ஆதார்: அன்று முதல் இன்று வரை

0

ஆதார்: அன்று முதல் இன்று வரை

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, பல உயிர்களின் இழப்பிற்கு காரணமாக கூறப்பட்டு இந்திய மக்களின் வாழ்வில் எங்கும் எதிலும் வியாபித்து நிற்கும் ஆதார் குறித்த சர்ச்சைகளுக்கு தற்காலிகமாக ஒரு நிறுத்தம் வைத்துள்ளது உச்ச நீதிமன்றத்தின் ஆதார் சட்டம் குறித்த தீர்ப்பு. இந்த தீர்ப்பு, அதன் தாக்கம், பயன், ஏமாற்றங்கள் குறித்து பார்ப்பதற்கு முன்னதாக ஆதார் குறித்த சில விபரங்களை நினைவில் கொள்வது அவசியம்.

ஆதார் உருவாக்கம்

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் Unique Identification Authority of India (UIDAI) திட்டக் கமிஷனின் ஒரு பகுதியாக துவக்கப்பட்டது. 2010 ஏப்ரல் 26 ஆம் தேதி ஆதாரும் அதன் லோகோவும் அப்போதைய UIDAIயின் தலைவர் நந்தன் நீலகேணி முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த அறிமுக விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கெடுத்துக்கொண்ட தனேஷ்வர் ராம் என்ற ஒரு கிராமவாசி ஆதாரை அறிமுகம் செய்து வைத்தார். உத்தர பிரதேசின் ஆஸம் கார்க் பகுதியை சேர்ந்த தனக்கு இருப்பிடச் சான்றிதழ் கூட இல்லாத நிலையில் தனது அடையாளத்தை உறுதி செய்ய பல இன்னல்களுக்கு தான் ஆளாக வேண்டி இருந்தது என்றும் ஆதார் தன்னைப்போல கஷ்டப்படும் பல இலட்சம் மக்களுக்கு விடிவு காலமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த நீலகேணி, ஆதார் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முதன் முதலாக பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். ‘எளிய மக்களின் அடையாளம்’ என்ற அழகான வாசகங்களுடன் ஆதார் விளம்பரப்படுத்தப்பட்டது.

அப்போது இது என்ன, ஏன் என்ற விபரங்கள் சாமானியர்கள் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.பொதுமக்கள் மத்தியில் ஆதாரை அறிமுகம் செய்ய பல நேர்மறை பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டன. ஆதார் மூலம் சுமார் மூன்றரை இலட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படும், ஆதார் அமல்படுத்தப்பட்ட முதல் ஐந்து வருடங்களில் 14,500 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகள் ஏற்படும், அதன் தொடர்ச்சியான வருடங்களில் சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகள் ஏற்படும், இதன் மூலம் தொலைதொடர்புத் துறை பெரிதும் பயன்படும், பணமில்லா பரிவர்த்தனைக்கு இது அடித்தளமாக அமையும் என்று கூறப்பட்டது. இன்னும் பொது விநியோகத்துறையில் உள்ள ஊழல்களை இது முற்றிலுமாக ஒழித்துவிடும் என்றும் கூறப்பட்டது. இவற்றையெல்லாம் சொன்ன போது, ஆதார் ஒரு விருப்பத் தேர்வுதான் என்றும் சொன்னார்கள்.

இத்தகைய நேர்மறை பிரச்சாரங்களுடன் பொதுமக்கள் தங்களை ஆதாரில் இணைத்துக்கொள்ளும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. 2010 ஜூலை மாதம் ஆதார் பதிவு பணிகளை செய்திட இந்திய ஸ்டேட் வங்கிக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்திய ஸ்டேட் வங்கியுடன் மேலும் பல பொதுத்துறை வங்கிகளில் ஆதார் பதிவு பணிகளை நடத்தும் திட்டங்களும் அப்போது முன்வைக்கப்பட்டன. முன்னதாக 2010 ஜூன் 8 ஆம் தேதி, ஆதார் அமைப்பில் தங்களை பதிவு செய்த மக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் பணிக்காக லிமிசி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தது. அதே சமயம், பொதுமக்களின் ஆதார் மற்றும் அவர்களது கைவிரல் ரேகைகளை மட்டும் பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை செய்யும் மைக்ரோ ஏடிஎம் (MicroATM) சேவை குறித்தும் பல நிதி நிறுவனங்களுடன் UIDAI  பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி மகாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்தின் தெம்பலி கிராமம் இந்தியாவின் முதல் ஆதார் கிராமமாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, UIDAI தலைவர் நந்தன் நீலகேணி உள்ளிட்டோர் முன்னிலையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அந்த கிராமத்தை சேர்ந்த மக்களில் பத்து பேருக்கு முதல் கட்டமாக ஆதார் வழங்கப்பட்டது. 782xxxxxx884 (ஆதார் எண் பாதுகாப்பு காரணங்களுக்காக பகுதி மறைக்கப்பட்டுள்ளது) என்ற எண்ணுடன் ரஞ்சனா சோனாவ்னே என்ற பெண் இந்தியாவின் முதல் ஆதார் அட்டையை பெற்றார். தனது ஆதார் அட்டையை பெற்ற ரஞ்சனா, “ஆதாருக்கு என்னை முதல் நபராக தேர்வு செய்த சோனியா காந்திக்கு நன்றி. நான் எங்கு சென்றாலும் ஆதார் எனக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.