அத்வானியின் அபாய சங்கொலி

0

 – எஸ்.எம்.ரஃபீக் அகமது

2015 ஜூன் மாதத்தை சூடான செய்திகளின் மாதம் என்றே கூறலாம். சுஷ்மாவின் மனிதாபிமானம், அத்வானியின் அபாய எச்சரிக்கை, யோகா எனும் முகமூடி தாங்கிய இந்துத்துவ திருவிழா இப்படி பற்பல காட்சிகளுடன் இந்த ஜூன் மாதம் சுழன்றது.

இதில் சுஷ்மாவின் மனிதாபிமான மர்மத்தையும் யோகாவின் கதகளியையும் நாம் சற்றே ஒதுக்கிவிட்டு முன்னாள் துணை பிதமரும் பா.ஜ.க.வின் மூத்த ஆசான்களில் ஒருவருமான அத்வானியின் அபாய அறிவிப்பை அவ்வாறு அவசியமற்றதாக ஒதுக்கிவிட முடியாது.

இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், அப்படி வந்தால் அது இந்திரா காந்தி அம்மையார் கொண்டுவந்த காலத்தைவிடவும் மிக மோசமாக இருக்கலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இப்படியான ஒரு அதி பயங்கர அறிவிப்பை அத்வானி வெளியிட்டுள்ளபோதும் பா.ஜ.க.வோ சங்பரிவார் அமைப்புகளோ இதுபற்றி நேரிடையான மறுப்பு எதையும் தெரிவிக்கவில்லை.

மாறாக, இது மோடிக்கு எதிராக கூறப்படவில்லை எனவும் அவர் அதுமாதிரி அர்த்தத்தில் பேசவில்லை என்பது போலவுமே தங்களது புரட்டு வசனங்களையும் தர்க்க வாதங்களையும் முன்வைத்து பேசி வருகின்றனர்.

அல்லக்கை ஜாம்பவான்கள் இப்படி மக்களை குழப்பி வருவது ஒருபுறம் நடந்தாலும் திருவாளர் மோடி அவர்கள் தனது திருவாய் மலர்ந்து அத்வானியின் பேச்சு அர்த்தமற்றது, அவசர நிலையை கொண்டு வர வேண்டிய அவசியம் தனது அரசுக்கு இல்லை என தெளிவுபட அறிவிக்கவில்லை.

இதைவைத்து பார்க்கும் போது அத்வானி வாய்மொழிந்த அவசர நிலைச்சட்டம் வரும் என்ற அபாய அறிவிப்பு அரசின் மறைமுக திட்டங்களில் இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது.

இதைப்பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் அத்வானியை சுற்றித்தான் பேசப்படுகிறதே தவிர அவர் சொன்ன அவசரகால சட்டம்பற்றியோ அதன் ஆபத்தான கேடுகள் குறித்தோ விவரிப்பதாக இல்லை.

அத்வானியும் ஆர்.எஸ்.எஸ்.காரர்தானே. அவரும் ஃபாசிச பட்டறையின் வார்ப்புதானே. எனவே, அவர் கூறுவதை முழுவதுமாக நம்பி விடலாமா என்பதாக சிலரும், அல்ல அல்ல அவர் சுஷ்மாவை லலித்மோடி சிக்கலில் இருந்து மீட்பதற்காக இப்படியான அதிரடி சூத்திரத்தை கையாண்டிருக்கலாம் என வேறு சிலரும் கதைக்கின்றாõர்கள்.

இது அத்வானியிடமிருந்து வெளிப்பட்டாலும் கல்லுக்குள் ஈரம் என்பதுபோல அத்வானியின் மனசாட்சி பேசியதாகக்கூட கருதலாம். எது எப்படியாகினும் இக்கருத்தை முழுமையாக பிரதமர் மறுக்காதவரை அத்வானிஜியின் அபாய சங்கு அர்த்தமுள்ளதாகவே ஒலிக்கிறது.

