அயோத்தியில் ஆயுத பயிற்சி நடத்திய பஜ்ரங்தள் தலைவர் கைது

0

கடந்த மே 14 ஆம் தேதி அயோத்தியாவில் உள்ள கர்சேவக்புரம் என்ற பகுதில் வைத்து விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் பிரிவான பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு ஆயுதப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த ஆயுதப் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களுக்கு துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துவது எப்படி என்கிற பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த பயிற்சி முகாமில் தலையில் தொப்பி அணிந்த ஒருவரை சுட்டுக்கொல்வது போன்று ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது. இது பல தரப்பு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்பொழுது இத்தகைய பயிற்சி மூலம் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்ததற்காக அப்பகுதி பஜ்ரங்தள் அமைப்பு தலைவர் மகேஷ் மிஸ்ராவை நேற்று (புதன் கிழமை) கைது செய்துள்ளது காவல்துறை. இதனை ஃபைசாபாத் டி.ஐ.ஜி. வி.கே.கார்க் உறுதி செய்துள்ளார்.

இந்நிகழ்வு குறித்து பஜ்ரங்தள் அமைப்பினர் மீது துணை ஆய்வாளர் ஸ்ரீநிவாஸ் பாண்டே புகாரளித்துள்ளார். பஜ்ரங்தள் அமைப்பினர்கள் மீது அயோத்தியா காவல் நிலையத்தில் IPC 153-A பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காவல்நிலைய அதிகாரி, “முதல் தகவல் அறிக்கையின் படி, இந்த பயிற்சியில் ஈடுபட்டவர்களில் ஒரு குழுவினர் முஸ்லிம் தீவிரவாதிகள் போன்றும் மற்றொரு பிரிவினர் பாரதி சேனா என்றும் பிரிந்து பயிற்சி எடுத்துள்ளனர். இது குறித்து விசாரணை செய்யும் அதிகாரி இந்த பயிற்சியின் வீடியோவை சம்பந்தப்பட்ட ஊடகங்களில் இருந்து பெற்றுகொள்வார். அந்த வீடியோ எங்கள் கைகளில் கிடைத்ததும் நாங்கள் அதில் தொடர்புடையவர்களை கண்டறியும் பணியில் ஈடுபடுவோம்” என்று கூறியுள்ளார்.

பஜ்ரங்தள் அமைப்பின் ராகேஷ் வெர்மா அவர்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

உத்திர பிரதேச ஆளுநர் ராம் நாயக் இந்த பயிற்சியில் எந்த தவறும் இல்லை என்றும் இன்னும் இத்தகைய பயிற்சியின் பின்னால் உள்ள நோக்கங்களைதான் நாம் கவனிக்க வேண்டும் என்றும் தற்காப்பு பயிற்சி என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையானது என்றும் கூறியுள்ளார். பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்ததும் இயன்ற வரையில் அனைத்து மாநில ஆளுநர் பதவியிலும் தங்களின் ஆதரவாளர்களை நியமித்து வருகிறது. சமீபத்தில் டில்லி தேர்தலில் பா.ஜ.க சார்பாக போட்டியிட்ட கிரண் பேடி புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கபப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.