அமர்நாத் யாத்திரிகள் மீதான தாக்குதலுக்கு இந்திய உளவுத்துறையே காரணம், நாங்கள் இல்லை:லஷ்கர் ஈ தொய்பா

0

ஜம்மு கஷ்மீரில் அமர்நாத் யாத்திரிகள் மீதான தாக்குதலுக்கு லஷ்கர் ஈ தொய்பா இயக்கம் தான் காரணம் என்பதற்கு பல ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன என்று ஜம்மு கஷ்மீர் காவல்துறை கூறி வந்த நிலையில் இதனை அந்த இயக்கம் முற்றிலுமாக மறுத்துள்ளதோடு இந்த தாக்குதலுக்கு இந்திய உளவுத்துறை தான் காரணம் என்பதாக தெரிவித்துள்ளது.

நாட்டு மக்கள் அனைவராலும் கண்டிக்கப்பட்ட இந்த தீவிரவாத செயலை தொடர்ந்து ஜம்முவில் கடையடைப்பு நடத்தப்பட்டது. இணையதள சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து மாநிலத்தின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்ய அமைச்சர்களின் அவரச கூட்டத்தை மாநில முதல்வர் மெஹ்பூபா முஃப்தி ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த தாக்குதலுக்கு தனது கண்டனங்களை தெரிவித்துக் கொண்ட அவர், இதனை நடத்தியவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில காவல்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அமர்நாத் யாத்திரிகள் மாநிலத்தின் விருந்தாளிகள் என்றும் அவர்கள் மீதான இந்த தாக்குதல் கஷ்மீரின் கலாச்சாரம் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அப்துல்லாஹ் கஸ்னாவி இந்த தாக்குதல் குறித்து கூறுகையில், “இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “இஸ்லாம் பிற மதங்கள் மீதான வன்முறையை அனுமதிப்பதில்லை. இந்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.” என்று அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

லஷ்கர் ஈ தொய்பா இயக்கம் மீதான காவல்துறையின் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த அவர், கஷ்மீரிகள் எப்போதும் எந்த ஒரு யாத்திரிகர்களையும் தாக்கியதில்லை என்று கூறியுள்ளார். மேலும் “இந்த காட்டுமிராண்டித் தனமான அட்டூழியங்கள் இந்திய இராணுவத்தின் முத்திரைகள்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா கஷ்மீரில் நடைபெறும் சுதந்திரப் போராட்டத்தை களங்கப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறது என்றும், அதனால் இது போன்ற தாக்குதல்கள் மூலம் தனது கொடிய செயல்திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறது என்று கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், உத்திர பிரதேசத்தின் இந்துக்களை கொண்டு தனது தீவிரவாத முகத்தை இந்தியா மறைக்கப் பார்த்தது என்றும் அது முடியாத காரணத்தினால் அவர்கள் அமர்நாத் யாத்திர்கள் மீதான இந்த போலித் தாக்குதலை பயன்படுத்துகின்றனர் என்று கூறியுள்ளார்.

கஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனெரல் முனிர் அஹமத் கான் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ஸ்ரீநகரில் இருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போடேங்கோவில் காவல்துறை பதுங்குக்குழி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்றும் அவர்கள் மீது காவல்துறை தரப்பு திருப்பி தாக்குதல் நடத்தியது என்றும் இதில் எந்த காயங்களும் ஏற்படவில்லை என்றும் வலியுறித்தினார்.

மேலும் இதனை தொடர்ந்து தீவிரவாதிகள் கன்பால் பகுதியில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர் என்றும் அங்கும் அவர்கள் மீது திரும்பத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

குஜராத்தில் இருந்து யாத்திரிகளை பல்டல் பகுதியில் இருந்து ஜம்முவிற்கு ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று துப்பாக்கிச் சூட்டில் மாட்டிக்கொன்டத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் இராணுவ மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல்துறையின் கூற்றுப்படி குறிப்பிட்ட இந்த பேருந்து அமர்நாத் யாத்திர்கள் செல்லும் வாகன அணிவகுப்பை சேர்ந்த பேருந்து அல்ல. அத்தகைய பேருந்துகளுக்கு கதுவா மாவட்டத்தின் லகான்பூர் பகுதியில் இருந்து பல்டல் மற்றும் பகல்கம் வரை பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

SASB யின் வழமையான நடவடிக்கை செயல்பாட்டு முறையின்படி அமர்நாத் யாத்திரிகளை கொண்டு செல்லும் எந்த ஒரு பேருந்தும் முகாம்களில் இருந்து ஜவஹர் சுரங்கம் வழியாக இரவில் பயணிக்க அனுமதிக்கப் படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் தாங்கள் எந்த ஒரு வாகனத்தையும் மாலை 3:30 மணிக்கு மேல் ஜவஹர் சுரங்கம் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றும் இது அவர்கள் வழியில் இரவு தங்குவதை தவிர்ப்பதற்காக செய்யப்பட்ட ஏற்ப்பாடு என்றும் கூறியுள்ளனர்.

இன்னும் இந்த பேருந்து எப்படி மிகவும் ஆபத்தான வழியில் அமர்நாத் யாத்திரிகளை கொண்டு சென்றது என்பதை குறித்து தாங்கள் விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.