அதித்யநாத் வெறுப்புப் பேச்சு வழக்கு: உத்திர பிரதேச அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

0

2007ஆம் ஆண்டு நடைபெற்ற கோரக்பூர் கலவரத்தில், வன்முறையை தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சுகளை பேசியதற்காக அப்போதைய பாஜக எம்.பி.யோகி அதித்யநாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது அதித்யநாத் உத்திர பிரதேச முதல்வரானதை அடுத்து அவர் மீதான வழக்குகளை உத்திர பிரதேச அரசு கைவிட்டது.

உத்திர பிரதேச அரசின் இந்த முடிவிற்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், முன்னர் நடைபெற்ற விசாரணையில் எந்த ஒரு தவறும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வழக்கை ரத்து செய்தது.

இந்த விசாரணையின் போது, மனுதாரர்கள் தங்களது மனுவில் இந்த வழக்கின் விசாரணை சுதந்திரமான ஒரு விசாரணை அமைப்பிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் தற்போதுள்ள நிலையில் உள்துறை, முதல்வரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவரது வழக்கிற்கு அவரே நீதிபதி ஆகிவிட முடியாது என்று தெரிவித்தனர். மேலும் தனது குற்றத்தை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அதித்யநாத் ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் அந்த பேட்டியின் வீடியோ பதிவை பெறக்கோரி எழுத்து பூர்வமாக விசாரானை அதிகாரியிடம் தாங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வழக்கின் விசாரணையை CB-CID வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினார்.

இவர்களின் இந்த மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையில் எந்த ஒரு நடைமுறை தவரையும் தாங்கள் காணவில்லை என்று கூறி அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.  மேலும் 2014 ஆம் ஆண்டு மத்திய தடவியல் துறைக்கு அனுப்பப்பட்ட வீடியோ ஆதாரம் போலியானது என்று கூறி ஆதித்யநாத் உட்பட நான்கு பாஜக தலைவர்களை இவ்வழக்கு தொடர்பாக விசாரிக்க உத்திர பிரதேச அரசு கடந்த வருடம் அனுமதி மறுத்தது.

இந்நிலையில் கோரக்பூரை சேர்ந்த பர்வேஸ் பர்வாஸ் மற்றும் அசாம்கார்க் பகுதியை ஆசாத் ஹாயாத் என்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் அளித்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதி A.M.கான்வில்கர் மற்றும் நீதிபதி D.Y.சந்திரசூத் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அந்த விசாரணையின் போது உத்திரபிரதேச காவல்துறை டிஜிபி (குற்றப்பிரிவு), கோரக்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர்க்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. இந்த நோட்டீசினை பெற்றுக்கொண்ட அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் அமன் லேகி, அதன் மீது இரண்டு வாரங்களில் பதிலளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த மனு மீதான அடுத்த விசாரணை இன்னும் ஆறு வாரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 இல் கோரக்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வெறுப்புப் பேச்சு பேசி அப்பகுதியில் கலவரம் ஏற்படுத்தியதற்காக ஆதித்யநாத் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது

Comments are closed.