அரசியல் சாசன விழுமியங்களை மீட்டெடுப்போம்

0

– செய்யது அலீ

இவ்வாண்டு முதல் நவம்பர் 26 அரசியல் சாசன தினமாக கடைப்பிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.1949 நவம்பர் 26-ஆம் தேதி இந்தியாவின் அரசியல் சாசனம் அங்கீகரிக்கப்பட்டது.இதனை நினைவு கூற இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.பீகார் தேர்தலின்போது நரேந்திரமோடி இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டார்.அரசியல் சாசனம் கூறும் விழுமியங்களையும், தத்துவங்களையும், கொள்கைகளையும் மீற முற்படுபவர்களே அரசியல் சாசன தினத்தை கடைப்பிடிக்க தீர்மானித்திருப்பது முரண் நகை.ஒரு நாட்டின் சமூக ஒழுங்கை உருவாக்குவதில் அரசியல் சாசனத்திற்கு அதற்கே உரிய முக்கியத்துவம் உண்டு.நாட்டின் அரசியல் சாசனத்திற்கும், மக்களுக்கும் இடையேயான உறவு, அரசின் அதிகாரங்கள், வரம்புகள், மக்களின் உரிமைகள், கடமைகள் இவையெல்லாம் சிறந்த அரசியல் சாசனத்தின் சிறப்புகளாகும்.

நமது அரசியல் சாசனம் அங்கீகரிக்கப்பட்டு 66 ஆண்டுகள் நிறைவுறுகிறது.இன்றும் அதன் முக்கியத்துவம் குறையவில்லை.மாறாக, நரேந்திரமோடி போன்ற ஆட்சியாளர்களின் அத்துமீறல்களுக்கு ஒரு தடைக்கல்லாக நிற்கிறது என்பதுதான் உண்மை.உலகின் பல நாடுகள் மன்னர் ஆட்சியிலும், சர்வாதிகார ஆட்சியிலும் திக்குமுக்காடும்போது நமது தேசம் ஒரு இறையாண்மை, சோசியலிச, மதச் சார்பற்ற, ஜனநாயக குடியரசு என்று அரசியல் சாசனம் பிரகடனப்படுத்துகிறது.இந்திய குடிமக்களுக்கு சுதந்திரம் – சிந்தனை, கருத்துரைத்தல், நம்பிக்கை, சமய உணர்வு மற்றும் வழிபாடு இவற்றுக்கான சமத்துவம் – படிநிலை மற்றும் வாய்ப்புகளுடன் அனைவரையும் மேம்படுத்துதல் மற்றும் சகோதரத்துவத்திற்கும் உறுதி அளிக்கிறது.நாட்டை ஆளும் அரசுகளின் கடமையும் மேற்கூறிய தத்துவங்களின் அடிப்படையில் செயல்படுவதாகும்.உலகின் பல நாடுகளும் சுதந்திரம் கிடைத்து சொந்தமாக அரசியல் சாசனத்தை நிர்மாணித்து பல ஆண்டுகளுக்கு பின்னரே பெண்களுக்கு வாக்குரிமையை அளித்தன.ஆனால், இந்தியாவில் அரசியல் உருவாக்கத்தின் போதே ஆண்-பெண் பாரபட்சமில்லாமல் அனைத்து குடிமக்களுக்கும் அரசியல் அதிகாரமும், சமூக நீதியையும் அடைவதற்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடும், மொழி-மத சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகையையும் அரசியல் சாசனம் உறுதி அளிக்கிறது.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றை பரிசோதித்தால், அரசியல் சாசனத்தையும், அரசியல் சாசன தத்துவங்களையும் யாரெல்லாம் மீற முயன்றார்களோ, அவர்கள் எவ்வளவுதான் நல்ல காரியங்களை செய்தாலும், அவர்களுக்கு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மக்கள் பாடம் கற்று தந்துள்ளார்கள் என்பது தெரியவரும்.வங்கிகள் தேசியமயமாக்கல், பசுமை புரட்சி உள்பட பல்வேறு சாதனைகளை புரிந்தபோதிலும் 1975-ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தியதன் விளைவாக அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திரா காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் தோற்கடித்து மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.கருத்து சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், உண்ணுவதற்கான சுதந்திரம் உள்ளிட்ட மதச்சார்பற்ற பாரம்பரியங்களுக்கெல்லாம் இன்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.இத்தகைய அரசியல் சாசன தத்துவங்களை பாதுகாப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் கடமைப்பட்டுள்ள மத்தியில் ஆளும் அரசோ இந்தியாவின் மதச் சார்பற்ற பாரம்பரியத்தையும், இதர தத்துவங்களையும் சீர்குலைக்கும் அமைப்புரீதியான முயற்சிகளுக்கு ரகசியமாகவும், வெளிப்படையாகவும் ஆதரவளித்து வருகிறது.சுதந்திரமான கருத்துக்களை வெளியிட்டதற்காக நரேந்திர தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோர் கொல்லப்பட்டனர்.கே.எஸ்.பகவான், ஷாருக்கான், கிரிஷ் கர்னாட், ஆமிர் கான் ஆகியோர் அச்சுறுத்தப்படுகின்றனர்.இவர்களெல்லாம் பிரபலங்கள் என்பதால் சமூகத்திற்கு செய்திகள் சென்று சேருகிறது.ஆனால், பிரபலம் இல்லாத எத்தனையோ சாதாரண மக்கள் கருத்து பிரகடனத்தின் பெயரால் கொலைச் செய்யப்படுகின்றனர், மிரட்டல்களை சந்திக்கின்றனர்.

