அவுரங்காபாத் ஆயுத வழக்கு: குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் மறுப்பு

0

2006 அவுரங்காபாத் ஆயுத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தற்போது சிறையில் உள்ள ஒரே நபருக்கு ஜாமீன் வழங்க பம்பாய் உயர்நீதி மன்றம் மறுத்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டாக்டர் ஷரீஃப் அஹமது ஏற்கெனவே ஒன்பது வருடங்கள் சிறையில் கழித்து விட்டார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட் முஸ்தாக் அகமது, அஃப்ஸல் கான், ரியாஸ் அகமது மற்றும் ஜாவீது அகமது ஆகியோர் தற்போது ஜாமீனில் உள்ளனர். ஐந்து பெட்டிகள் நிறைந்த வெடிபொருட்களையும் ஆயுதங்களையும் காரில் கடத்தியதாக ஷரீஃப் மீது தீவிரவாத எதிர்ப்பு படை குற்றம்சாட்டியுள்ளது.
மார்ச் மாதம் ஷரீஃபின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. இதனை தொடர்ந்து உயர்நீதி மன்றத்தில் ஷரீஃப் முறையீடு செய்தார். ஆனால் விசாரணை மூன்று மாதங்களில் முடிந்துவிடும் என்று அரசு தரப்பு வக்கீல் தெரிவித்ததை தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டது.
ஆனால் விசாரணை நீடித்து கொண்டு செல்வதால் மீண்டும் ஜாமீன் கோரிக்கையை முன்வைத்தார் ஷரீஃப். மற்ற குற்றம்சாட்டப்பட்டவர்களை போன்றே இவரையும் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரின் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால் நீதிபதி இதனை ஏற்க மறுத்து விட்டார்.
முக்கிய குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் பிலால் என்பவருக்கு ஷரீஃப் நெருக்கமானவர் என்று நீதிபதி அபய் திப்சே தெரிவித்தார். ஆனால் இதனை வைத்து மட்டும் ஷரீஃபை குற்றவாளி என்று கூற முடியாது என்றும் அவர் கூறினார்.
ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி, விசாரணையை தினந்தோறும் நடத்துமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

Comments are closed.