அமேரிக்க விசா விண்ணப்பத்தில் முஸ்லிம்கள்(?) சமூக ஊடக பாஸ்வோர்ட் குறிப்பிட வேண்டும்

0

அமெரிக்க விசா விண்ணப்பத்தின் போது வழக்கமாக நடைபெறும் பின்னணி சோதனைகளுடன் இனி விண்ணப்பதாரரின் சமூக வலைதள பாஸ்வோர்ட்களும் கேட்கப்படலாம் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இதனை அமெரிக்க உள்துறை பாதுகாப்பு செயலாளர் ஜான் கெல்லி கடந்த செவ்வாய் கிழமை தெரிவித்துள்ளார்.

தங்களது இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு வருபவர்களில் ஆபத்தானவர்களை கண்டறிந்து தடுப்பதை எளிதாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சோதனை விதிமுறைகள் குறிப்பாக ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாட்டில் இருந்து வருபவர்களுக்கு விதிக்கப்படும் என்றும் இந்த நாடுகளில் பின்னணி சோதனைகள் தரமற்றவையாக இருப்பதனால் இவை தேவைப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தகைய மேம்படுத்தப்பட்ட கூடுதல் சோதனைகள் மேற்கண்ட நாடுகளுக்கு அவசியம் என்றும், அந்நாட்டில் வசிப்பவர்கள் அமெரிக்காவிற்குள் வர வேண்டுமானால் அவர்கள் இணையத்தில் எந்தெந்த தளத்திற்கு செல்கிறார் என்றும் அங்கு என்ன செய்கிறார்கள் என்றும் தங்களுக்கு தெரிய வேண்டும் என்றும் இதனை அவர்கள் தெரிவிக்க விரும்பவில்லை என்றால் அவர்களுக்கு அனுமதி வளங்கப்படாது என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசின் இந்த முடிவு குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களை நோக்கியே இருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இது மேற் குறிப்பிட்டுள்ள நாடுகளுடன் முடிவடைய போவதில்லை என்றும் சோதனை அடிப்படையிலேயே இந்த நாடுகள் தற்போது குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் பின்னாட்களில் அமெரிக்க அரசு தங்களின் விருப்பப்படி எந்த நாட்டை சேர்ந்த எவருக்கும் இது போன்ற கெடுபிடிகளை விதிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

தற்போது இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும் கடினமான சோதனை முறைகள் அமெரிக்க விசா விண்ணப்பிப்பவர்களுக்கு மேல் விரைவில் அமல் படுத்தப்படும் என்று தெரிகிறது.

அமெரிக்க அரசின் இந்த கொள்கை, ட்ரம்ப் முஸ்லிம் நாடுகளில் வசிப்பவர்களுக்கு அமெரிக்க வர விதித்த தடையின் மற்றொரு பரிணாமமாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.