ஆதார்:ப்ரைவசிக்கு வைக்கப்பட்ட வேட்டு?

0

பல்வேறு சர்ச்சைகளாலும் சந்தேகங்களாலும் சூழப்பட்ட ஆதார் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதில் சில திருத்தங்கள் செய்யும்படி மாநிலங்கள் அவை பரிந்துரை செய்தும் அதனை மக்களவை நிராகரித்துள்ளது. மேலும் மாநிலங்கள் அவையின் ஒப்புதல் இல்லாமலே இதனை நிறைவேற்ற ஆதார் மசோதாவை பண மசோதாவாக அறிமுகம் செய்தது.

மசாதோவை அறிமுகம் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அரசின் மானியங்கள் தேவைப்படுவோருக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ஆதார் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அது தனிநபர் ரகசியங்களுக்கு (privacy) ஆபத்தானது என்ற வாதம் இருந்து கொண்டே இருக்கின்றது. தற்பொழுது ரகசியங்களை பாதுகாப்பதற்கு தேவையான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்று கூறப்பட்டாலும் மாநிலங்களவை பரிந்துரைத்த “தேசிய பாதுகாப்பு, தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், மத்திய ஊழல் கண்காணிப்பகம் மற்றும் மத்திய தணிக்கை துறையின் கீழ் இச்சட்டத்தை கொண்டு வர வேண்டும்” உள்ளிட்ட திருத்தங்களை ஏற்பதற்கு மக்களவை மறுத்துவிட்டது.

குடிமக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை கண்காணிக்க ஆதார் தேவை என்று கூறப்படும் அதே வேளையில் மானியங்கள் தவிர இன்னும் பல மடங்கு அதிகமான தகவல்களையும் ஆதார் மூலம் கண்காணிக்க முடியும். ஆனால் ஆதாரை அறிமுகப்படுத்திய முந்தைய அரசாகட்டும், அல்லது அப்போது அதனை எதிர்த்து தற்பொழுது நடைமுறைக்கு கொண்டுவர துடிக்கும் பா.ஜ.க. அரசாகட்டும், ஆதாரை சூழ்ந்துள்ள தனிமத ரகசிய பாதுகாப்பு குறித்து சரியான வழிமுறைகள் எதனையும் வகுக்கவில்லை.

இது குறித்து Centre for Internet and Society என்ற குழுவின் நிர்வாக இயக்குனர் சுனில் ஆப்ரஹாம் கூறுகையில் ” இந்த சட்டம் நிர்வாகத்தின் கையில் கட்டுக்கடங்கா அதிகாரத்தை கொடுக்கின்றது” என்று கூறியுள்ளார். உதாரணத்திற்கு தற்பொழுது ஆதாருக்காக பெறப்பட்டுள்ள தகவலுக்கும் கூடுதலாக தகவலை பெற வேண்டுமா கூடாதா என்பது குறித்து எந்த ஒரு வரைமுறையும் வகுக்கப்படவில்லை. கை விரல் ரேகை மற்றும் கண் விழித்திரை ரேகை ஆகியவற்றை தற்போது பதிவு செய்திருப்பது போன்று வரும் காலத்தில் ஒரு நபரின் DNA தகவல்கள் வரை அவசியம் என்று கூறி அதனையும் சேகரிக்க கூடும் என்று கூறியுள்ளார். இது போன்ற தகவல்கள் ஓர் இடத்தில் குவிக்கப்படுவது மிகவும் ஆபத்தானது.

தற்போது வரை ஆதார் அட்டையை அரசு கட்டாயமாக்கவில்லை. அரசு உதவிகளை பெறுவதற்கு ஆதார் அட்டை இல்லாத போது மற்ற ஆவணங்கள் வைத்து பெற்றுக்கொள்ளலாம் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

Comments are closed.