அரசு இணையதளங்களில் அதிகரிக்கும் ஆதார் தகவல் கசிவுகள்

0

கடந்த மூன்று நாட்களில் குறைந்தபட்சம் மூன்று வெவ்வேறு அரசாங்க சேவைகள் தங்கள் பயனாளிகளின் ஆதார் தகவல்களை தங்களின் சொந்த துறையின் வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளன. இது போன்ற இன்னும் இரண்டு சம்பவங்கள் செவ்வாயன்று நடைபெற்றுள்ளது.

முதலாவதாக, மத்திய அமைச்சகத்தின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு  துரையின் கீழ் உள்ள பிரதான் மன்டி அவாஸ் யோஜனா (PMAY) திட்ட பயனாளிகளின் ஆதார் எண்கள் அத்துறையின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக, குஜராத் அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களின், பெயர்கள், முகவரிகள் மற்றும் ஆதார் எண்கள் அடங்கிய  இரண்டு ஆவணங்கள் அனைவரும் காணும் வகையில் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

PMAY வை பொறுத்தவரை அதன் வலைதளத்திந தேடுபொறியில் ஏதேனும் ஒரு எண்ணை உள்ளிடுவதன் மூலம் அந்த ஆதார் எண்ணுக்குரிய பயனாளிகளின் பெயர், தந்தை பெயர், அவரின் முகவரி, வயது, சாதி, இன்னும் சில பயனாளிகளின் புகைப்படம் உட்பட அனைத்து தகவல்கலும் காணக் கிடைக்கின்றன.

குஜராத்தில், 2013-14 ஆம் ஆண்டில் சிறுபான்மை சமூகங்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பின் கீழ் உதவித்தொகை பெற்ற 32,979 மாணவர்களின் பட்டியல் மற்றும் அதே ஆண்டுக்கான Merit-cum-Means கல்வி உதவித்தொகை பெற்ற 2,607 மாணவர்களின் பட்டியல் சமூக நீதித் துறையின் வலைத்தளத்தில் எளிதில் காணக்கிடைக்கின்றது.

இந்த இரு பட்டியல்களிலும், பல மாணவர்களின் ஆதார் எண்கள், அவர்களது பெயர், முகவரி, மொபைல் போன் எண், பெற்றோரின் பெயர்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் அவர்கள் படிக்கும் நிறுவனங்களின் பெயர்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களில், சண்டிகரில் PDS பயனாளிகளின் ஆதார் எண், நீர் மற்றும் சுத்திகரிப்பு அமைச்சின் கீழ் ஸ்வத் பாரத் மிஷன் பயனாளிகளின் ப்ரோவிடென்ட் ஃபண்ட், மற்றும் ஜார்கண்ட் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஓய்வூதியத்தை பெரும் லட்சக்கணக்கானோர் குறித்த தகவல் ஆகியன அந்த  துறைகளின் வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் இன்ன பிற செய்தி நிறுவனங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் ஏப்ரல் மாதம் மட்டுமே இது போன்று ஒன்பது சம்பவங்கள் நாட்டின் வெவ்வேறு அரசுத் துறைகள் மூலம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இது போன்ற தகவல்களை வெளியிட்ட அரசு இணையதளங்களின் பட்டியலில் பஞ்சாம் சிறுபான்மை நலத்துறை, பீகார் சிறுபான்மை நலத்துறை, மகாத்மா ஜோதிபா பூலே தெலுங்கானா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கேரளா கல்வி ஊக்கத்தொகை, காதி மற்றும் கிராம தொழிற்ச்சாலை ஆணையம், கேரளா முதியோர் உதவித்தொகை தளம் ஆகிய இணையதளங்கள் அடக்கம்.

ஆதார் தகவல்களை வெளியிட்ட இணையதளங்களில் பல இணையதளங்களை சார்ந்த துறைகளுக்கு இந்த தகவல் கசிவு குறித்து தகவல் அளிக்கப்பட்டாலும் அவை இன்னும் சரி செய்யப்படாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. முன்னதாக இது போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதார் தகவல்கள் கசியவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.