அமெரிக்காவில் குறிவைக்கப்படும் இந்தியர்கள்

0

அமெரிக்காவில் குறிவைக்கப்படும் இந்தியர்கள். 13 நாட்களில் இந்தியார்கள் மீது மூன்று கொடூர தாக்குதல்கள். ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கைகள் காரணமா?

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கென்ட் பகுதியில் வசித்து வந்த தீப் ராய் என்ற 39 வயது சீக்கியரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் “உன் நாட்டிற்கு திரும்பிப் போ” என்று கூறி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த துயர சம்பவம் நடந்த சில நாட்களிலேயே இதே போன்ற மற்றொரு நிகழ்வில் கன்சாஸ் நகரில் ஒரு இந்திய பொறியாளர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கன்சாஸ் நகரில் மதுபான விடுதியின் வெளியே வைத்து ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா மற்றும் அவரது நண்பர் அலோக் மடசாணி என்பவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். இவர்களை சுட்டவர்கள் அவர்களிடம் “என் நாட்டை விட்டு வெளியே போ” என்று கூறியவாறு இவர்களை சுட்டுள்ளனர்.

இது குறித்து மடசாணி கூறுகையில், “நடந்தது ஒரு கனவாக இருக்கக் கூடாத என்று நான் விரும்புகிறேன்.” என்றும் “அன்று இரவு நடந்தது என் நண்பனை என்னிடம் இருந்து பறித்த ஒரு அர்த்தமற்ற குற்றச் செயல்.” என்று கூறியுள்ளார். இந்த தாக்குதலை நடத்தியதாக கருதப்படும் ஆடம் புரின்டன் என்பவர் மீது கொலை வழக்கும் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள லான்செஸ்டர் பகுதியில் கடந்த 14 வருடங்களாக வசித்து வந்த ஹர்நிஷ் படேல் என்பவர்  அவரது வீட்டின் வாசலில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,”இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கக் குடிமகனான தீப் ராய் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அறிந்து நான் வருத்தமுற்றேன். அவரின் தந்தை ஹர்பல் சிங்கை தொடர்புகொண்டு நான் பேசினேன். அவர் தனது மகனின் கையில் தோட்டா காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். அவர் அபாயகட்டத்தை தாண்டிவிட்டார். தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் தேர்ச்சிப் பெற்று வருகிறார்” என்று கூறியுள்ளார்.

மேலும் படேல் மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க குடிமகனான ஹர்நிஷ் படேலின் கொலை குறித்த செய்தி தனக்கு மிகுந்த வேதனையை தந்தது என்று கூறியுள்ளார்.

இந்த அனைத்து கொலைகளுக்கும் பின்னர் இனவெறி இருப்பதாக கருதப்படுகிறது. தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே பரவலாக இனவெறி கருத்துக்களை கூறியதும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியதும் குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப்பின் பேச்சுக்கள் தான் இத்தகைய தாக்குதலுக்கு ஊற்றாக விளங்குகிறது என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள் கூறுகின்றனர். ட்ரம்ப்பின் சமீபத்திய வெளிநாட்டினர் எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு கொள்கை முடிவுகளை அடுத்து இந்த சம்பவங்கள் நிகழ்வதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை என்று அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சமீபத்திய இந்த தாக்குதலுக்கும் தங்களது வெளியுறவு கொள்கைகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மளிகை பத்திரிகை செயலாளர் ஷான் ஸ்பைசர், “எந்த ஒரு உயிரின் இழப்பும் வருத்தத்திற்குரியது. ஆனால் இந்த சம்பவங்களுக்கிடையே தொடர்பிருப்பது என்று கூறுவது அபத்தமானது.” என்று கூரியுள்ளார்.

இந்தியர்கள் தாக்கப்படுவது குறித்து ட்ரம்ப் கண்டனம் தெரிவிக்காமல் மெளனம் காப்பதாக குற்றச்சாட்டு பரவலாக எழுந்த பின் சுமார் ஒருவார காலம் கழித்து கன்ஸாஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார். அதில், “நாம் கொள்கைகளால் பிரிந்த தேசமேன்றாலும் வெறுப்பு மற்றும் தீயவைகளை கண்டிப்பதில் ஒன்றுபடும் ஒரு நாடு” என்று கூறியுள்ளார்.

Comments are closed.