அண்டை நாடுகளை பகைப்பதா வெளிநாட்டு கொள்கை?

0

 அ.செய்யது அலீ

வெளிநாட்டுப் பயணம்தான் நமது பிரதமரின் முக்கிய செயல்திட்டம். பிரதமராக பதவியேற்று குறுகிய காலத்திலேயே அதிக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த பிரதமர் என்ற சாதனையையும் அவர் தன்வசப்படுத்திக்கொண்டார். இரண்டாவது முறை அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது சர்வதேச தலைவர்கள், கார்ப்பரேட் நிறுவன தலைவர்களுடனான சந்திப்பை முடித்துவிட்டு மோடி நாடு திரும்பியுள்ளார். ஆனால், இந்த வெளிநாட்டு சுற்றுப்பயண கோலாகலத்திற்கு அப்பால் மோடி அரசின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும்போது முக்கியமான வெளிநாட்டு உறவுகளில் (Foreign relations) வெகு வேகமாக கீழே நோக்கிச் செல்வதை காணமுடியும். ஈவண்ட் மேனேஜ்மெண்ட் குழுக்களின் பின்னணியோடு வகுக்கப்படும் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளின் வெற்றி சர்வதேச உறவுகளில் நடைமுறைக்கும் வரும்போது தோல்வியாக பரிணமிப்பதையே காணமுடிகிறது. அண்டை நாடுகளை (Neighboring countries) இந்தியாவுக்கு பாதுகாப்பற்றதாக மாறிக்கொண்டிருப்பது அதன் வெளிப்படையான ஆதாரம்.

மோடி, தான் பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியை முக்கிய எதிரி நாடான பாகிஸ்தானின் பிரதமருக்கு அழைப்பு விடுத்து கம்பீரமாக்கினார். கிடைத்த வாய்ப்பையும் நவாஸ் ஷெரீஃப் நழுவ விட விரும்பவில்லை. ஆனால், பரஸ்பரம் பரிசுகளை பரிமாறி துவங்கிய உறவு அவ நம்பிக்கையின் பால் வழுக்கி விழுவதற்கு அதிக காலம் தேவைப்படவில்லை. தற்போது எல்லையில் நிலவும் மோதல் சூழல் முந்தைய காலங்களை விட பாகிஸ்தானுடன் இறுகலான போக்கை தீவிரப்படுத்தியுள்ளது. இறுதியாக பாகிஸ்தான் தன் சார்பு நியாயத்தை எழுப்ப ஐ.நா அவையை பயன்படுத்தியதுகூட சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான். இந்தியாவின் அண்டை நாடுகளின் அரசியலை நிர்ணயிப்பதில் முக்கிய காரணியாக திகழும் பிராந்தியத்தின் பலம் பொருந்திய நாடான சீனாவுடனான நமது நட்பிலும் சுவையில்லை. எச்சரிக்கையுடனேயே நாட்கள் கடந்து செல்கின்றன.

இலங்கை, மாலத்தீவுடனான உறவிலும் பழைய நறுமணம் இல்லை. வங்காளதேச எல்லை தொடர்பான ஒப்பந்தம் ஓரளவு ஆறுதலை அளித்தாலும், இந்தியாவின் உறவு நாடாக கருதப்படும் அடுத்துள்ள நேபாளத்துடனான விரிசல் எல்லை பிரச்சனையை விட மோசமடைந்துள்ளது. பிரதமராக பதவியேற்ற பிறகு இரண்டு முறை நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் செய்த மோடி, பல நூறு கோடிகளை நிதியுதவியாக வாக்குறுதி அளித்தார். ஆனால், காட்மாண்டுவில் மோடியின் உருவ பொம்மையை தீ வைத்து எரிக்கும் இந்தியா எதிர்ப்பு சூழல் தீவிரமடைந்துள்ளது. நேபாளத்தின் அரசியல் சாசன உருவாக்கம் தொடர்பாக இந்தியாவின் தலையீடுதான் அந்நாட்டு மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்து பெரும்பான்மை நாடான நேபாளத்தை ஏழு ஃபெடரல் மாகாணங்களாக பிரித்து மதச் சார்பற்ற குடியரசு நாடாக பிரகடனப்படுத்தும் அரசியல் சாசனத்தை உலகின் பெரும்பான்மையான நாடுகளெல்லாம் வரவேற்றபோது இந்தியா மட்டும் எதிர்ப்பதன் நோக்கம் நேபாளத்திற்கு புரியவில்லை. இந்தியாவுடன் 1,751 கிலோமீட்டர் திறந்த எல்லையை பங்கிடும் நேபாளத்தின் எல்லைப் பிரதேசமான தராய் மாவட்டத்தில் வசிக்கும் மாதேசி, தாரு உள்ளிட்ட சமூகத்தினர் இந்தியாவுடன் இனரீதியான உறவை பேணுபவர்கள்.

