அனில் அம்பானிக்கு எதிரான எரிக்சன் வழக்கு: நான்கு வாரங்களுக்குள் 453 கோடி செலுத்தவில்லை என்றால் சிறை

0

அனில் அம்பானிக்கு எதிரான எரிக்சன் வழக்கு: நான்கு வாரங்களுக்குள் 453 கோடி செலுத்தவில்லை என்றால் சிறை

எரிக்சன் நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனம் வழங்க வேண்டிய கட்டண பாக்கி தொடர்பான வழக்கை நீதிபதி R.F.நரிமன் மற்றும் நீதிபதி வினீத் சரண் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரித்தது. அப்போது, கட்டணங்களை செலுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறி அனில் அம்பானி நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக நீதிமன்றம் கண்டித்துள்ளது. மேலும் எரிக்சன் நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய 453 கோடி ரூபாய் பணத்தை நான்கு வாரத்திற்குள் செலுத்தவில்லை என்றால் அனில் அம்பானி சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனத்துடன் Rcom, Reliance Telecom மற்றும் Reliance InfraTel ஆகிய நிறுவனங்களின் மீதும் நீதிமன்ற அவமதிப்பு பதிவு செய்யப்பட்டு இந்நிறுவனங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வழக்கில் நான்கு வாரங்களுக்குள் 453 கோடி ரூபாய் தொகை எரிக்சன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுவிட்டால் இவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு ரத்து செய்யப்பட்டுவிடும் என்றும் இதில் தவறும் பட்சத்தில் ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவன தலைவர் அனில் அம்பானி மூன்று மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

முன்னதாக எரிக்சன் நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டிய 550 கோடி ரூபாய் தொகையினை செலுத்த உச்ச நீதிமன்றம் செப்டெம்பர் 30 மற்றும் டிசம்பர் 15 என்று இரண்டு முறை கெடு விட்டது. இரு முறையும் அத்தொகையை ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த தவறியது.

முன்னதாக ரிலையன்ஸ் நிறுவனம் தங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை வேண்டுமென்றே தர மறுக்கின்றது என்றும் தங்கள் பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை ரிலையன்ஸ் நிறுவனம் வேண்டுமென்றே மீறுகிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தது.

அம்பானி தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, எரிக்சன் கூறுவது போல தனது கட்சிக்காரர் வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவுகளை மீறவில்லை என்றும் பணத்தை திருப்பி தர அனைத்து முயர்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டது என்றும் அதனால் தனது கட்சிக்காரர் மீதோ அல்லது அவரது அதிகாரிகள் மீதோ பொறுப்பு சாட்டக்கூடாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னதாக இதே வழக்கில் அனில் அம்பானி நீதிமன்றம் முன் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மாற்றியது தொடர்பாக நீதிமன்ற அதிகாரிகள் மானவ் சர்மா மற்றும் தபன் குமார் சக்ரபோர்தி ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.