ஆனால், இதில் நமது பார்வை என்னவென்றால்…?

இதுவரையிலும் ஜனநாயக மரபுகளுக்கு மாறாக மோடி எதையாவது சட்டமாக்க விரும்பினால் அதை அவர் விரும்பும் தனது சகாக்கள் மூலம் கசியவிடுவதும் அதன் மூலம் அதுபற்றிய மக்களின் எதிர்ப்பின் வீரியத்தை எடை போடுவதும் பின்னர் ஊடகங்கள் உதவியுட ன் அதை விவாதப் பொருளாக்கி பின் அதன் எதிர்ப்பு வேகத்தை ஆரப்போட்டு இறுதியாக அவரது குருகுல கட்டளைகளை நிறைவேற்றுவார்.

சமஸ்கிருத திணிப்பு, ஐ.ஐ.டி. மாணவர்களிடமிருந்து பெரியாரையும் அம்பேத்கரையும் பிரிப்பது, மாட்டுக்கறி சட்டம், முஸ்லிம்கள் சிறுபான்மையினரல்ல என்று ஒரு பெயர் தாங்கி முஸ்லிம் அமைச்சரை கொண்டு பேச வைப்பது, இப்படியாக பல பல விஷயங்களை பட்டியலிடலாம்.

இவைகளை எல்லாம் வைத்து உன்னிப்பாக கவனித்தால் நமக்கு புலப்படுவது, தற்போது ஆர்.எஸ்.எஸ். அத்வானியின் மூலம் இப்படி ஒரு அறிவிப்பை கசியவிட்டு அதன்மூலம் மக்களை மனதளவில் தயார் செய்யும் முயற்சியாக இருக்கலாம் என தோன்றுகிறது.

இதன்படி வெகுவிரைவிலேயே இந்திய அரசியலிலும் ஆட்சியமைப்பிலும் பல விபரீத மாற்றங்கள் நிகழலாம்.

அதாவது, இந்தியாவின் சர்வ அதிகாரம் கொண்ட அதிபராகவோ அல்லது இந்துத்துவ சர்வாதிகாரியõகவோ தற்போதைய தலைமை தங்களை மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம்.

இது பொத்தாம் பொதுவான ஆருடமல்ல.

கடந்த ஓராண்டுகால மோடி அரசின் செயல்பாடுகளை நுணுக்கமாக கவனித்தால் இந்த தலைமை ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிராகப் பயணிப்பதை உணர முடியும்.

மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் இந்துராஷ்டிரா கனவு நிறைவேற வேண்டுமானால் அது பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் ஒரு போதும் நிறைவேறாது.

இவர்களின் முன்மாதிரி தலைவன் ஃபாசிச முசோலினி கூட ஒரு சர்வாதிகாரிதான் என்பதையும் கவனத்தில்  வைத்துப்பார்த்தால் ஒரு பேரினவாத ஃபாசிசம் கோலோச்ச வேண்டுமாயின் அது சர்வாதிகாரத்தின் மூலம் மட்டுமே சாதிக்க முடியும்.

தனி பெரும்பான்மை பெற்றுள்ள கட்சி அவசர நிலையை கொண்டு வரவேண்டிய அவசியம் இருக்குமா என உங்கள் மனம் கேட்கும் கேள்வி சரியானதுதான். ஆனால்,

பா.ஜ.க.வின் தற்போதைய அறுதிப் பெரும்பான்மை என்பது அவர்களின் இறுதிப் பெரும்பான்மையே ஆகும். இனிமேல் இதற்குமேல் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அவர்களுக்கு மிக மிக குறைவுதான்.

அம்மையார் மொழியில் சொல்வதானால் அவர்கள் உச்சத்தை எட்டிவிட்டார்கள். இனி சரிவுகள்தான். காரணம், இப்போது இவர்கள் பெற்றுள்ள இந்த பெரும்பான்மை பலம் இவர்களுக்காக இவர்களின் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டவர்கள் ஈட்டிக்கொடுத்த வெற்றியல்ல. இது அவர்களுக்கும் புரியும்.

