அஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்

0

அஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்

அஸ்ஸாமில் 90%க்கும் அதிகமான விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் அந்த அமைப்பில் இருந்து விலகியுள்ளனர். மேலும் வருகிற 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கும் மோடிக்கும் எதிராக தாங்கள் பிரச்சாரம் செய்யப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பஜ்ரங்தளின் முன்னாள் ஜில்லா தலைவர் தீப்ஜோதி ஷர்மா கூறுகையில், “கவ்ஹாத்தியில் உள்ள மொத்தம் 820 பஜ்ரங்தள் உறுப்பினர்களில் 816 பேர் விலக்கியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் அஸ்ஸாமில் மொத்தமுள்ள 14000 பஜ்ரங்தள் உறுப்பினர்களில் 13900 பேர் விலகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவர் கடந்த மே மாதம் 24ஆம் தேதி சுக்ரேஷ்வர் கோவிலில் நடைபெற்ற ஒரு சந்திப்பிற்கு பிறகு பஜ்ரங்தளில் இருந்து விலகினார். இத்துடன் அஸ்ஸாம் மாநில பஜ்ரங்தள் மாநில செயற்குழுவில் உள்ள 11 நபர்களில் 10 பேர் பதவி விலக்கியுள்ளனர்.

இவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் மோடி அரசின் மோசமான செயல்பாடு என்று கூறப்பட்ட போதிலும் இதன் பின்னனியில் ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் சர்வதேச தலைவர் பிரவின் தொகாடியா இடையேயான மோதல் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பத்திரிகை ஒன்றிடம் விஹச்பியின் உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “விஹச்பியின் சர்வதேச தலைவராக தொகாடியா ஆறு வருடங்களாக பதவி வகித்துள்ளார். மேலும் தொகாடியாவிற்கு நெருக்கமான ராகவ் ரெட்டி விஹச்பியின் தேசிய தலைவராக இருந்துள்ளார். இவர்களின் கடின உழைப்பால் தான் பாஜக இன்று ஆட்சியில் உள்ளது. ஆனால் அரசிற்கு எதிராக தொகாடியா கேள்வி எழுப்பிய காரணத்தால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அவரை பதவியில் இருந்து இறக்கியது. மேலும் விஹச்பியின் சமீபத்திய தேர்தலில் ஆர்எஸ்எஸ் பாஜக வின் சதியால் தான் முன்னாள் நீதிபதி VSகொக்ஜே வெற்றி பெற்றார்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரவீன் தொகாடியா தன்னை போலி என்கெளண்டரில் கொலை செய்ய முயற்சிகள் நடப்பதாக பத்திரிகையாளர்களிடம் குற்றம் சாட்டினார். அதன் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் மோடியுடன் சமரசம் பேசவும் அவர் முற்பட்டார். தற்போது விஹச்பியின் தலைவர் தேர்தலில் அவர் தோல்வியுற்ற நிலையில் புதிய இந்து அமைப்பு ஒன்றை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. வருகிற 24 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கும் இந்த புதிய இயக்கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டாகிவிட்டது என்றும் வெறும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது என்று கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக ஜூலை 1 ஆம் தேதி அஸ்ஸாம் செல்லும் தொகாடியா ஆளும் பாஜக அரசின் இரண்டு வருட ஆட்சி குறித்து கேள்வி எழுப்ப இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இரண்டு ஆண்டுகளில் ஆளும் பாஜக அஸ்ஸாமில், பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை தடுக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கக்வில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது தொகாடியா தொடங்க இருக்கும் புதிய இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களும் வந்து இணைவார்கள் என்று தொகாடியா ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.