அம்பேத்கர் பார்வையில் இந்துத்துவம்

0

 

– எஸ்.எம்.ரஃபீக் அஹமது

ஏப்ரல் 14 அன்று நான் தமிழகத்தின் சில பகுதிகளில் பயணித்தபோது வியக்கத்தக்க சில காட்சிகளை கண்டேன்.

ஆம்.. அன்றுதான் ஒடுக்கப்பட்டோரின் விடுதலை போராளியான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம்.

சட்டமேதையும் அறிவுப்பகலவனும்  “தேசியத்தின் தலைவருமாகிய” இவரை இன்னும்கூட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவராக மட்டுமே பார்க்கிறார்கள் என்பதுதான் எனது பயணத்தில் என்னை வியக்க வைத்த சற்று வேதனையும் தந்த காட்சியாகும்.

அன்றைய தினம் நான் கடந்து சென்ற சிற்றூர்களில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அமர்க்களப்பட்ட வண்ணம் இருந்தன. ஆங்காங்கே வான வெடிகள்; வணக்கம் தெரிவிக்கும் சுவரொட்டிகள்; நாட்டுப்புற இசைக்கருவிகள் முழங்க உற்சாக ஊர்வலங்கள்; சில இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவிப்போடு சேர்த்து பாலாபிசேகங்களும் நடந்தேறியதை பார்த்தேன்.

ஆனால், இவை எதிலுமே ஒடுக்கப்பட்டோர் சமூகம் தவிர மற்றவர்கள் யாரும் கலந்து கொண்டதாக தெரியவில்லை. (வாக்கு வங்கியை குறிவைக்கும் சில அரசியல்வாதிகளைத் தவிர) இந்திய நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கான சட்டவரைவுகளை தந்த அந்த மாபெரும் தேசிய தலைவரை நாம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவராக மட்டுமே பார்ப்பதுதான் என்னை வியப்பிலும் வேதனையிலும் தள்ளியதாகும்.

மாளவியாவையும் முகர்ஜிகளையும் தூசுதட்டி போற்றுகின்ற பா.ஜ.க.வினர்கள் அம்பேத்கரியத்தை சேரிக்குள்ளும் அவரது உருவ சிலையை கூண்டுக்குள்ளும் அடைத்துவிட்டார்கள் என்பதே நிதர்சனம்.

ஆனால், சமீபகாலங்களில் அதாவது பீகார் போன்ற மாநில தேர்தல்கள் வருவதை முன்னிட்டும் பெரியார் வாழ்ந்த மண்ணில் காவி பயங்கரத்தை விதைக்கும் வேட்கையுடனும் அக்கிரகார பட்டறையில் அச்சுவார்க்கப்பட்டும் நாக்பூர் மையங்களில் கூர்மையாக்கப்பட்டும் உலாவரும் சங்பரிவார தலைவர்கள் அம்பேத்கரை தங்களவர் எனவும் நவீன இந்தியாவின் “மனு” எனவும் வாய்க்கூசாமல் வஞ்ச புகழ்ச்சி செய்து வருவதை நாம் பார்க்க முடிகிறது.

இப்படியான சூழலில் தான் “அம்பேத்கர் பார்வையில் இந்துத்துவா” பற்றிய ஒரு சிறிய தொகுப்பை இங்கே பதிவிடுகின்றேன்.

அம்பேத்கர் எனும் அறிவுச்சூரியனை பாசிச கிரகணம் விழுங்க எத்தனிக்கும் தந்திரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று களமிறங்கியுள்ள பாசிச சக்திகளுக்கு டாக்டர் அம்பேத்கர் பற்றிய மதிப்புகள் பெரிய அளவில் இல்லை. எனினும் அவரை தங்களவராக சித்தரித்து தன்வயப்படுத்தி அவரது தியாகத்தை அபகரிப்பதன்மூலம் இந்தியாவின் வெகுமக்களாகிய ஒடுக்கப்பட்டோரை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை கொள்ளையிடலாம் என்பதே காவிகளின் கபடம்.

அம்பேத்கர் வாழுக்காலத்தில் இந்த தீய சக்திகள் அவரை சாதியின் பெயரால் செய்த கொடுமைகள் பற்றி விவரித்தால் அது ஒரு நூலாக அல்ல நூலகமாக விரிந்து போகும். எனவே ஒரு சில சம்பவங்களை மட்டும் பார்க்கலாம்.

