அர்னாபின் கைதும் நெருக்கடி நிலையும்!

0

அர்னாபின் கைதும் நெருக்கடி நிலையும்!

ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனலின் நிறுவனர் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மகாராஷ்டிரா அரசு கைது செய்த நடவடிக்கை நெருக்கடி நிலையை நினைவூட்டுவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். பாசிச நடவடிக்கை என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனத்தை உதிர்த்துள்ளார். ஒரு பத்திரிகையாளருக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையை கையாண்டால் நாளை பலரும் இதே அணுகுமுறையை கையாளுவார்கள் என்று பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்களின் குழாமே இந்த கைதை கடுமையாக கண்டித்துள்ளது. ஆனால், இவர்கள் கூறும் நெருக்கடி நிலையும், பாசிச நடவடிக்கையும் நாட்டில் முதல் சம்பவமல்ல.

உத்தர பிரதேசம் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஏற்கனவே ஏராளமான பத்திரிகையாளர்கள் கைது, தாக்குதல், கொலை என பல அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். அன்றெல்லாம் பா.ஜ.க.வினரின் கருத்து சுதந்திர உணர்வு மோலோங்கியதாக காண முடியவில்லை. ‘ஜனநாயகத்தை மூச்சுத்திணறச் செய்யும் அரசின் அமைச்சர்கள் நெருக்கடி நிலையை குறித்து கூக்குரல் எழுப்புவது அதிசயம்தான்’ என்று இதைக் குறித்து பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதுதான் உண்மை.

கடந்த ஆகஸ்டு 17-ஆம் தேதி பத்திரிகையாளர் பிரசாந்த் ஜகதீஷ் கனோஜியாவை டெல்லியில் அவரது வீட்டில் வைத்து உ.பி. காவல்துறை கைது செய்தது. தனக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் இடையே தொடர்பு இருந்ததாக ஒரு பெண்ணின் பேட்டியை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டதால் கனோஜியா கைது செய்யப்பட்டார். பின்னர் உச்சநீதிமன்றம் தலையிட்டு அவரை விடுவித்தது.

தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட ஹத்ராஸிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சித்தீக் காப்பன் உள்ளிட்டோர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (ஹிகிறிகி) கீழ் கைது செய்யப்பட்டுளளனர். மீர்ஸாபூர் அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு மதிய உணவாக சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு மட்டுமே வழங்கப்படுவதை வீடியோவில் பதிவு செய்ததாக உ.பி. காவல்துறை கடந்த ஆண்டு பத்திரிகையாளர் பவன் குமார் ஜெய்ஸ்வாலின் மீது வழக்கை பதிவு செய்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சட்டீஸ்கரில் மூத்த பத்திரிகையாளரும், எடிட்டர்ஸ் கில்ட் உறுப்பினருமான வினோத் சர்மாவை காவல்துறை கைது செய்தது. ஒரு அமைச்சரின் பாலியல் வன்முறைகள் குறித்து புலனாய்வு நடத்தியதன் பெயரில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு எத்தனையோ பத்திரிகையாளர்கள் பா.ஜ.க. அரசின் கீழ் கைது செய்யப்பட்டு துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

ஆனால், அர்னாபின் கைது பத்திரிகை தொழில் சார்ந்தது அல்ல. கட்டிட உட்புற வடிவமைப்பாளர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாயார் மரணித்த வழக்கில் அவர்களை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டின் பெயரில் அர்னாப் கைது செய்யப்பட்டார். அன்வாய் நாயக்கும், அவரது தாய் குமுத் நாயக்கும் 2018 மே மாதம் அலிபாகில் உள்ள பண்ணை வீட்டில் மரணித்த நிலையில், அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அர்னாப் கோஸ்வாமி,ஐகாஸ்ட் எக்ஸ்- ஸ்கீ மீடியா உரிமையாளர் ஃபெரோஸ் ஷேக், ஸ்மார்ட் ஒர்க் உரிமையாளர் நிதேஷ் சர்தா ஆகியோர் தனக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை செலுத்தாததால் நிதி நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டதாக அன்வாய் நாயக் எழுதிய கடிதத்தை காவல்துறையினர் அங்கிருந்து கண்டெடுத்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய மகாராஷ்டிரா காவல்துறை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை முடித்துக்கொண்டது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி அன்வாய் நாயக்கின் மகள் அதன்யா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு அளித்த புகாரின் அடிப்படையில் மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை கேட்டுக்கொண்ட பிறகும் அர்னாப் மறுத்துவிட்டார். இதனால் மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்து காவல்துறை கைதுசெய்தது. அர்னாபை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அவர் தாக்கல் செய்த பிணைக்கான மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மேலும் அவர் மீது சோனியா காந்தி மீதான அவதூறு, புலம்பெயர் தொழிலாளர்கள் மஸ்ஜிதுக்கு முன்பாக போராட்டம் நடத்தியது தொடர்பாக முஸ்லிம்கள் மீதான வெறுப்பு பேச்சு, டி.ஆர்.பி. மோசடி முதலான வழக்குகளும் உள்ளன. அர்னாபை கைது செய்த காவல்துறை குழுவில் இடம்பெற்றிருந்த பெண் அதிகாரியிடம் அவர் அவமரியாதையாக நடந்து கொண்டதாக புதியதொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அர்னாபிற்கு எதிரான உத்தவ் தாக்கரேயின் பழிவாங்கும் நடவடிக்கை இது என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் ரிபப்ளிக் தொலைக்காட்சி மகாராஷ்டிரா அரசு மற்றும் காவல்துறை மீது கடுமையாக விமர்சனம் எழுப்பியதை தொடர்ந்து இந்த பகை தீவிரமடைந்தது. இதன் பின்னர் உத்தவ் தாக்கரேயை இழிவுப்படுத்தும் வகையில் ரிபப்ளிக் தொலைக்காட்சி செய்திகளை ஒளிபரப்பியதை தொடர்ந்து அந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பை புறக்கணிக்குமாறு கேபிள் ஆபரேட்டர்களுக்கு சிவ சேனா அழைப்பு விடுத்தது.

வழக்குகளை பயன்படுத்தி அரசியல் பகையை தீர்த்துக்கொள்ளும் போக்கும் இந்நாட்டில் இது முதல் தடவை அல்ல. எதிர்கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அதிகாரிகள், அமைப்புகள் முதலான எத்தனையோ நபர்களை பா.ஜ.க. அரசு வேட்டையாடி வருகிறது. மத்திய புலனாய்வு ஏஜன்சிகள் மத்திய பா.ஜ.க. அரசின் கைப்பாவைகளாகவே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அர்னாபின் கைது மட்டும் பா.ஜ.க.வினருக்கு நெருடலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது என்றால் அதன் பின்னணியில் அர்னாப் சங்பரிவாரின் ஏஜண்ட் என்பதை தவிர வேறு எந்த காரணமும் கிடையாது.

Comments are closed.