சமூக நீதியை நடைமுறைப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட முயற்சிகள் நடக்கிறது.வாக்கு வங்கி அரசியலுக்காக. குறுகிய நலன்களுக்காகவும், இந்துத்துவா பாசிச சக்திகளின் ஆசை வார்த்தைகளில் மயங்கி அவர்களின் பின்னால் செல்வதற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளான சில அரசியல் கட்சிகள் எத்தனிக்கின்றன.உயர் கல்வியும், போதுமான தகுதிகளும் இருந்தபோதும் தனக்கு ஏற்பட்ட புறக்கணிப்பு இனி வளரும் தலைமுறைகளுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அரசியல் சாசனத்தின் மிக முக்கிய நோக்கங்களாக  சமூக, பொருளாதார, அரசியல்ரீதியான நீதியை அதன் முகப்புரையிலேயே குறிப்பிட்டார்.பீகார் தேர்தலில் நரேந்திரமோடிக்கும், பா.ஜ.கவுக்கும் ஏற்பட்ட தோல்வி, 1975-இல் இந்திரா காந்திக்கு ஏற்பட்ட தோல்வியின் மறு பிரதிபலிப்பாகும்.அரசியல் சாசனத்தின் அந்தஸ்திற்கு யார் இழுக்கை ஏற்படுத்த முயற்சித்தாலும் அவர்கள் இறுதியில் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதே உண்மை.

வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு நாட்டை ஒற்றுமையை நோக்கி வழி நடத்தவேண்டும் என்பதையே அரசியல் சாசனம், ஆட்சியாளர்களுக்கு கூறும் அறிவுரையாகும்.ஆகையால், வேற்றுமைகளை பாகுபடுத்துவது அல்ல, மாறாக அவற்றை அங்கீகரித்து அவற்றிற்கு இடையே ஐக்கியத்தையும், வளமான வாழ்வையும் உறுதிச் செய்வதே அரசின் கடமையாகும்.பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் நிலையான ஒரு அரசியல் சாசனத்தை வடிவமைத்த அரசியல் சாசன மன்றத்தின் உறுப்பினர்களை இந்நாளில் நினைவுக் கூர்வோம்.தற்போதைய அரசு, அரசியல் சாசனத்தின் விழுமியங்கள் என்ன? என்பதுக் குறித்து மதிப்பீடுச் செய்வதற்கான ஒரு வாய்ப்பு இந்த சட்ட தினம்!

Comments are closed.