ஆக்ராவில் தாக்கப்பட்ட சுவிச்சர்லாந்து நாட்டு தம்பதியினர்

0

சுவிச்சர்லாந்து நாட்டை சேர்ந்த தம்பியினரை ஆக்ராவின் ஃபதெஹ்பூர் சிக்ரியில் ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளது.

கடந்த செப்டெம்பர் 30 ஆம் தேதி இந்தியாவிற்கு சுற்றுலா வந்த குவிண்டின் ஜெரீமி மற்றும் அவருடைய தோழி மேரி ட்ரோஸ் ஆகியோர் ஃபதெஹ்பூர் சிக்ரி ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்த போது அவர்களை ஒரு கும்பல் பின்தொடர்ந்துள்ளதாக தெரிகிறது. அந்த கும்பல், பெண் பயணியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கப் பட்டதால் அந்த சுற்றுலா தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜெரீமி, “முதலில் அவர்கள் எங்களை குறித்து எங்களுக்கு புரியாத மொழியில் ஏதோ கூறி கேலி செய்தனர். பின்னர் எங்களை மறித்து  மேரியுடன் அவர்கள் செல்ஃபீ எடுக்க வேண்டும் என்று எங்களை கட்டாயப்படுத்தினர்.” என்று கூறியுள்ளார்.

இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அந்த கும்பல் ஜெரீமி மற்றும் மேரியை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் ஜெரீமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது மண்டை ஓடு உடைக்கப்பட்டு அவருக்கு மூளையில் ரத்தக் கட்டு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் காது ஒன்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவரது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேரியின் கைகளில் முறிவு ஏற்பட்டு அவரது உடலின் பல இடங்களில் காயங்களும் ஏற்பட்டுள்ளது.

தாங்கள் தாக்கப்படும் போதும் ரத்த வெள்ளத்தில் கிடந்த போதும் அங்கிருந்தவர்கள் தங்களை காப்பாற்ற எந்த ஒரு முயர்ச்சியும் எடுக்கவில்லை என்றும் மாறாக அவர்கள் தங்களை அவர்களது மொபைல் போன்களில் படம் பிடித்ததாகவும் சுற்றுலா வந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு ஏற்பட்ட கொடூரத்தை குறித்து விளக்கிய ஜெரீமி, “அந்த இளைஞர்களின் செயல்களுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் அதனை நிறுத்தாமல் எங்களை பின் தொடர்ந்து வந்தனர். அதே சமயம் எங்களை அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டும் மேரியை நெருங்கவும் முயற்சித்தனர். அவர்கள் பேசியதில் இருந்து எங்களுக்கு புரிந்தவற்றில், அவர்கள் எங்களது பெயர்கள் என்ன என்றும் ஆக்ராவில் நாங்கள் எங்கு தங்கியுள்ளோம் என்பதையும் கேட்கிறார்கள் என்று நாங்கள் புரிந்து கொண்டோம். இந்த மொத்த நேரமும் அவர்கள் எங்களை துன்புறுத்திக் கொண்டே இருந்தனர். இன்னும் எங்களை அவர்களுடன் ஏதோ ஒரு இடத்திற்கு வருமாறு அழைத்தனர். ஆனால் நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டோம். இதனையடுத்து சில நொடிகளில் என் மேல் கற்கள் மழையாக பொழிந்தது. இதனை தடுக்க மேரி முயற்சிக்க அவரையும் அந்த கும்பல் விட்டுவைக்கவில்லை.” என்று கூறியுள்ளார்.

தன்னை அவர்கள் தாக்க மாட்டார்கள் என்று மேரி நினைத்ததாகவும் ஆனால் தனது கணிப்பு பொய்யானது என்று மேரி கூறியுள்ளார். இன்னும் தாங்கள் ஏன் தாக்கப்பட்டோம் என்று தங்களுக்கு புரியவில்லை என்றும் தங்களுடைய பொருட்கள் எதனையும் அவர்கள் எடுக்கவும் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு சுற்றுலா பயணிகள் மீது குற்றம் சுமத்தும் வகையில் அவர்கள் வெளிப்படையாக முத்தம் கொடுத்துக் கொண்டதாகவும் அதனால் தான் அந்த கும்பல் இவர்களை தாக்கியதாகவும் அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இதனை முற்றிலுமாக மறுத்த இவர்கள் அப்படி எதுவும் அங்கு நடைபெறவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஆக்ரா பகுதி காவல்துறை அதிகாரி சத்யம் சிங், இந்த தாக்குதல் குறித்து அந்த தம்பதியினர் காவல்துறையில் புகாரளிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

Comments are closed.