறிய கான்ஸ்டபிள் பரத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது மூன்று காவல்துறையினர் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும் ஐ.ஜி.ஸ்ரீகாந்த் ஜாதவ் தெரிவித்தார்.
சூரத் பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் அசாராம் பாபு மற்றும் அவரின் மகன் நாராயண் சாய் ஆகியோர் டிசம்பர் 2013ல் கைது செய்யப்பட்டனர். சென்ற வருடம் ஜூன் மாதம் மற்றொரு சாட்சியான அம்ருத் பிரஜாபதி குஜராத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜனவரி 11 அன்று வழக்கின் முக்கிய சாட்சியான அகில் குப்தா முஸஃபர்நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். பிப்ரவரி 13 அன்று மற்றொரு சாட்சியான ராகுல் சச்சன் ஜோத்பூர் நீதிமன்றத்தில் வைத்தே தாக்கப்பட்டார்.
சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட பிறகும் மஹேந்திர பாவ்லா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.