அன்றொரு நாள் வெளியூர் சென்று உயர்கல்வி படித்துவிட்டு தங்கள் கிராமத்திற்கு அம்பேத்கரும் அவரது சகோதரரும் திரும்புகிறார்கள். ஊருக்கு அருகிலுள்ள புகைவண்டி நிலையம் வந்து இறங்கிய அவர்களின் தோற்றத்தையும் தோரணையையும் கவனித்த அந்த நிலைய அதிகாரி அவ்விருவரையும் மேல் தட்டு பிள்ளைகளாக நினைத்துக் கொண்டு அவர்களருகில் வந்து இன்முகம்காட்டி நீங்கள் எங்கே செல்லவேணும் சற்று பொறுங்கள் ரயிலை அனுப்பிவிட்டு வந்து உங்களுக்கு ஏதாவது வண்டி ஏற்பாடு செய்கிறேன் எனக்கூறி செல்கிறார்.

அவரது கரிசனத்தில் மிகவும் மகிழ்ந்துபோன அம்பேத்கர் சகோதரர்கள் ஆசுவாசமானார்கள். அந்த நிம்மதி அவர்களுக்கு நெடுநேரம் நிலைக்கவில்லை. சற்று நேரத்தில் மீண்டும் நிலைய அதிகாரி அருகில் வருகிறார்.

உங்கள் பெயரென்ன..? நீங்கள் எந்த சமூகம்..?

தாமதியாமல் தனது பெயர் பீமாராவ் எனவும், தாங்கள் மகார் வகுப்பினர் எனவும் அம்பேத்கர் கூற அதிகாரியின் முகம் அடுப்பிலிட்ட அப்பளம் போல சுருங்கிவிட்டது.

உங்களுக்கெல்லாம் வண்டி வாடகைக்கு வராது. நீங்கள் வேறு வழியை பார்த்துக் கொள்ளுங்கள். என நிலைய அதிகாரி சொன்னது கேட்டு செய்வதறியாது கலங்கிய சகோதரர்கள்.

அய்யா எங்களூர் சற்று தொலை தூரத்தில் உள்ளது நாங்கள் நடந்து செல்லவும் முடியாது. ஆகையால் எப்படியாவது எங்களுக்கு உதவ வேண்டும் என அதிகாரியிடம் கெஞ்சினார்கள்.

இதற்கிடையில் இவர்கள் ஒரு தலித்துகள் எனும் செய்தி அறிந்த வண்டிக்காரர்களோ கீழ்சாதியினருக்கு வாடகைக்கு வர மறுக்கிறார்கள். சூழ்நிலையை புரிந்துகொண்ட அம்பேத்கரின் அண்ணன் வாடகையை இரட்டிப்பாக தருவதாக சொல்ல ஒரு மாட்டுவண்டிகாரன் வர சம்மதித்தான். ஆனால், சில நிபந்தனைகளும் வித்தான்.

அதாவது, வண்டியை சிறுவர்களே ஓட்டி செல்ல வேண்டும். வண்டிக்காரன் இவர்களோடு சமமாக அமர்ந்து வண்டி ஓட்டினால் அவன் “தீட்டு” ஆகிவிடுவானாம். இந்த நிபந்தனைகளோடு வண்டி புறப்பட்டது.

இருவருக்கும் நல்லபசி. சகேõதரன் கையில் உணவு பொட்டலம் இருந்தும், அதை சாப்பிட எவரும் தண்ணீர் தர மறுத்ததால் பசியோடும் கடும் தாகத்தோடும் அவர்கள் பயணித்ததும், இடையில் ஏற்பட்ட தீண்டாமை கொடுமைகளும் ஒரு பெரும் தொடராகும்.

இவரது சிறுவயதின் அனுபவங்கள் இப்படியென்றால்..? இவர் பலநாடுகள் சென்று பட்டங்கள் பல பெற்று வந்த பின்னும் தீண்டாமை கொடுமைகள் இவரை தீண்டாமல் விடுவதாய் இல்லை.

பரோடா… காந்தி பிறந்த மாநிலம் என்பதோடல்லாமல் மோடிகளையும் உருவாக்கிய மேற்கு மாநிலத்தின் ஓர் நகரம். பட்டப்படிப்பை முடித்துவிட்டு பரோடா மன்னரிடம் பணியில் அமர்வதற்காக அம்பேத்கர் இந்நகரம் வருகிறார். அங்கே தங்குவதற்காக வாடகை விடுதிகளை தேடி அலைந்தபோது அவருக்கு விடுதிகளில் இடம் தர மறுத்தது ஆதிக்க சாதியின் அகராதி. இறுதியில் அவர் அங்கிருந்த ஒரு ஃபார்ஸி சமூக விடுதியை அடைந்தார். அதன் மேலாளரும் அம்பேத்கருக்கு விடுதி தறுவதில் உள்ள சமூக தடைகளை கூறி மறுக்கவே அவர் மேலாளரிடம் ஒரு உடன்பாடு செய்தார்.

