ஆசிஃபா கற்பழிப்பு வழக்கு பதான்கோட் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

0

ஆசிஃபா கற்பழிப்பு வழக்கு பதான்கோட் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

ஜம்மு கஷ்மீர், கதுவா பகுதியில் வைத்து கூட்டு கற்பழிப்பு செய்து படுகொலை செய்யப்பட சிறுமி ஆசிஃபா கொலை வழக்கு விசாரணையை ஜம்மு கஷ்மீருக்கு வெளியே பஞ்சாபின் பதாகொட் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவினை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி சந்திரசூத் மற்றும் நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஆயோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை ஜம்மு கஷ்மீருக்கு வெளியே மாற்றும்படி ஆசிஃபாவின் தந்தை அளித்தமனு மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் நீதமான விசாரனை நடைபெற வேண்டும் என்றும் அப்படியான ஒரு விசாரணை நடைபெற வேண்டுமானால் சாட்சியங்கள் எந்த ஒரு அச்சமுமின்றி நீதிமன்றத்தில் சாட்சியளிக்க வேண்டும் என்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவரும் பாதுகாப்பாக உணரவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துளளனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணையை தினசரி முறையில் நடத்தி வழக்கை ஒத்தி வைக்காமல் நடத்த வேண்டும் என்றும் வழக்கு விசாரணையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் இவ்வழக்கின் அனைத்து ஆவணங்களும் உருது மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்றும் அது முறையாக மொழிபெயர்க்கப்பட்டதா என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களும் குற்றம்சாட்டப்பட்டவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதி என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு சட்டத்திற்கு உட்பட்டு அவருக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து கவனிப்பும் கொடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் மாநில அரசு தங்கள் தரப்பில் இருந்து சிறப்பு வழக்கறிஞரை இவ்வழக்கில் நியமித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதியும் வழங்கியுள்ளது. இவ்வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் இவ்வழக்கு தொடர்பாக வேறு எந்த ஒரு நீதிமன்றமும் மனுக்களை பெறுவதற்கு தடை செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.