ஆதார் இணைப்பு இல்லாததால் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் இலைகளை உண்ட தலித் மக்கள்

0

கர்நாடக மாநிலம் சிக்பல்லபூர் மாவட்டத்தில் உள்ளது சவ்தாதெனஹல்லி தலித் காலனி. சுமார் 22  தலித் குடும்பங்கள் வசிக்கும் இந்த காலனி மக்களுக்கு அவர்களது ஆதார் எண் BPL அட்டையுடன் இணைக்கப்படாததால் அவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக ரேஷன் பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாசில்தார் உட்பட பல அரசு அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக மனு அளிக்கப்பட்டும் அவர்கள் எத்தகைய நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து அந்த 22 குடும்பத்தை சேர்ந்தவர்களும் அமைதியான முறையில் இலைகள் மற்றும் வேர்களை உண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தை அடுத்து 48 மணி நேரத்திற்குள் அங்கு விரைந்த அரசு அதிகாரிகள் அப்பகுதி மக்களுக்கு ஆளுக்கு தலா 7 கிலோ அரிசியுடன் கடந்த 18 மாதம் விடுபட்ட தவணையையும் சேர்த்து ஒரு நபருக்கு தலா 126கிலோ அரிசியை வழங்கியுள்ளனர்.

தங்களின் அமைதிப் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அப்பகுதி மக்கள் இதனை கருதுகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த அப்பகுதியைச் சேர்ந்த C.N.நாகேஷ் என்பவர், “இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் முறையாக தங்களை ஆதாரில் பதிவு செய்திருந்தாலும் அவர்களின் கைவிரல் ரேகையை ரேஷன் கடைகளில் உள்ள எந்திரங்களால் சரிபார்க இயலவில்லை. இதனால் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இவர்களின் மனுக்களையும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.” என்று கூறியுள்ளார். இன்னும் இரண்டு குடும்பங்களுக்கு கடந்த மூன்று வருடங்களாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இம்மக்களின் இந்த அமைதிப் போராட்டம் வெற்றியைத் தரவே அருகாமையில் உள்ள கிராம மக்களும் தங்களின் பிரச்சனைகளுக்கு இப்படியான போராட்டங்கள் மூலம் தீர்வு காண முடிவெடுத்துள்ளனர்.

இது குறித்து சிந்தாமணி துணை ஆணையர் சிவஸ்வாமி, அப்பகுதி மக்களிடம் இனிமேல் இது போன்ற பிரச்சனை எதுவும் நிகழாது என்றும் ஆதார் எண்னுடன் அவர்களின் BPL அட்டை இணைக்கப்படாவிட்டாலும் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

“போலியான ரேஷன் அட்டைகளை கண்டறிய ஆதார் இணைப்பு பயன்படுத்தப்பட்டது. ஆனால் இதனால் சில உண்மையான மக்களுக்ம் பாதிக்கப்படுகின்றனர். இது விரைவில் சரி செய்யப்படும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.