மாகாணங்களை பிரித்ததால் ஒடுக்கப்படுவோம் என்று அஞ்சிய இவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பாமல், சரக்கு லாரிகளை எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு பதிலடியாக தலைநகரில் மட்டுமல்ல, நேபாளத்தின் இதர பகுதிகளிலும் சமூக ஊடகங்களில்  ‘பேக் ஆஃப் இந்தியா(backoff india)’ என்ற பிரச்சாரத்தை நேபாளிகள் முன்னெடுக்கின்றனர். நேபாளம் மதச் சார்பற்ற நாடாக மாறுவதை இந்தியாவை ஆளும் சங்க்பரிவார பின்னணி கொண்ட அரசுக்கு ஜீரணிக்க இயலாது என்பதை நேபாள மக்கள் புரிந்துகொண்டனர்.

வங்காளதேசத்தில் தீவிர மதச் சார்பற்ற கொள்கையை ஆதரிக்கும் மோடி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு நேபாளத்தில் மதச் சார்பற்ற கொள்கை என்றவுடன் கசக்கிறது. இந்தியாவில் இருந்து பெட்ரோலியம் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை நேபாளத்திற்கு கொண்டு செல்ல விதித்த தடைக்கு பின்னால் மத்திய அரசின் வெளிப்படையான ஆதரவு உண்டு என்று அவர்கள் கருதுகின்றனர். எரிபொருள் இல்லாவிட்டால் மக்களின் அன்றாட வாழ்க்கை துயரத்தில் ஆழ்ந்துவிடும். தீபாவளியும், தசாரவும் நெருங்கும் வேளையில் மாற்று வழி தேடுவதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்பதால் சீனாவின் உதவியை நாடவேண்டிய சூழல் நேபாளத்திற்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை மக்கள் பிரதிநிதிகள் அவை அங்கீகரித்த அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று கட்டளையிடும் இந்திய அரசின் பெரியண்ணன் மனநிலையை அனுமதிக்கமாட்டோம் என்பது நேபாளிகளின் நிலைப்பாடு.

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் எல்லையில் புகைந்தால் என்னவாகும்? என்பது மோடி அரசுக்கு தெரியாதது அல்ல. மறுபுறம் பாகிஸ்தான் எந்தவொரு வாய்ப்பையும் நழுவ விடுவதற்கு தயாரில்லை. அண்டை நாடுகளில் புகைந்து கொண்டிருக்கும் நெருப்பு எல்லைப்புறங்களில் பரவி அமைதியை கெடுப்பதை தடுக்கும் ராஜதந்திரங்கள் எதுவும் மோடியின் கைவசம் இல்லை என்பது பாகிஸ்தானுடனான உறவில் ஏற்பட்ட வீழ்ச்சிகள் நிரூபித்துள்ளன. பெரியண்ணன் ஆட்டத்தால் நெருக்கமான அண்டை நாடுகளையும் பகை நாடுகளின் பட்டியலில் சேர்த்ததுதான் மிச்சம். அணி சேரா நாடுகள், சார்க் கூட்டமைப்புகளை உருவாக்கிய இந்தியாவை, அண்டை நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தும் துரதிர்ஷ்டவசமான சூழலை நோக்கி சங்க்பரிவார பின்னணி கொண்ட பா.ஜ.க அரசு தள்ளியுள்ளது என்பதுதான் யதார்த்தம்.

Comments are closed.