ஆதார் இல்லாததால் உணவு வழங்க மறுப்பு: தொடர்கதையாகும் பட்டினிச்சாவுகள்

0

உத்திர பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர் 50 வயது சகினா. இவரது குடும்பத்தினருக்காக ரேஷன் பொருட்கள் வாங்க சகினாவின் கணவர் இஷாக் அஹமத் ரேஷன் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது சகினாவின் பயோமெட்றிக் தகவல்களை சரி பார்க்க வேண்டும் என்று கூறிய அதிகாரிகள் சகினா ரேஷன் கடைக்கு வந்தால் மட்டுமே உணவுப் பொருட்களை வழங்க முடியும் என்று கூறியதாக தெரிகிறது.

முந்தைய ஐந்து நாட்களாக உடல் நிலை சரியில்லாத நிலையில் இருத்த சகினாவால் ரேஷன் கடைக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் இவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க அதிகாரிகள் மறுக்கவே உணவில்லாமல் அவர்கள் பட்டினியால் வாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடல் நிலை மேலும் மோசமடைந்த சகினா பசியால் துடித்து உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ராம் அக்ஷய், அந்தக் குடும்பம் மிகவும் வறுமையால் வாடிய குடும்பம் என்றும் அவர்களிடம் அன்டியோதையா ரேஷன் அட்டை இருந்தது என்றும் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சகினாவின் இந்த பட்டினிச்சாவு ஆதார் இணைக்கப்படாததால் அரசு உணவு பொருட்கள் வழங்க மறுத்து நிகழ்வும் தொடர்ச்சியான பட்டினிச் சாவுகளில் இணைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே ஆதார் பிரச்சனையால் உணவு வழங்க மறுக்கப்பட்டு பட்டினியால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தின் பாகூர் மாவட்டத்தை சேர்ந்த லுகி முர்மு என்ற 30 வயது பெண்ணும் அரசால் உணவு வழங்க மறுக்கப்பட்டு பசியின் காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கர்ஹவா மாவட்டத்தில் உள்ள சொன்புர்வா கிராமத்தை சேர்ந்த எத்வாரியா தேவி என்பவர் பட்டினியால் உயிரிழந்தார். இதற்கு முன்னதாக டிசம்பர் 1 ஆம் தேதி ப்ரீமானி குன்வர் என்பவருக்கும் ஆதார் குளறுபடியின் காரணமாக பட்டினிச் சாவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த அக்டோபர் மாதம் இதே போன்றே கொய்லி தேவி என்பவர் பட்டினிக்கு தனது மகளை பறிகொடுத்துள்ளார். அவரது இழப்பை தடுக்க தவறிய நிர்வாகமோ தன் மகள் பட்டினியால் இறந்தார் என்று கூறி கொய்லி தேவி தேசத்தை அவமானப்படுத்துகிறார் என்று சாடியுள்ளது. மக்களின் துயர் தீர்க்க என்று அரசு கூறிய ஆதார் மக்களின் உயிர் பறிக்கின்றதோ என்கிற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

Comments are closed.