அச்சத்தின் உச்சத்தில் இஸ்ரேல்

0

 – ரியாஸ்
ஃபலஸ்தீனின் ஹெப்ரானில் உள்ள ஒரு வீதியின் பெயர் ஷூஹதா (தியாகி) தெரு. உயிர் தியாகிகளை அதிகம் கொண்ட ஒரு பிரதேசத்தில் இத்தகைய ஒரு பெயர் இருப்பதில் எத்தகைய ஆச்சர்யமும் இல்லை. செப்டம்பர் 22, காலை 7.45 மணியளவில் அத்தெருவில் சென்ற 18 வயதான ஹதீல் ஹஷ்லமூன் தானும் அன்றைய தினம் ஷூஹதாகளின் பட்டியலில் இடம்பெறுவோம் என்பதை அறிந்திருந்தாரா என்பதை நாம் அறியவில்லை.
ஹெப்ரான் நகரின் ஃபலஸ்தீனியர்கள் தினமும் அத்தெருவில் உள்ள இஸ்ரேலிய சோதனை சாவடியை கடந்துதான் செல்ல வேண்டும். ஹெப்ரானின் ஒரு பகுதி ஃபலஸ்தீனியர்களின் கட்டுப்பாட்டிலும் மற்றொரு பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலும் இருப்பதால் ஃபலஸ்தீனியர்களுக்கு இப்படியொரு சோதனை. பள்ளி, வேலை, மருத்துவம் என எதற்கும் சோதனை சாவடிகளை கடந்துதான் செல்ல வேண்டும். பல நாட்கள் பல மணிநேரங்களை இந்த சோதனை சாவடிகளில் ஃபலஸ்தீனியர்கள் செலவழிக்க வேண்டும். அத்துடன் இஸ்ரேலிய படையினரின் மிரட்டல்களையும் ஏச்சுபேச்சுகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.
அன்றைய தினமும் ஹதீல் வழக்கம்போல்தான் சென்றார். உடலை முழுமையாக மறைத்திருந்த ஹதீல் தனது முகத்தையும் மறைத்திருந்தார். சோதனை சாவடியில் நின்றிருந்த இஸ்ரேலிய படையினர் ஹதீலை முகத்திரையை விலக்குமாறு கூறினர். அவரின் கைப்பையையும் சோதனை செய்ய முற்பட்டனர். தனது கைப்பையை ஹதீல் கொடுத்த போதும் இஸ்ரேலிய படையினர் அவர் மீது வசைமாறி பொழிந்தனர். அவர்கள் ஹீப்ரு மொழியில் பேசினர். மொழி அறியாத ஹதீல் கலக்கமுற்றார்.
அப்போது அங்கு வந்த மற்றொரு ஃபலஸ்தீனியரான ஃபவாத் அபூ ஈஸா என்பவர், நிலைமையை உணர்ந்து ஹதீலுக்கு உதவ முற்பட்டார். ஆனால் அவரை தள்ளிய இஸ்ரேலிய படையினர் திடீரென்று; ஹதீலை தங்கள் தோட்டாக்களால் துவம்சம் செய்தனர். பத்து முறை இஸ்ரேலியர்கள் சுட்டதில் ஹதீலின் நெஞ்சு பகுதி, வயிறு, கால் என தோட்டாகள் அவரை துளைத்தன. இதன் பின்னர் நடந்தது இதைவிட கொடூரமானது. ஹதீலுக்கு உதவ முற்பட்ட மருத்துவர்களை இஸ்ரேலிய படையினர் தடுத்து நிறுத்தினர். வீதியிலேயே முப்பது நிமிடங்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் ஹதீல். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தன்னுடைய வழக்கமான பொய் பிரச்சாரத்தை ஆரம்பித்தது இஸ்ரேல். ஹதீல் கையில் கத்தியுடன் இருந்ததாகவும் இஸ்ரேலிய படையினரை தாக்க முற்பட்டதாகவும் அதனால்தான் தாங்கள் தற்காப்பிற்காக சுட்டனர் என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். ஆனால் இன்றைய நவீன உலகில் இந்த பொய்கள் எல்லாம் எட்டு நிமிடங்கள் கூட தாங்காது. இஸ்ரேலிய குடியிருப்புகளுக்கு எதிரான இளைஞர்கள் (Youth Against Settlements) என்ற அமைப்பினர் வெளியிட்ட புகைப்படங்கள் இஸ்ரேலியர்களின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டின.
இஸ்ரேலிய படையினரை தாக்குவதற்கு ஹதீல் எவ்வித முயற்சிகளையும் செய்யவில்லை என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். ஹதீலின் கைப்பையில் புத்தகங்கள்தான் இருந்தன என்று சிலர் தெரிவித்தனர். ஹதீலுக்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடையே இரும்பு தடுப்புகள் இருக்கும் போது அவர் எப்படி இராணுவத்தினரை தாக்க வந்தார்? பத்து முறை துப்பாக்கியால் சுட வேண்டிய அவசியம் என்ன? காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதை ஏன் தடுக்க வேண்டும்? எந்த கேள்விக்கும் இஸ்ரேலிடம் பதில் இல்லை.