காங்கிரஸ் அரசு கொண்டு வந்த வாஜ்பாய் அரசும் பின்பற்றி வந்த உலகமயமாக்கல் தனியார் மயமாக்கல் போன்ற மக்கள் விரோத கொள்கைகளினால் பாதிப்புகளுக்கு உள்ளõன மக்களின் கோபம்.

அவ்வப்போது வித்தைகாட்டி மக்களை வசீகரித்து வந்த அண்ணா ஹசாரே, சுடிதார் யோகா குரு போன்றவர்களின் ஆதரவு, செஞ்சோற்று கடன் தீர்த்த பொறுப்பற்ற பல ஊடகங்கள், இப்படி கூட்டு முயற்சிகளின் விளைவாக பா.ஜ.க.வே எதிர்பார்த்திராத வெற்றிச் சூழல் அவர்களுக்கு உருவானது. அவர்களும் அதை மிக சாதுர்யமாக கபளீகரம் செய்து கொண்டனர்.

இப்படியாக, சேப்பாட்டி வித்தைகள் மூலம் கிடைத்த வெற்றி இனிமேலும் சாத்தியமில்லை என்பது அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஏனென்றால் எந்த கொள்கைக்காக மக்கள் காங்கிரஸை துடைத்து எறிந்தார்களோ அதே கொள்கைகளைதான் அதிவேகமாக மோடி அரசும் செயல்படுத்தி வருகிறது. அதானி, அம்பானி போற்றி போற்றி என நாமகரணம் செய்துவரும் அரசை மக்கள் இனி நம்பமாட்டார்கள்.

இதனுடைய வெளிப்பாடுதான் தலைநகர் டெல்லியில் அரசியல் கத்துக்குட்டியõன ஆம் ஆத்மியிடம் சாணக்கியர்களைக் கொண்ட சங்பரிவார்கள் மண்ணை கவ்வியது.

டெல்லியின் தோல்வி பயமும் பீகாரின் லாலு நிதிஷ் கூட்டணி பார்முலாவும் பா.ஜ.க.விற்கு நடுக்கத்தை ஏற்படுத்தியதில் வியப்பில்லை.

இதுபோன்ற கூட்டணி சூழல் மற்ற மாநிலங்களிலும் நிகழ்ந்துவிட்டால் பா.ஜ.க.வின் இந்து ராஷ்டிரம், அகண்ட பாரதம் கனவுகளெல்லாம் கானல் நீராகிவிடும்.

தற்போது போதிய பலமும் செல்வாக்கும் இருந்தும் கூட இவர்கள் நினைப்பதை சட்டமாக்குவதற்கு அவசர சட்டம் எனும் அஸ்திரம்தான் கைக்கொடுக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் பதினான்கு முறைகள் அவசர சட்டம் போட்டுள்ளது மோடி அரசு. விவசாய நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூன்று முறை அவசர சட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவே, ஜனநாயகத்திற்கான குருதிக்குறைப்பு ஆகும்.

மேலும், பல்வேறு நாடுகளுக்கு மோடி பயணிப்பதில் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் வருங்காலங்களில் தான் கொண்டுவர உத்தேசிக்கின்ற அவசர நிலை பிரகடனத்தை உலக நாடுகள் கண்டித்துவிடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளும் கூட இதில் அடங்கியிருக்கலாம் எனும் மக்களின் சந்தேகங்களை புறக்கணித்து விட முடியாது. இறுதியாக, உலகமகா இனவாத பயங்கரவாத நாடான இஸ்ரேல் செல்லவிருப்பதும் அவர்களுடனான அதிகப்படியான உறவுகளும் மோடி அரசு செல்லவிருக்கும் திசை அத்வானி காட்டியதாக இருக்கலாம். இஸ்ரேல் அதற்கான பாடங்களை தந்து வழிகாட்டலாம்.

