அடிமைத்தனத்திற்கு அறுதி இல்லையா?

0

அடிமைத்தனத்திற்கு அறுதி இல்லையா?

பழங்காலத்தில் நடைமுறையில் இருந்த வழக்கொழிந்துபோன ஒரு அநாகரீக கலாச்சாரமாகத்தான் அடிமைத்தனத்தை குறித்து சமகால சமூகம் பொதுவாக கருதுகிறது. “யாருமே அடிமைகளாக இருக்க மாட்டார்கள்: எல்லா விதமான அடிமைத்தனமும் அடிமை வியாபாரமும் அடியோடு ஒழிக்கப்படும்” என்று 1948ல் சர்வதேச மனித உரிமை மாநாட்டு பிரகடனம் கூறுகிறது.அடிமை வியாபாரத்தை ஒழித்ததற்கான நினைவு தினமாக வருடந்தோறும் ஆகஸ்டு 23  அன்று கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், பழங்கால அடிமைத்தனத்தின் அடையாளங்களான அடிமை விலங்குகளோ, சவுக்குகளோ, ஏலங்களோ இல்லையென்றாலும் அடிமைத்தனத்தின் புதிய பதிப்புகள் இப்போதும் உள்ளன என்பதை கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து வெளியான செய்தி எடுத்தியம்புகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிக்குப்பத்தில் நடராஜ் என்பவரிடம் 15 ஆண்டுகளாக 19 குழந்தைகள் உள்பட 28 பேர் தாங்கள் வாங்கிய 25 ஆயிரம் ரூபாய் கடனுக்காக கொத்தடிமைகளாக இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தாசில்தான் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்றனர். அவர்கள் சென்றபோது தங்களுக்கு சரிவர உணவு வழங்கவில்லை என்றும், குழந்தைகளுக்கு வெறும் தண்ணீரை மட்டுமே உணவாக கொடுக்கும் அவலம் நிலவுவதாகவும் வேதனையுடன் கண்ணீர் மல்க முறையிட்டனர். தொழிலார்களின் நிலையை அறிந்த அதிகாரிகள் 28 பேரையும் மீட்டனர்.

இது ஒரு தனித்த சம்பவமல்ல.உலகின் பல்வேறு பகுதிகளில் கோடிக்கணக்கானோர் இன்றும் அடிமைகளாக அல்லது அடிமை போன்ற நிலைமைகளில் வாழவோ வேலை செய்யவோ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்..கொத்தடிமை, சிறுமிகளை அடிமைகளைப் போல திருமணத்தில் தள்ளுவது, குழந்தை தொழிலாளர், விபச்சாரம் முதலானவை நவீனகால அடிமைத்தனத்தின் வடிவங்களாகும்.

ஆஸ்திரேலியாவை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பான “வாக் ஃப்ரீ” 2013ல் 162 நாடுகளில் நடத்திய ஆய்வில், உலகில் இப்போதும் 2.98 கோடி பேர் அடிமைகளாக இருப்பதாகவும் இவர்களில் பாதிபேர் இந்தியாவில் இருப்பதாகவும் தெரியவந்தது. இவர்களில் பெரும்பாலோர் தலித்துகளாகவோ, பழங்குடியினராகவோ அல்லது  சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருப்பர்.இந்தியாவில் வாழும் தலித்துகளில் 86 சதவீதம் பேர் நிலமில்லாதவர்கள்.தங்களுக்கு வேலை வழங்கும் முதலாளிகளை நம்பித்தான் இவர்களில் பெரும்பாலோர் வாழ்கின்றனர்.இது சுரண்டலுக்கு வழிவகுக்கிறது. வறுமையின் காரணமாக கடனாளிகளாக மாறும்போது எவ்வளவு தொகையை திருப்பி அடைத்தாலும் தீராத கடனில் சிக்கி இறுதியில் கொத்தடிமைகளாக மாறுகின்றனர்.

அடிமைகளாக வேலை செய்பவர்களில் 2 கோடியே 10 லட்சம் பேர் கட்31டாய தொழிலுக்காக நியமிக்கப்பட்டவர்கள் என்று சர்வதேச தொழில் அமைப்பின் புள்ளிவிபரங்கள் கூறுவதாக ‘வாக் ஃப்ரீ’யின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வீடுகளிலிருந்து கடத்திச் செல்லப்படுபவர்களும், விற்கப்படுபவர்களும் பின்னர் அடிமைகளைப்போல வேலை செய்கின்றனர்.

அடிமைத்தனம் என்பது சிலருக்கு ரகசியத்திலும் ரகசியமாக இருந்தாலும், அது இன்றும் அழியாமல் செழித்தோங்குகிறது.  சர்வதேச அமைப்புகள் மற்றும் தலைவர்களின் அடிமைத்தனத்திற்கு எதிரான அறிக்கைகள் எல்லாம் தண்ணீரில் எழுதப்பட்ட ஆவணங்களாகவே உள்ளன. தேசங்களிடம் ஆத்மார்த்த முயற்சிகள் இல்லாதவரை அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது என்பதெல்லாம் வெற்று கனவாகவே நீடிக்கும்.

Comments are closed.