அமெரிக்காவில் இனவாத தாக்குதலில் இந்தியர் பலி

0

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பஞ்சாபின் பழைய நாதல்லா பகுதியை சேர்ந்த ஜக்ஜீத் சிங் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் தற்போது அதிகரித்து வரும் இனவாத வெறுப்பு தாக்கதலில் பலியான இந்தியர்களின் பட்டியலில் ஐவரும் சேர்ந்துள்ளார்.

35 வயதான ஜக்ஜீத் சிங் ஒரு இனவாத வெறுப்புத் தாக்குதலில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவர் அமெரிக்காவில் தனது சகோதரி மற்றும் சகோதரியின் கணவருடன் வசித்து வந்ததாக தெரிகிறது. இவருக்கு மனைவி, மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.

ஜக்ஜீத் சகோதரியின் கணவர் கன்வர்ஜித் சிங் சீமா, ஜக்ஜீதுடன் பணிபுரியும் சிக்கந்தர் சிங் என்பவர் ஜக்ஜீத் மீதான தாக்குதல் குறித்து தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். சிக்கந்தர் ஜக்ஜீத் மீதான தாக்குதலை நேரடியாக கண்டவர்.

கன்வர்ஜித்தின் கூற்றுப்படி ஒரு அமெரிக்கர் காலை 11:30 மணியளவில் கடைக்கு வந்து ஜக்ஜீதிடம் ஒரு சிகரட் பாக்கட் கேட்டதாகவும் அதை பெறுவதற்கு அந்த நபரிடம் அடையாள அட்டையை இல்லாததால் தன்னால் சிகரட் வழங்க முடியாது என்று ஜக்ஜீத் கூற அந்த அமெரிக்கர் கோபமுற்று ஜக்ஜீதை நோக்கி இனவாத வசைகளை வீசிவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.

பின்னர் சில நேரம் கழித்து வெளியே சென்ற ஜக்ஜீத்தை அந்த நார் கூர்மையான ஆயுதத்தால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். காயமடைந்த ஜக்ஜீத் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

ஜக்ஜீதின் மறைவு குறித்து கருத்து தெரிவித்த அவரது தந்தை மொஹிந்தர் சிங், ஜக்ஜீத் மிகவும் அன்பானவர் மற்றும் கடின உழைப்பாளி. அவரது பிரிவு தங்களை வாட்டும் என்று கூறியுள்ளார். மேலும் தனது குடும்பத்திற்காக அவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னாள் அமேரிக்கா சென்றார் என்றும் தாங்கள் பல கடன்களை பெற்று அவரை அங்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜக்ஜீத்தின் கொலையாளியை இன்னும் காவல்துறையினர் கைது செய்யவில்லை.

Comments are closed.