அசாராம் பாபு வழக்கு: தொடரும் மிரட்டல்கள்

0

கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாராம் பாபு வழக்கில் சாட்சிகள் மிரட்டப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் 2013ஆம் ஆண்டு 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாராம் பாபு மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அசாராம் பாபு சிறையில் அடைக்கப்பட்டார். இது தவிர, இன்னும் சில வழக்குகளும் அசாராம் பாபு மற்றும் அவர் மகன் நாராயண் சாய் ஆகியோர் மீதுள்ளது.
இந்த பெண்ணின் தந்தை மார்ச் 19 அன்று தனக்கு தொலைபேசி வழியாக மிரட்டல் விடப்பட்டதாக காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். அசாராம் பாபு மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் தன்னை கொலை செய்துவிடுவதாக தொலைபேசியில் பேசிய நபர் மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அப்பெண்ணின் தந்தைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.
அசாராம் பாபு வழக்கில் முக்கிய சாட்சிகள் ஒவ்வொருவராக வௌ;வேறு இடங்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பாபுவின் உதவியாளர் அம்ருத் பிரஜாபதி ஜூன் 2014லிலும் அவரின் உதவியாளர் மற்றும் சமையல்காரரான அகில் குப்தா ஜனவரி 2015லிலும் மற்றொரு முக்கிய சாட்சியான கிர்பால் சிங் ஜூலை 10, 2015லிலும் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலைகளை செய்ததாக கார்த்திக் ஹல்தார் என்பவரை மார்ச் 13 அன்று குஜராத் மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினர் கைது செய்துள்ளனர். இப்படுகொலைகள் தவிர இன்னும் நான்கு சாட்சிகளை படுகொலை செய்ய முயற்சித்ததாகவும் கார்த்திக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் கார்த்திக் மற்றும் சிலர் அசாராம் பாபுவை ஜோத்பூர் சிறையில் சந்தித்ததாக வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.