அருணாசல பிரதேசம்: ஆயுத படைகள் சிறப்பு சட்ட பிரகடனத்திற்கு முதல்வர் எதிர்ப்பு

0

அருணாசல பிரதேசத்தின் பன்னிரெண்டு மாவட்டங்களை பிரச்சனைக்குரிய மாவட்டங்களாக அறிவித்துள்ள மத்திய அரசு அந்த மாவட்டங்களில் ஆயுத படைகள் சிறப்பு சட்டத்தை அமலுக்கு கொண்டுவந்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அம்மாநில முதல்வர் நபாம் டூகி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய அரசாங்கம் எவ்வித கலந்தாலோசனையும் செய்யாமல் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். இந்த மாவட்டங்களில் தீவிரவாத நடவடிக்கைகள் உச்சகட்டத்தில் இருப்பதால் ஆயுத படைகள் சிறப்பு சட்டத்தை கொண்டு வந்ததாக மத்திய அரசாங்கம் கூறியது. ஆனால் இதனை மறுத்துள்ள மாநில அரசாங்கம் இந்த மாவட்டங்கள் அனைத்தும் அமைதியாக உள்ளதாக பதில் கூறியுள்ளது.
மூன்று மாவட்டங்களில் மட்டும் தீவிரவாத பிரச்சனைகள் உள்ளதாகவும் மற்ற மாவட்டங்கள் அமைதியாக உள்ளதாகவும் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள 19 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் ஆயுத படைகள் சிறப்பு சட்டத்தின் கீழ் வந்துவிடும்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த மாநில முதல்வர் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார். மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநில மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.