அரசு மருத்துவமனையில் இரத்தம் செலுத்தப்பட்டதில் கர்ப்பிணி பெண்கள் பலி: PFI கண்டனம்!

0

தருமபுரி அரசு மருத்துவமனையில் இரத்தம் செலுத்தப்பட்டதில் கர்ப்பிணி பெண்கள் பலி, தொடரும் அவலம் : பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

கடந்த நான்கு மாதங்களில் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தருமபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் ஓசூர் பகுதிகளை சார்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு கெட்டுப்போன இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது, இந்த இரத்தம் ஏற்றப்பட்டத்தில் பதினைந்து கர்ப்பிணி பெண்கள் இதுவரை இறந்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆய்வக ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் தலைமை மருத்துவர் என அனைவரின் மீதும் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்து தண்டிக்கப்பட வேண்டும் எனும் குரல் ஒலிக்கத் துவங்கியுள்ளது. இது முதல் முறை அல்ல, கடந்த முன்று மாதத்திற்கு முன்பாகவும், இதே போல விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களின் அலட்சியத்தால், அங்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எய்ட்ஸ் தொற்றுள்ள இரத்தம் ஏற்றப்பட்டது. சில பொறுப்பற்ற அரசு ஊழியர்களின் அலட்சியத்தால் ஒரு ஏழை பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்பட்டது. இதே நிலை நீடித்தால் அரசு மருத்துவமனை என்றாலே பாமர மக்களுக்கும் அச்சம் நிலை தான் ஏற்படும்.

அரசு மருத்துவமனையில் நடக்கின்ற இது போன்ற அலட்சிய போக்கு ஒருபுறமென்றால், தமிழகத்தில் உள்ள பலவேறு அரசு மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு சரிவர இல்லாத நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. அதில் குறிப்பாக உள்நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் இல்லை, சுகாதாரமற்ற மருத்துவமனை வளாகமே நோய்களின் கூடாரமாக மாறியுள்ளது. மேலும் நோயாளிகளை கவனிக்கவும், மருத்துவம் செய்யவும் போதுமான மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாத அவல நிலையில் ஏழை பொது மக்களின் மருத்துவ சேவை பெறுவது என்பது கானல் நீராக மாறி வரும் சூழல் நிலவுகின்றது.

கல்வியும், மருத்துவமும் இலவசமாக வழங்குவது அரசின் அடிப்படை கடமை எனும் போது, இலவசமாக தரப்படுகின்றவை தரமற்றவையாக தான் இருக்கும் எனும் நிலையை நிச்சயமாக மாற்றப்பட வேண்டும். இது போன்ற தரமற்ற மருத்துவம் தொடரும்பட்சத்தில், ஏழை எளிய மக்கள் வேறு வழியின்றி கார்ப்பரேட்களின் மருத்துவமனைகளை நோக்கி தள்ளப்படுவார்கள். அரசு தனது கடமையை செய்யத்தவறும்பட்சத்தில், கார்ப்பரேட்களால் ஏழைகள் உயிர் பயம் காட்டப்பட்டு சுரண்டப்படுவார்கள். எனவே உயிர்களை அலட்சியமாக கருதக் கூடிய மருத்துவமனை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துவதோடு, அனைத்து தரப்பு மக்களும் மருத்துவ சேவையை பெறும்படி அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை சீர் செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளின் மீது பொது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிறந்த மருத்துவர்களையும், சேவை மனப்பான்மையுள்ள ஊழியர்களையும் அரசு நியமிக்க வேண்டும். தருமபுரி அரசு மருத்துவமனை ஊழியர்களின் மெத்தன போக்கை கண்டிப்பதோடு, இனியேனும் இவ்விஷயத்தில் தமிழக அரசு உரிய கவனமெடுத்து நிர்வாகத்தை சரி செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு

அ. முஹம்மத் ஃபயாஸ்,
மாநில செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமழ்நாடு.

Comments are closed.