அஸ்ஸாம்: பயங்கரவாத செயல்களுக்கு நிதிதிரட்டிய பாஜக தலைவர்

0

அரசு பணத்தை தீவிரவாத செயல்களுக்காக பயன்படுத்திய குற்றத்திற்காக பாஜக தலைவர் உட்பட மூன்று பேருக்கு தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் கடந்த செவ்வாய்கிழமை ஆயுள் தண்டனை வழங்கியது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் நிரன்ஜன் ஒஜாய் என்பவர் அஸ்ஸாமில் வடக்கு கச்சார் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சில் தலைவராக பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் மீது அரசு பணத்தை தீவிரவாத செயல்களுக்காக பயன்படுத்தியதாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் DHD (திம்ம ஹாலம் தௌகா) என்ற ஆயுதம் தாங்கிய குழுவில் தலைமை கமாண்டராக இருந்தவர். இந்த இயக்கம் தீவிரவாத குழு என்று அரசால் அறிவிக்கப்பட்ட DNSF என்ற திம்மசா தேசிய பாதுகாப்பு படை என்ற குழுவிலிருந்து பிரிந்த ஆயுதக்குழுவாகும்.

இக்குழு 2009 ல் CRPF படையிடம் சரணடைந்து ஆயுதங்களை ஒப்படைத்தது. அதன் பின்னர் அவர் கடந்த வருடம் பாஜகவில் சேர்ந்து வடக்கு கச்சார் மாவட்ட கவுன்சில் தலைவரானார்.

இந்நிலையில் இவர் அரசு ஊழியர்களுடன் இணைந்து பயங்கரவாத செயல்களுக்காக சட்டத்திற்கு புறம்பாக நிதி திரட்டியதாக தேசிய புலனாய்வு நிறுவனத்தால் கைது செய்யப்பட்டார். இவருக்கான தண்டனையை தற்போது சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த இரு வழக்குகளில் 15 பேருக்கு பல்வேறு பிரிவுகளில் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட மூன்று பேரில் பாஜக தலைவராகவும் மாவட்ட கவுன்சில் தலைவராகவும் உள்ள நிரன்ஜன் ஒஜாய் அடக்கம். அவருடன் கைது செய்யப்பட்ட ஜீவல் கர்லோசா DHD(J) பிரிவின் முன்னாள் தலைமை கமாண்டர் ஆவார். இன்னொருவர்;  மொஹித் ஒஜாய், முன்னாள் மாவட்ட கவுன்சில் நிர்வாக உறுப்பினராவார்.

குற்றவாளிகளில் R.H.கான் (துணை இயக்குநர், சமூசநலத்துறை), புஜேந்திர ஒஜாய் (ஒப்பந்ததாரர்), அஸ்ரிங்தவ் வரிசா (DHD உறுப்பினர்), வன்லால்சன்னா (மிசோராம் ஆயுதக் கடத்தல்காரர்), ஜெயந்த் குமார் கோஷ் (ஒப்பந்ததாரர்) ஆகிய ஐந்து பேருக்கு 10 முதல் 12 ஆண்டுகள் வெவ்வேறு பிரிவுகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஏழு பேர்களான ஒப்பந்ததாரர்கள் கோலன் தௌலகுப்பு, சந்தீப் கோஷ், பாபு கெம்ப்ராய், திபேஷிஷ் பட்டாச்சார்ஜி மற்றும் ஹவாலா பரிவர்த்தனை செய்பவரான மல்சௌம்கிமி, பொது சுகாதாரத்துறை தலைமை பொறியாளர் கருணா சைக்கியா, மற்றொரு அரசாங்க ஊழியர் ஜிபாங்சு பவுல் ஆகியோருக்கு எட்டு ஆண்டுகளும் இன்னொரு குற்றவாளி சமீர் அஹமது என்பவருக்கு ஐந்து ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பிஜான் மஹாஜன் தனது பேட்டியில், “நிரன்ஜன் ஒஜயாயை மீட்க கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாக” தெரிவித்துள்ளார்.

Comments are closed.