அசாராம் பாபு வழக்கு: மற்றுமொரு சாட்சி மீது தாக்குதல்

0

தொடர்கதையாக மாறி வரும் அசாராம் பாபு வழக்கு சாட்சிகள் தாக்குதலில் மற்றுமொரு சாட்சி ஜுலை 10 அன்று தாக்கப்பட்டுள்ளார். கிர்பால் சிங் என்ற 35 வயதான அந்த சாட்சி உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் வைத்து சுடப்பட்டார்.
இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த கிர்பால் சிங் மீது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கியால் சுட்டவர், அசாராம் பாபுவிற்கு எதிராக சாட்சி சொல்லக் கூடாது என்று எச்சரித்து விட்டும் சென்றுள்ளார்.
முதுகுப்பகுதியில் பாய்ந்த குண்டு அங்கேயே உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் வைத்து சூரத்தை சேர்ந்த இரு சகோதரிகளை ஆகஸ்ட் 2013ல் பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாராம் பாபு மற்றும் அவரின் மகன் நாராணய் சாய் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இருவரும் டிசம்பர் 2013ல் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் முக்கிய சாட்சியான கிர்பால் சிங் மூன்று மாதங்களுக்கு முன்தான் சாட்சியம் அளித்தார். அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை மிரட்டுவதாக கிர்பால் சிங் தன்னிடம் கூறியதாக அந்த பெண்களின் தந்தை தெரிவித்தார்.
இந்த வழக்கில் இதுவரை ஒன்பது சாட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதும் அவர்களில் இருவர் மரணமடைந்துள்ளதும் கவனிக்கதக்கது.

Comments are closed.