அரசு தரப்பு வழக்கறிஞர் ரோஹினி சாலியன் நீக்கம் குறித்து என்.ஐ.ஏ, மத்திய-மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

0

புதுடெல்லி:இந்துத்துவ தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ, மத்திய அரசு மற்றும் மஹராஷ்ட்ரா மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இவ்வழக்கில் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞரான ரோஹினி சாலியனை அப்பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கில் நீதிமன்றம் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது.நீதிபதிகள் ஜே.செலமேஷ்வர், ஏ.எம்.சப்ரே அடங்கிய பெஞ்ச் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸை அனுப்பியுள்ளது.

நரேந்திரமோடி தலைமையிலான அரசு இவ்வழக்கில் தேவையில்லாமல் தலையிடுவதாக சுட்டிக்காட்டி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட நபருடைய தந்தையும், சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தரும் பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தனர்.மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மிருதுவான அணுகுமுறையை கடைப்பிடிக்குமாறு தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ரோஹினி சாலியான் குற்றம் சாட்டியிருந்தார்.
அதேவேளையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்கு தடை விதிக்குமாறு வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்ஷ்வால், கபில் சிபல் ஆகியோர் எழுப்பிய கோரிக்கையை அங்கீகரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.அரசு தரப்பு வழக்கறிஞர் இல்லாதபோது அவருடைய அனுமதி இல்லாமல் குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு ஜாமீன் வழங்கியதைக் குறித்து வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த நீதிபதிகள் அமர்வு, இவ்விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் என்.ஐ.ஏவின் பதிலை பெற்றபிறகு குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் ஜாமீன் ரத்துச் செய்யப்படும் என்று தெரிவித்தது.

Comments are closed.