அலீமுதீன் அன்சாரி வழக்கு – ஒன்பது நபர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதி மன்றம்

0
அலீமுதீன் அன்சாரி வழக்கு – ஒன்பது நபர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதி மன்றம்
ஜார்கண்டின் ராம்கார்க்கை சேர்ந்த அலீமுதீன் அன்சாரி என்பவரை  சென்ற வருடம் ஜூன் 29 அன்று மாட்டிறைச்சியை கொண்டு சென்றார் என்று குற்றம்சாட்டி பசு பயங்கரவாதிகள் அடித்துக் கொலை செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் மார்ச் மாதம் இந்த வழக்கில் தொடர்புடைய 11 நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.(பார்க்க செய்தி) வழக்கில் தொடர்புடைய 12வது நபர் சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தார்.  பசு பயங்கரவாதிகள் தொடர்புடைய வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டதில் முதல் வழக்காக இந்த வழக்கு திகழ்ந்தது. பசு பயங்கரவாதிகளின் கொடூரத்தில் நாடு சிக்கியுள்ள நிலையில் இத்தீர்ப்பு மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் விதத்தில் அமைந்திருந்தது.

ஆனால் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் எட்டு நபர்களின் தண்டனையை நிறுத்தி வைத்து அவர்களுக்கு பிணையும் வழங்கியுள்ளது. அலீமுதீன் கொலை செய்யப்பட்டு சரியாக ஒரு வருடம் கழித்து வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. ஊடக பிரிவின் மாவட்ட பொருப்பாளர் நித்யானந்த் மகாதோ, ரோகித் தாகூர், கபில் தாகூர், ராஜூ குமார், சந்தோஷ் சிங், விக்கி சாவ், சிக்கந்தர் ராம் மற்றும் உத்தம் ராம் ஆகியோருக்கு நீதிபதிகள் ஹெச்.சி.மிஸ்ரா மற்றும் பி.பி.மங்கல்மூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாமீன் வழங்கியுள்ளது.

வழக்கில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் ஹசாரிபாக் தொகுதி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான ஜெயந்த் சின்ஹாவை சந்திக்க சென்ற போது குற்றவாளிகளுக்கு அவர் மாலை அணிவித்து கௌரவித்தது கண்டனங்களை பெற்றுள்ளது. விரைவு நீதிமன்றத்தின் தீர்ப்பில் தனக்கு சந்தேகம் இருந்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்றும் கூறி தனது செயலை நியாயப்படுத்தி வருகிறார் ஜெயந்த் சின்ஹா.
ஜூலை 8 அன்று ஒன்பதாவது குற்றவாளியான விக்ரம் பிரசாத்திற்கும் நீதிமன்றம் பிணை வழங்கியது. மற்றவர்களுக்கு பிணை வழங்கிய அதே அடிப்படையிலேயே இவருக்கும் பிணை வழங்கப்பட்டதாக கூறிய வழக்கறிஞர் பி.எம். திரிபாதி சிறையில் உள்ள மற்ற இருவருக்கான ஜாமீன் மனுக்களையும் விரைவில் தாக்கல் செய்யவுள்ளதாக கூறினார்.

Leave A Reply