அதன்படி தனது பெயரை ஒரு ஃபார்ஸி பெயராக மாற்றி கொள்வதாகவும் அதேசமயம் மேலாளருக்கும் போதிய பணம் தருவதாகவும் கூறியதை ஏற்று அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. பிரச்சனை முடிந்துவிட்ட நிம்மதியோடு அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தவேளை ஏதோ திருடனை பிடிக்க திரண்டு விட்டதைப் போன்ற ஒரு கூட்டம் அம்பேத்கரின் அறையை நோக்கி கோபாவேசத்துடன் வந்தது.

அவர்கள் அம்பேத்கரை பார்த்து கடுமையான வார்த்கைளால் அர்ஜனை செய்தார்கள் தீண்டத்தகாத குலத்தவர்; தங்களின் ஃபார்ஸி இன பெயரை பொய்யுரைத்ததும் அங்கே தங்கியதும் மாபாதக செயலென கடிந்ததோடு அவரது பெட்டி படுக்கைகளையெல்லாம் வெளியில் வீசி எறிந்தனர். அவரையும் சேர்த்துதான்.

இதுபோன்ற பலநூறு சங்கடங்கள் அவரை சமூக தளத்தில் வதைத்தன. அவரது அரசியல் தளமாவது அவரது அறிவுக்கும் கல்விக்கும் உரிய இடத்தினை அந்த மேதைக்கு தந்தனவா…? பார்க்கலாம்.

முதலில் அவர் தனது அரசியல் பிரவேசத்தை தனது சமூகத்திற்கான விடுதலைத் தளமாகவே பார்த்தார். ஆகையால்தான், அன்றைய காங்கிரசாரும், காந்தியும் சைமன் கமிஷனை எதிர்த்து போராடியபோது அம்பேத்கர் மட்டும் அதை ஆதரித்தார். காரணம் சாதி ஆதிக்க கட்டமைப்பில் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர்களால் தனது சமூகத்திற்கு எவ்வித விடுதலையையும் தந்துவிட முடியாது எனவும், அதேவேளை சாதி முரண்களில்லாத ஆங்கிலேய அரசு ஓரளவேணும் சமூக நீதியை சட்டத்தின்மூலம் நிறைவேற்றுவார்கள் என்றும் அவர் எதிர்பார்த்ததில் தவறில்லை. ஏனெனில், வெள்ளையனிடம் விடுதலைக்கோரிய உயர் வகுப்பார்கள் தங்களால் காலம் காலமாக அடிமைப்பட்டுள்ள ஒரு மக்களுக்கு மட்டும் சம அந்தஸ்தோ உரிமைகளோ வழங்க முன்வரவில்லை. (இன்றுவரையிலும் இது தொடர்கிறது)

எனவேதான், ஒரு முறை அம்பேத்கர் இதுபற்றி குறிப்பிடுகையில், “தங்கள் மதத்தைச்சார்ந்த” ஒரு பெரும்கூட்டம் கல்வி சுகாதாரம் நாகரீகம் எதையும் பெறாமல் இருப்பதுகுறித்து இந்துக்களின் தலைவர்கள் வெட்கப்படவில்லை என கண்டித்தார்.

இப்படி வெட்கப்படாத கூட்டத்தினரை நம்பி பொது விடுதலை கேட்க அவர் விரும்பவில்லைபோலும், அதை உறுதி செய்யும் விதமாகத்தான் பின்னாட்களில் வட்டமேஜை மாநாட்டின் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக அம்பேத்கர் ஆங்கிலேய அரசால் அழைக்கப்பட்டபோது, அதை காந்தியும் காங்கிரசாரும் கடுமையாக ஆட்சேபித்தார்கள்.

ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதியாக காந்தி இருக்கும்போது தலித்துகளுக்கான தனியான ஒருவர் தேவையில்லை என வாதிட்டார்கள். இதன்மூலம் அம்பேத்கர் இந்திய அரசியலில் தனியொரு தலைவராக உருவாவதை அவர்கள் விரும்பவில்லை. அத்தோடு தலித்துகளின் விடுதலையையும் அவர்கள் ஏற்கவில்லை என்றே புரிகிறது.

