அலீமுத்தீன் வழக்கு: ஒரே சாட்சியின் மனைவி மர்ம மரணம்

0

ஜார்கண்டை சேர்ந்த அலீமுத்தீன் என்பவர் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி பசு குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கான ஒரே சாட்சி ஜலீல் அன்சாரி. அக்டோபர் 12 அன்று நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு சென்றிருந்தார் ஜலீல் அன்சாரி. அப்போது நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு தேவையான அடையாள ஆவணத்தை எடுப்பதற்காக அவர் மனைவி சுலைஹா காத்தூன் வீட்டிற்கு சென்ற போது சாலை விபத்தில் மரணம் அடைந்தார். ராம்கார்க் மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகிலேயே நடைபெற்ற இந்த சாலை விபத்து பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சுலைஹா, அலீமுத்தீனின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினம் ஜலீல் அன்சாரியால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தன்னை தடுப்பதற்கே இந்த சதி அரங்கேற்றப்பட்டுள்ளதாக அன்சாரி குற்றம் சாட்டியுள்ளார். அடையாள ஆவணத்தை கொண்டு வர மறந்ததால் அதனை எடுத்து வருவதற்காக தனது மனைவியை அலீமுத்தீனின் மகனுடன் வாகனத்தில் அனுப்பியுள்ளார் அன்சாரி. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நெருக்கமானவர்கள் தான் நீதிமன்றத்தில் சாட்சியம் கூறக்கூடாது என்று தன்னையும் தனது மனைவியையும் மிரட்டியதாகவும் தனது மனைவி அலீமுத்தீனின் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றவுடன் பின்னால் சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் இவர்களின் வாகனத்தை இடித்துவிட்டு சென்றதாகவும் அன்சாரி குற்றம்சாட்டியுள்ளார்.
வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சுலைஹா சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். தொடர் மிரட்டல்கள் மற்றும் இந்த மரணத்தால் தாங்கள் பயந்துள்ளதாக அலீமுத்தீன் மற்றும் அன்சாரியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Comments are closed.