அப்பாவிகளை வழக்கில் சிக்க வைப்பதற்கு பதிலாக மரணித்துவிடுவேன் என்று கூறிய அதிகாரி

0

11/7 குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை முடிவில் குற்றமற்றவர் என்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அப்துல் வாஹித் ஷேக் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் தன்னைப் போல் பல அப்பாவி முஸ்லிம்கள் இந்த வழக்கில் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகார வர்கத்தில் உள்ள பெரும் புள்ளிகள் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரியிடம் இதனை வற்புறுத்தினர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

“பெகுணா கைதி” என்று தலைப்பிடப்பட்ட புத்தகத்தில் தனது கைதுக்கு பிந்தைய தன்னுடைய வாழ்க்கை குறித்தும் பிறகு தான் குற்றமற்றவர் என்று விடிவிக்கப்பட்டது குறித்தும் அவர் எழுதியுள்ளார். 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட 13 நபர்களில் ஷேக்கும் ஒருவர். இவர் மீதான குற்றச்சாட்டுகளாவது இவர் மும்ப்ராவில் உள்ள தனது வீட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தது என்பதாகும்.

இவர் எழுதிய இந்த புத்தகத்தில் ஒரு அத்தியாயம் ஒன்றில் ACP வினோத் பட் மற்றும் மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவரான இஹ்திஷாம் சித்திகி என்பவருக்கு இடையேயான உரையாடல் இடம்பெற்றுள்ளது. அதில் அந்த அதிகாரி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் தான் என்பது தனக்கு தெரியும் என்றும் ஆனால் அவர்கள் மீது தீவிரவாத வழக்கு பதிவு செய்ய தனது உயரதிகாரிகளான முன்னாள் ATS தலைவர் ரகுவன்ஷி மற்றும் முன்னாள் கமிஷனர் AN.ராய் ஆகியோரால் வற்புறுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த உரையாடல் தான் இருக்கும் போது நக்பதா வில் உள்ள ATS இன் தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது என்று என்று வாஹித் குறிப்பிட்டுள்ளார். ACP வினோத், தங்கள் மீது அந்த வழக்குகளை பதிவு செய்யவில்லை என்றால் அவரது மனைவி மீது போலியான வழக்குகளை தொடரப்போவதாக அந்த உயரதிகாரிகள் மிரட்டியதாகவும் தனது புத்தகத்தில் வாஹித் குறிப்பிட்டுள்ளார். இதனை ACP.வினோத் தங்களிடம் தெரிவித்ததாக அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அப்பாவி மக்களை கஷ்டப்படுத்துவதற்கு பதிலாக தான் மரணித்து விடுவது மேல் என்று நினைப்பதாக ACP வினோத் கூறியதையும் வாஹித் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து சில நாட்களிலேயே ACP வினோத் மர்மமான முறையில் ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.

வாஹித் தனது புத்தகத்தில் மற்றும் ஒரு உரையாடலை பதிவு செய்துள்ளார். அது கமிஷனர் AN.ராய் மற்றும் இஹ்திஷாம் சித்திகி இடையேயானது. அதில் ராய், சித்திகியை மூன்றாம் தர சித்திரவதைகளை கொண்டு மிரட்டி அவரிடம் இருந்து போலியான வாக்குமூலங்கள் பெற்று அவரை அப்ரூவராக மாறச் செய்ததை வாஹித் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வழக்கை விரைவில் முடிக்கக் கூறி பொதுமக்கள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் இருந்ததாக ராய் ஒத்துக்கொண்டதாக தனது புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ATS இன் முன்னாள் தலைவர் கே.பி.ரகுவன்ஷி கூறுகையில், “இந்த கூற்றுகள் குறித்து பதிலளிக்க பட் தற்போது உயிருடன் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது.” என்று கூறியுள்ளார்.

முன்னாள் கமிஷனரான ஏ.என்.ராய், “இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானது. தயவு கூர்ந்து 12 குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை பாருங்கள். மேலும் இது போன்ற குற்றச்சாட்டுகளையெல்லாம் நீதிமன்றம் ஏற்கனவே கையாண்டு அதனை தகர்த்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Comments are closed.