அலஹாபாத் உணவகத்தில் தலித் இளைஞர் அடித்துக் கொலை

0

அலஹாபாத்தில் உள்ள ஒரு உணவகத்தில் திலிப் சரோஜ் என்ற தலித் இளைஞர் நான்கு நபர்களால் மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர் கோமா நிலைக்கு சென்று உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலானதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அலஹாபாத் பலகலைகழகத்தில் LLB இரண்டாம் ஆண்டு பயின்று வந்தவர் திலிப் குமார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை உணவகம் ஒன்றில் உணவருந்த சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட தகராறில் உணவக ஊழியர்கள் இவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட காயத்தினால் இவர் சனிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிகிறது, இரண்டு காவல்துறையினர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து அனைத்திந்திய மாணவ சங்கத்தை சேர்ந்த பல்கலைகழக மாணவர்கள் திங்களன்று போராட்டங்களில் ஈடுபட்டனர். தங்களில் போராட்டத்தின் போது பாஜக அரசு எதிர்ப்பு கோஷங்களையும், காவல்துறைக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பிய அவர்கள் மாவட்ட மாஜிஸ்திரேட் சுகாஸ் LY வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்திற்கு முறையான நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள BSP தலைவர் மாயாவதி, “தலித் இளைஞரின் இந்த காட்டுமிராண்டித்தனமான கொலை ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல, இது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிகழ்வுகளில் ஒரு பகுதி.   இத்தாக்குதலுக்கு காரணம் பாஜக அரசு ஆதரித்து வளர்த்து வரும் சாதிய அரசியல் தான்.” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த கொலை தொடர்பாக உத்திர பிரதேச சட்டமன்றத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் அஹமத் ஹசன், தலித் சமூக மக்கள் மீதான இது போன்ற வன்முறை நிகழ்வுகள் நாடு முழுவதும் நடைபெறுகிறது என்றும் ஆனால் அரசு இது குறித்து மவுனம் காக்கிறது என்றும் கூறியுள்ளார். மாநிலம் குற்றவாளிகளின் கையில் இருப்பதை இந்த கொலை காட்டுகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.