அமெரிக்க விமான நிலையத்தில் மீண்டும் ஷாருக்கானிடம் சிறப்பு சோதனை

0

அமெரிக்க விமான நிலையத்தில் 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் ஷாருக்கான் சிறப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது முன்னர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல மீண்டும் அவரை விமான நிலைய அதிகாரிகள் சிறப்பு சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இது குறித்து ட்விட்டரில் தனது கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளார் ஷாருக்கான். பின்னர் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இந்நிகழ்வு குறித்து ஷாருக்கான் தனது ட்விட்டரில், “தற்போதுள்ள நிலையில் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நான் மதிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளால் சிறப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுவது மிக மிக மோசமான அனுபவம்” என்று கூறியுள்ளார்.

தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு ஷாருக்கான் செல்லும் போது இந்நிகழ்வு நடந்துள்ளது. அமெரிக்க அரசின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான மாநில செயலர் நிஷா பிஸ்வால் ஷாருகானிடம் மன்னிப்புக் கோரி அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், “விமான நிலையத்தில் ஏற்பட்ட தொந்தரவிற்கு மன்னிக்கவும். பல நேரங்களில் அமெரிக்க அதிகாரிகள் கூட கூடுதல் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்,” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வெர்மவும் ஷாருக்கானிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

முன்னதாக ஷாருக்கான் சோதனையிடப்பட்ட போது தான் ஒரு முஸ்லிம் என்பதாலும் தனது பெயர் கான் என்பதாலும் தான் தன்னை கூடுதல் சோதனைக்கு விமான நிலைய அதிகாரிகள் உட்படுத்தினர் என்றும் இதனால் தான் மிகவும் அவமானப்பட்டதாகவும் கோபமுற்றதாகவும்ம் அவர் தெரிவித்திருந்தார்.

ஷாருக்கானைபோல் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமும் அமெரிக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.