அத்வானியின் அறிவிப்பை ஒட்டிய யூகங்கள் தான் நான் மேலே குறிப்பிட்டுள்ளவைகள் என்றாலும், இந்த அபாய அறிவிப்பை செய்திருப்பவர் சாதாரணமானவர் அல்ல. இந்தியாவில் உணர்ச்சி அரசியலின் ஊற்றுக்கண், வன்முறை அரசியலின் வாத்தியார். பல ரத யாத்திரைகளை நடத்தி ரத்த ஆறுகளை ஓட்டியவர். ஆகையால்தான் நாம் அத்வானியின் பேச்சுக்கு பின்னால் இருக்கும் அர்த்தங்களை துளாவுகின்றோம்.

சரி, ஒரு வேளை அப்படியொரு அவசரநிலை சட்டம் வந்தால், அதனால் ஜனநாயகத்திற்கு என்ன பாதிப்பு? மக்களுக்கு எவ்வாறான கேடுகள் உண்டாகும்? மேலும் அதன் ஆபத்துகள் என்ன?

இன்றைய இளைய தலைமுறையினர் இதுபற்றி கொஞ்சமாவது அறிந்து கொள்வது அவசியம்.

* அவசர சட்டம் அமலில் இருக்கும்போது பத்திரிகை செய்திகள் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்படும். இதனால், அரசின் நடவடிக்கைகள் முற்றாக மறைக்கப்படும்.

* நீதிமன்ற செயல்பாடுகளுக்கு அரசு சார்ந்த விஷயங்களில் வாயில் பூட்டு போடப்படும்.

* அரசை விமர்சனம் செய்பவர்கள், கூலி உயர்வு கேட்டு போராடுபவர்கள், வாழ்வுரிமை போராட்டக்காரர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இவர்கள் பிணை கேட்டு நீதிமன்றங்களில் முறையிட முடியாது.

* மேலும், அரசுக்கு பிடிக்காத சமூக நல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், சிறுபான்மை உரிமைகளுக்கான இயக்கங்கள், கட்சிகள் தலித் அமைப்புகள் தடை செய்யப்பட்டு அதன் தலைவர்கள், செயல்படும் தொண்டர்கள் ஆண்டுகணக்கில் சிறையில் அடைக்கப்படுவார்கள். இதில், இடதுசாரி அமைப்புகளும் தப்பாது.

இப்படியாக எதிரணி இல்லாத சாம்ராஜ்யத்தின் ஏக போக மன்னர்களாக சாவர்க்கர் புத்திரர்கள் அதிகாரம் செய்யும் வாய்ப்புகள் ஏற்படும். இதன் கொடுமைகள் பற்றி விரித்துரைக்க பக்கங்கள் போதாது. சுருங்கச் சொன்னால் உலக பெருமை கொண்ட நமது ஜனநாயக முறைகளும் சட்டங்களும் புறம் தள்ளப்பட்டு மேல்சாதி இந்துக்களின் ஆதிக்கத்தில் ஒரு சர்வாதிகார இந்து ராஷ்டிரம் அமைக்க இந்த அவசர நிலை சட்டம் உதவலாம்.

அத்வானி கூறியவற்றில் மிகவும் கவனிக்கத்தக்கது. “இந்திரா காந்தி கொண்டு வந்ததை விடவும் மோசமானதாக வரவிருக்கும் அவசர நிலை இருக்கலாம்” என்பதாகும். இதன் உள்ளார்ந்த அர்த்தங்களையும் நாம் நுட்பமாக அவதானிக்க வேண்டும்.

இந்திரா காந்தி அவசர நிலையை அமல்படுத்திய காலத்தில் ஆட்சி மட்டும் காங்கிரஸ் வசம் இருந்தது. ஆனால், அரசு அதிகாரம் என்பது பெரும்பாலும் இந்துத்துவா மனநிலையுடன் கூடிய மேல்சாதி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஆகையால், அன்றைய அவசர நிலை, ஆட்சியாளர்களின் நோக்கங்களை முழுமையாக பிரதிபலிக்கவில்லை. அதிகாரிகளின் ஆதரவோடு காவிகள் கரைசேர்ந்தனர். பெரிய அளவில் சிறுபான்மைகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் இல்லை. காரணம், ஆட்சி இந்திராவினுடையது, அவரோ மத வெறுப்பு அரசியலுக்கு எதிரானவர்.