இனியொரு சம்பவத்தையும் நாம் இங்கே பதிவிட வேண்டும். அதாவது, வெகு சீக்கிரமே இந்தியா சுதந்திரம் பெற்றுவிடும் எனும் அறிகுறிகளின் தென்பட துவங்கிய காலம். அப்போது இந்தியாவிற்கான அரசியல் சட்டத்தை தொகுப்பதற்காக அரசியல் நிர்ணய சபைக்கான உறுப்பினர்கள் தேர்வு நடந்தது. கால அவகாசம் குறைவாக இருந்தபடியால் அன்றைய சட்டமன்ற உறுப்பினர்களே வாக்களித்து அரசியல் சபை அங்கத்தினர்களை தேர்வு செய்தார்கள். அவ்வாறு நடந்த தேர்தலிலும் காங்கிரசார் அம்பேத்கரை ஆதரிக்கவில்லை.

அதே சமயம் அன்றைய முஸ்லிம் லீக் கட்சியானது அம்பேத்கரின் சட்ட அறிவை உணர்ந்து அவருக்கான கண்ணியத்தையும் அந்தஸ்தையும் வழங்கியது. அதாவது, அம்பேத்கரை தங்களின் வாக்குகள் மூலம் அரசியல் நிர்ணய சபைக்கு தேர்வு செய்து அனுப்பினார்கள்.

ஆனால், அவரை இந்து என சொல்லிக்கொள்வதில் மட்டும் காங்கிரசும் பா.ஜ.க.வும் பெருமை கொள்வதும் அவரது சமூக வாக்குகளை அபகரிக்க முயல்வதும் வெட்கக் கேடானதே.

இப்படியெல்லாம் இந்து சனாதன வாதிகளும் மற்றவர்களும் புறக்கணித்தபோதும் அம்பேத்கர் தனதுபணியில் முழு ஈடுபாட்டுடனே செயலாற்றினார். அதன் பயன்தான் இன்று நாம் உலகம் வியக்கும்படியான ஒரு ஜனநாயக பாராளுமன்ற நடைமுறைகளை அனுபவித்து வருகிறோம். அவரது அறிவு தொகுத்த சட்டத்தின் பயனாகத்தான் தேநீர் கடைக்காரர்களும் பிரதமராக முடிகிறது.

இப்படியெல்லாம் பல்வேறு சூழ்ச்சிகளுக்கிடையிலும் அரசியல் சபையில் இடம்பெற்ற அம்பேத்கரை சில ஆதிக்கசாதி தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட விடாமல் பல பல இடையூறுகளை செய்து வந்தார்கள்.

நாடு பிரிந்துவிட்டது. முஸ்லிம் உறுப்பினர்களில் மூன்று பேர் தவிர மற்றவர்கள் பாகிஸ்தான் சென்றுவிட்டார்கள். அரசியல் நிர்ணய சபையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை போதுமான அளவுக்கு இல்லை. எங்கு பார்த்தாலும் மத மோதல்களும் வன்முறைகளும் இந்து மகா சபையினராலும் அதன் தோழமை அமைப்புகளாலும் திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்தன. இந்த மாதிரியான சூழலை பயன்படுத்தி இந்தியாவை இந்து நாடாக மாற்ற துடித்துக் கொண்டிருந்தவர்கள் அம்பேத்கர் தொகுத்த சட்டங்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வரையும்படி அவரை நிர்பந்தம் செய்து வந்தார்கள்.

அதனால்தான், நமது அரசியல் சாசனத்தின் சில பிரிவுகள் யதார்த்தத்திற்கு முரண்படுவது போன்ற கருத்துக்களையும் உள்ளடக்கியதுபோல தோன்றுகின்றன.

இதுபற்றி அம்பேத்கரை ஒருமுறை கூறியபோது, “என் விருப்பத்திற்கு மாறாக செயல்படும்படி நான் நிர்பந்திக்கப்பட்டேன். அரசியல் சட்டம் எழுதுவதற்கு அவர்கள் என்னை சவாரி குதிரையாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்றார்.

மேலும், ராமாயணம் எழுத ஒரு வால்மீகியும் மகாபாரதம் வரைய வியாசரும் கிடைத்ததுபோல் இந்தியா சட்டத்தை உருவாக்க நான் பயன்பட்டேன் என்பதாக தனது மன வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

சில நேரங்களில் பொது

சிவில் சட்டம் எனும் புரட்டுவாதம் பேசும் அம்பிகள் சிலர் அம்பேத்கரின் அரசியல் சட்டப் பிரிவுகளை துணைக்கு அழைத்து வாதிடுவதை நீங்கள் கவனித்திருக்க கூடும்.

