அவசர பிரிவில் ஜனநாயகம்!

0

அவசர பிரிவில் ஜனநாயகம்!

உலகின் மிகச் சிறந்த ஜனநாயக நாடு என்று நமது இந்தியாவை குறித்து நாம் பெருமை பேசுகிறோம். ஆனால், இனி அவ்வாறு உரிமை கோர முடியாத அளவுக்கு தேசத்தின் சூழல் மாறிவிட்டதாக அண்மையில் வெளிவந்துள்ள ‘தி எக்னாமிஸ்ட் இண்டலிஜன்ஸ் யூனிட்’ என்ற அமைப்பின் அறிக்கை கூறுகிறது. 2019ம் ஆண்டில் உலக அளவில் ஜனநாயகம் சிறந்து விளங்கிய நாடுகளுக்கான தரவரிசையில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51வது இடத்திற்கு பின் தங்கி உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. ஜனநாயக பின்னடைவின் முதன்மைக் காரணம் நாட்டில் சிவில் உரிமைகள் பாதிக்கப்பட்டது தான் என்கிறது அந்த அமைப்பு. தேர்தல் செயல்முறை மற்றும் பன்மைவாதம்; அரசாங்கத்தின் செயல்பாடு; அரசியல் பங்கேற்பு; அரசியல் கலாச்சாரம்; மற்றும் சிவில் உரிமைகள் ஆகிய ஐந்து அம்சங்களை அடிப்படையாக கொண்டு உலக நாடுகளின் ஜனநாயகத்தை ‘தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்’ ஆய்வு செய்துள்ளது. குடியுரிமைக்கு மதத்தை அளவுகோலாக எடுத்துக்கொள்ளும் சட்ட திருத்தம் இந்தியாவின் வரலாற்றில் முதன் முறையாகும் என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.

இத்தோடு இலண்டனிலிருந்து வெளிவரும் ‘தி எக்னாமிஸ்ட்’ இதழின் புதிய பதிப்பில் வெளியான அட்டைப்பட கட்டுரையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற இந்தியா கருத்தாக்கத்தை குடியுரிமை திருத்த சட்டம் ஆபத்தில் தள்ளியுள்ளதாக ”சகிப்புத்தன்மையற்ற இந்தியா” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கட்டுரை கூறுகிறது. பிரதமர் மோடி பிரிவினைகளை தூண்டுவதாக அந்த பத்திரிகை குற்றம் சாட்டுகிறது. 20 கோடி முஸ்லிம்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். வீழ்ச்சியை சந்திக்கும் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்த விவாதங்களிலிருந்து மக்களின் கவனத்தை திருப்புவதே சி.ஏ.ஏ. போன்ற பாரபட்சமான சட்டங்களின் நோக்கம் என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது.

நாடு 71-வது குடியரசு தினத்தை கொண்டாடும் வேளையில் இந்த விமர்சனங்களுக்கு நாம் தீவிர கவனம் கொடுக்க வேண்டியுள்ளது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் ஒரு ஜனநாயக ஆட்சி முறையை நிலை நிறுத்தவும், அரசியல் சாசனத்திற்கு இணங்க செயல்படவும் முடிந்ததை கண்டு உலகம் வியப்படைகிறது. ஜனநாயகம் வீழாமல் பாதுகாப்பதில் அரசியல் சாசனம் முக்கிய பங்கினை வகிக்கிறது. 130 கோடிக்கும் அதிகமான மக்களை ஒன்றிணைப்பதிலும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தை சாத்தியமாக்குவதிலும் இந்திய அரசியலமைப்புக்கு பெரும் பங்கு உண்டு. கருத்து சுதந்திரம், மத மற்றும் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை அரசியலைமைப்பு பெருமளவில் பாதுகாக்கிறது. இவற்றையெல்லாம் இன்றைய ஆளும் வர்க்கம் காலால் மிதித்து தள்ளுகிறது.

அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இந்து ராஷ்ட்ராவிற்கான பயணம் அவ்வளவு எளிதல்ல என்பதை சங்பரிவார சக்திகள் புரிந்து கொண்டதன் விளைவே அதனை பலவீனப்படுத்தும் முயற்சிகள் எனலாம். திட்டக்கமிஷனை கலைத்தது, சுற்றுச்சூழல் அனுமதி விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்தது,  பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்திய முறை, தேசிய கல்வி கவுன்சில் உருவாக்கம், குடியுரிமைக்கு மதத்தை அளவுகோலாக நிர்ணயித்தது முதலான இந்த அரசு கொண்டு வந்துள்ள பல திட்டங்களும், கடைப்பிடிக்கும் கொள்கைகளும் ஜனநாயகத்தின் கண்ணியத்திற்கு இழுக்கை ஏற்படுத்தக்கூடியவை.

ஜனநாயகம் வீழ்ச்சியை சந்திக்கும் அதேவேளையில் மதச்சார்பற்ற சக்திகள் நிராசையடையவும் தேவையில்லை. மதச்சார்பற்ற ஒற்றுமையை சாத்தியமாக்குவதே பாசிச எதிர்ப்பு சக்திகளின் முன்னால் இருக்கும் ஒரே வழி. அதேவேளையில் இதுதான் அவர்களின் முன்னால் இருக்கும் ஒரே சவாலும் கூட.

Comments are closed.