ஹதீல் மீதான தாக்குதல் அப்பட்டமான படுகொலை என்று அம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. சோதனை சாவடியில் உள்ள கேமரா பதிவுகளை இஸ்ரேல் ஏன் வெளியிடவில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இச்சம்பவம் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் ஜெரூஸலம் நகரத்தின் மேயர் நிர் பர்காத், கற்களை எறியும் ஃபலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கான அனுமதியை காவல்துறையினருக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியுலகிற்கு இஸ்ரேல் ஒரு ஜாம்பவானாக காட்சி அளித்தாலும் உண்மையில் அங்குள்ள பெரும்பான்மையினர், குறிப்பாக இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் அதிக மன அழுத்தத்திலும் விரக்தியிலும் இருப்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரதமர் நேதன்யாகுவிற்கு சோதனை நடத்தப்பட்டால் அவரும் நிச்சயம் இவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை அறியலாம். ஃபலஸ்தீனியர்களின் இடைவிடாத போராட்டம் இஸ்ரேலியர்களை நிலைகுலைய வைக்கிறது. வெறும் கற்களை வைத்திருக்கும் ஃபலஸ்தீன சிறுவனை கண்டு கவச உடைகளை அணிந்து நவீன ஆயுதங்களை தரித்து நிற்கும் இஸ்ரேலிய இராணுவத்தினர் பயந்து ஓடும் காட்சிகளை கண்டு உலகமே அதிசயக்கிறது, இஸ்ரேலியர்களை எள்ளி நகையாடுகிறது.
விரக்தியின் விளிம்பிற்கு சென்றுள்ள இஸ்ரேலியர்கள் ஃபலஸ்தீனியர்கள் மீது அடக்குமுறைகளை வீசுகின்றனர். சோதனை சாவடிகளில் ஃபலஸ்தீனியர்களை காக்க வைப்பது, சிறுவர்கள் மீது நாய்களை ஏவுவது, ஹதீல் போன்றவர்களை படுகொலை செய்வது, அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் அத்துமீறுவது எல்லாம் இந்த விரக்தியின் வெளிப்பாடுதான். அச்சத்தின் பிடியில் நிற்கும் இஸ்ரேலியர்களை எல்லாமே பயமுறுத்துகின்றன.
சமீபத்தில் அல் அக்ஸா வளாகத்தில் இஸ்ரேலியர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் வரும் யூதர்கள் அல் அக்ஸாவை சேதப்படுத்துகின்றனர். அதன் புனிதத்தை கெடுக்கின்றனர். எதிர்த்து வரும் ஃபலஸ்தீனியர்களை இஸ்ரேலியர்கள் கடுமையாக தாக்குகின்றனர். பள்ளிவாசல் வளாகத்தில் முஸ்லிம் ஆண்களுக்கான அனுமதியை பெரும்பாலும் மறுப்பதால், பெண்களே போராட்டங்;களை நடத்துகின்றனர்.
பதினைந்து வருடங்களுக்கு முன்னர், செப்டம்பர் 2000ல், அல் அக்ஸா வளாகத்தில் அத்துமீறி நுழைந்தான் அப்போதைய எதிர்கட்சி தலைவன் ஏரியல் ஷரோன். இந்த அத்துமீறல் இரண்டாவது இன்திஃபாதா எனும் மக்கள் எழுச்சிக்கு வித்திட்டது. இஸ்ரேலின் தொடர் தோல்விகளுக்கு இந்த இன்திஃபாதா அடித்தளமிட்டது. காஸாவில் இருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேற்றம், தேர்தலில் ஹமாஸ் வெற்றி, கிலாத் ஷாலித் சிறைபிடிப்பு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனியர்கள் விடுதலை, ஏழு வருடங்களில் மூன்று பெரும் தாக்குதல்களை சந்தித்த போதும் தளராமல் நிற்கும் ஃபலஸ்தீனியர்கள், அதிகரித்து வரும் சர்வதேச நெருக்குதல்கள் என இஸ்ரேலுக்கு அடிமேல் அடி.
தற்போதும் தனது அத்துமீறல்கள் மூலம் தனது தோல்விகளுக்கான வாசல்களை இஸ்ரேல் திறந்துள்ளது. பதினெட்டு வயது மங்கை ஹதீல் போன்று ஏராளமான ஷூஹதாகள் இப்போராட்டத்தில் உரங்களாக இருப்பார்கள். இஸ்ரேல் வீழ்ச்சியின் இறுதி அத்தியாயத்தை காண அனைவரும் தயாராக இருங்கள்.

Comments are closed.