ஆனால், அம்பேத்கர் கொண்டுவர விரும்பிய பொது சட்டமானது முதலில் இந்துக்கள் அனைவருக்குமான ஒரு பொது சட்டம் பற்றியதாகும். அதையே மிக சாமர்த்தியமாக இந்தியர்கள் அனைவருக்குமான இந்துத்துவா சாயல் கொண்ட பொது சட்டமாக கொண்டுவரும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். அதைக்குறித்து அவரும் தான் விருப்பத்திற்கு மாறாக செயல்பட நிர்ப்பந்திக்கப்பட்டதாக தெரிவித்ததை கவனிக்க வேண்டும்.

இதன் தொடர்ச்சியாகத்தான் “நான் தலைமையேற்று உருவாக்கிய சட்டத்தை கொளுத்துவதிலும் நானே தலைமை வகிக்க விரும்புகிறேன்’‘ என சூளுரைத்தார். ஆகவேதான் இந்த சட்டத்தின் பெரும்பாலான கூறுகள் மேல்தட்டு மக்களுக்கு ஏற்றதாக உள்ளது விளங்கும்.

இன்று அம்பேத்கரை வாஞ்சையோடு போற்றிதிரியும் இந்துத்துவா கும்பல்கள் “ராமனும் கிருஷ்ணனும் ஓர் புதிர் “எனும் அம்பேத்கரின் நூலை தடை செய்யக்கோரி தீக்கிரையாக்கினார்கள்.

மராட்வாட பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை வைத்ததை எதிர்த்து சிவசேனாவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் பெரும் கலவரங்களை நடத்தியதோடு தலித் சமூகத்தவர்கள் பல பேர்களை கொலை செய்தும் பல்வேறு சேரிகளுக்கு தீவைத்தும் கூத்தாடினார்கள். கொழுத்தப்பட்டது சமூகநீதி. இந்த வன்முறைகளின் உச்சகட்டமாக அந்த அறிவுப்பகலவனின் சிலைக்கு செருப்புமாலை போட்டனர். இந்த அடாவடி நடவடிக்கைகளை கண்டித்து அறவழி போராட்டம் நடத்திய ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்கும்விதமாக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவிகள் 13 பேர்களை கொன்று குவித்தது மஹாராஷ்ட்ரா அரசு.

இவ்வாறாக, பல்வேறு அவமானங்களையும் அம்பேத்கருக்கு ஏற்படுத்தி அவரை சிறுமை செய்த பாசிச கூட்டம் தற்போது வரவிருக்கும் பீகார் தேர்தலையும் தமிழகத்தையும் கருத்தில் கொண்டு அம்பேத்கர் புகழ்பாட தலைபட்டுள்ளது அவர்களின் குள்ளநரி தந்திரத்தை காட்டுவதாகவுள்ளது.

இறுதியாக, நாம் கூறுவது அம்பேத்கர் ஒருபோதும் தன்னை ஒரு இந்துவாக வெளிப்படுத்தவில்லை. 1935ல் யோக மாநாட்டில் பேசியபோது மக்கள் திரள் முன்பாக நான் ஒரு இந்துவாக பிறந்துவிட்டேன். ஆனால், ஒருபோதும் இந்துவாக மரணிக்க மாட்டேன் என்றார். சொன்னபடியே அவர் இறப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பு தனது ஆதரவாளர்களுடன் புத்த மதம் தழுவினார்.

புத்தமதமானது அரசியல் சட்டம் 25ன் படி இந்துமத பிரிவாக வைத்து பார்க்கப்பட்டாலும்..

புத்தமதமோ இஸ்லாம் வருவதற்கு முன் ஒடுக்கப்பட்டவர்களின் ஒரே புகலிடமாக இருந்துள்ளது. ஆதலால்தான் ஞான சம்பந்தர் போன்ற சைவர்களும் வடகலை நாமம் போடும் வைணவர்களும் புத்த மதத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தினார்கள். சமணர்களை கழுவேற்றி கொன்றார்கள். எனவே, சட்டத்தின்படி புத்தமதம் இந்துமத பிரிவுகளில் ஒன்றெனினும் வரலாற்று யதார்த்தம் அப்படியல்ல.

அம்பேத்கர் சிலைக்கு மாலைபோடும் தலைவர்கள் அவர்தம் மக்களை மனிதர்களாக வாழ விடுங்கள்.

அம்பேத்கர் சிலையை கூண்டுக்குள்ளும் அவரது சித்தாந்தங்களை காவிக்குள்ளும் அடைக்காதீர்கள்.

தீண்டாமை அறவே ஒழிக்கப்படாமல் தலித்துகளின் வாக்குகளை பறிக்க வேடம் தரிக்காதீர்.

(மே 2015 இதழில் வெளியான கட்டுரை)

Comments are closed.