அமெரிக்காவில் அதிகரிக்கும் வெறுப்பு தாக்குதல்கள்: பள்ளிவாசல் மீது குண்டு வெடிப்பு

0

அமெரிக்காவில் உள்ள மின்னெசோட்டா மாகாணத்தின் ப்லூமிங்டன் நகரில் அமைந்திருக்கும் தார் அல் ஃபாரூக் இஸ்லாமிய மையத்தின் மீது கடந்த சனிக்கிழமை அதிகாலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. ஆனால் பள்ளியின் இமாமுடைய அலுவலகம் இந்த குண்டு வெடிப்பில் சேதமடைந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அமெரிக்க FBI விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த தாக்குதல் வெறுப்புத் தாக்குதலா என்றும் இதன் பின்னணியில் யார் உள்ளது என்பது குறித்தும் இந்த விசாரணை முடிவில் தெரிய வரும் என்று FBI யின் மின்னபோலிஸ் நகர பொறுப்பு அதிகாரி ரிச்சர்ட் தொர்டன் கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர், பள்ளிவாசலில் வெடித்த இந்த குண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டது என்றும் இந்த குண்டு செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்களை அதிகாரிகள் சேகரித்து வருவதாகவும் விரைவில் இது எவ்வாறு செய்யப்பட்டது என்று கண்டறியப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த குண்டு வெடிப்பை அடுத்த ஏற்பட்ட நெருப்பை பள்ளிக்கு அதிகாலை தொழ வந்தவர்கள் அணைத்துள்ளனர். அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பை நேரில் கண்ட ஒருவர் இமாமின் அலுவலக ஜன்னல் வழியாக ஏதோ ஒரு பொருளை வேன் ஒன்றில் இருந்து மர்ம நபர்கள் தூக்கி எறிந்ததாக கூறியுள்ளார்.

முன்னதாக இந்த பள்ளிவாசலுக்கு மிரட்டல் அழைப்புக்களும் ஈ-மெயில்களும் வந்ததாக இந்த பள்ளியின் நிர்வாக இயக்குனர் முஹம்மத் உமர் தெரிவித்துள்ளார். இந்த குண்டு வெடிப்பு குறித்து பள்ளிக்கு தொழ வந்த அப்துர்ரஹ்மான் தெரிவிக்கையில், “அனைவரும் இந்த நாட்டிற்கு எதற்கு வந்தார்களோ அதே காரணத்திற்கு தான் நாங்களும் இந்நாட்டிற்கு வந்தோம். அது வழிபட்டு சுதந்திரம். தற்போது அந்த சுதந்திரம் அபாயத்தில் உள்ளது. இது குறித்து ஒவ்வொரு அமெரிக்கனும் வருத்தமடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள அணைத்து பள்ளிவாசல்களும் தங்களது பாதுகாப்பினை பலப்படுத்திக்கொள்ள அமெரிக்க இஸ்லாமிய உறவு அமைப்பான CAIR கேட்டுக்கொண்டுள்ளது. CAIR இன் மின்னெசோடா இயக்குனர் அமீர் மாலிக், “இதில் வெறுப்பு தாக்குதல் நோக்கம் இருப்பது உறுதியானால் அமெரிக்காவில் பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட வெறுப்பு தாக்குதல்களின் நீண்ட பட்டியலில் இதுவும் இடம்பெறும்.” என்று கூறியுள்ளார்.

கடந்த வருடம் மட்டுமே இதுபோன்று 2213 தாக்குதல் சம்பவகள் நடைபெற்றுள்ளன. 2015 ஐ பொறுத்தவரை இது 57% அதிகரிப்பாகும். 2015 இல் 34 ஆக இருந்த முஸ்லிம்களை எதிர்க்கும் இயக்கங்களின் பட்டியல் கடந்த வருடம் 101 ஆக அதுகரித்துள்ளது. இதற்கு ஒரு காரணமாக டிரம்ப்பின் முஸ்லிம்கள் மீதான தடையும் கூறப்படுகிறது.

Comments are closed.