மேலும், அந்த காலத்தில் செல்வாக்குமிக்க பெரும் தலைவர்கள் எதிரணியில் இருந்தார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயண், மதிலிமாயி, இடதுசாரிகளின் ஜோதிர்மாய்பாசு. இப்படி பலரோடு தமிழகத்தில் முதல்வராக இருந்த கருணாநிதியும் எமெர்ஜென்சியை துணிந்து எதிர்த்து வந்தார். அந்த நேரங்களில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற சோசலிஸ்டுகளின் அடைக்கல பூமியாக தமிழகம் விளங்கியது. (பின்னாளில் இந்த சோசலிச பெர்னாண்டஸ் காவியில் கரைந்து வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தார்).

ஆனால், தற்போது அத்தகைய செல்வாக்கு மிக்க தலைவர்கள் இல்லை. ஒரு சிலர் இருந்தாலும் அவர்கள் சுய லாபத்திற்காக எதையும் சமரசம் செய்து கொள்பவர்களாக மாறியுள்ளனர், கருணாநிதியும் கூட. பா.ஜ.க.விடம் கூட்டணி செய்ததும் தேவைப்பட்டால் இனிமேலும் அவர் அந்த உறவை புதுப்பித்து கொள்வார் என்பதும் யதார்த்தமானவை.

எனவேதான், ஆட்சியாளர்களும் அரசு அதிகார மையங்களும் ஓரணியில் உள்ளபோது,

காவல்துறையிலும் இராணுவத்திலும் கூட பாசிச பாசறையில் பாசம் கொண்டவர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதாலும்

எதிர் களம் ஆடும் தலைகளும் பலகீனமாக உள்ள நிலையில்,

உலக நாடுகளுக்கு இந்திய சந்தை மட்டும்தான் குறியாக இருப்பதாலும்,

இது சமயம், அவசரநிலை கொண்டு வரப்பட்டால் அதன் தாக்கம் மிக மோசமான ஜனநாயக படுகொலையாக அமையும். இதைதான் அத்வானி அவருக்கே உரிய பாணியில் வெளிப்படுத்துகின்றார்.

அவசர காலத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதும் மு.க. ஸ்டாலின் போன்றவர்கள் சிறை கொட்டடிகளில் சித்திரவதைகளுக்கு ஆளானதும் எமெர்ஜென்சியின் ஒரு துளியளவு சம்பவங்கள்தான்.

ஒரே ஒரு அவசர சட்டம் மூலம் பொதுநல அமைப்புகளையும், தொண்டு நிறுவனங்களையும் மக்கள் நலனுக்காக அரசை எதிர்த்து விமர்சிக்கும் அமைப்புகளையும் மோடி தடை செய்திருப்பதும் கூட அடுத்து அவர் பயணிக்கக்கூடிய பாட்டையை நமக்கு சமிக்கையாக உணர்த்துவதாக உள்ளன.

எனவே, அரசியலை அறிந்த அத்வானி அபாயத்தை கோடிட்டு காட்டிவிட்டார்.

இனி, தற்போதைய தேவை நடுநிலையான மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை கொண்ட அமைப்புகள் தங்களுக்குள் உள்ள சிறு சிறு வேறுபாடுகளை மறந்து நாட்டையும் ஜனநாயகத்தையும் காக்க இணைந்து செயல்பட முன்வர வேண்டும். இதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகளை தன்னலமற்ற சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்டோர் அமைப்புகள் முன் எடுக்க வேண்டும்.

(ஜூலை 2015 இதழில் வெளியான கட்டுரை)

Comments are closed.