ஆதியநாத் மீதான வழக்குகளை திரும்பப் பெற உத்தரவிட்ட ஆதியநாத் அரசு

0

உத்திர பிரதேச முதல்வர் யோகி அதித்யநாத் மீதான பல வழக்குகளை திரும்பப் பெற யோகி அதித்யநாத் அரசே உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தான் செய்ததாக அதித்யநாத்தே ஒப்புக்கொண்ட வெறுப்புப் பேச்சு வழக்கு ஒன்றில் அதித்யநாத்தை விசாரிக்க உத்திர பிரதேச அரசு அனுமதி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் படி தற்போது தடை உத்தரவு ஒன்றை மீறியதற்காக அதித்யநாத் மீது 1995 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றை திரும்பப் பெற ஆதித்யநாத் தலைமையிலான உத்திர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி உத்திர பிரதேச மாநில அரசு கோரக்பூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு அந்த வழக்கை திரும்பப்பெற விண்ணப்பிக்கக் கோரி அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழக்கில் மாநில நிதி அமைச்சராக உள்ள ஷீட்டல் பாண்டே, மற்றும் மேலும் பத்து பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதித்யநாத் மீதான வழக்கை திரும்பப்பெறும் இந்த உத்தரவு உத்திர பிரதேச கிரிமினல் சட்டத் திருத்தம் – 2017 சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தினத்திற்கு (டிசம்பர் 21) ஒரு நாள் முன்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு மறுநாள் இந்த சட்டத்திருத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டும் உள்ளது.

ஆதித்யநாத் மற்றும் பிறர் மீதான இந்த வழக்கு 1995 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி, மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த தடை உத்தரவை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதற்காக இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 188 இன் கீழ் பிபிகஞ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு அப்பகுதி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் நீதிமன்றம் முன் ஆஜராகததால் அவர்கள் மீது பிணையில் வெளிவரமுடியாத பிடியாணையை நீதிமன்றம் பிறப்பித்தது.  ஆனால் இரண்டு வருடத்திற்கு முன்னர் இந்த பிடியாணை உத்தரவிடப்பட்டாலும் அந்த உத்தரவு இன்னும் வழங்கப்படவில்லை என்று சட்ட அதிகாரி B.D.மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

தன் மீதான இந்த வழக்கு குறித்து சுக்லா கருத்து தெரிவிக்கையில், அப்படியொரு பொதுக்கூட்டம் நடைபெற்றது தனக்கு நினைவே இல்லை என்று கூறியுள்ளார். மேலும் இது 22 வருட பழைமை வாய்ந்த வழக்கு என்றும் தன் மீது பிணையில் வெளிவர முடியாத பிடியாணை உத்தரவு இருப்பது தனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 27 ஆம் தேதி மாவட்ட மேஜிஸ்திரேடிடம் இருந்து பெற்ற கடிதம் ஒன்றின் அடிப்படையில் இந்த வழக்கை தீர ஆய்வு செய்து அதனை திரும்பப் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் அதித்யநாத், சுக்லா, பாண்டே, மற்றும் மேலும் பத்து பேர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து மிஷ்ரா கூறுகையில், இந்த வழக்கை திரும்பப் பெறுவதற்கு நீதிமன்றத்தில் மனு அளிக்கக் கோரி மாநில அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளது என்றும் இதற்கு மாநில அரசு அனுப்பிய மனுவில் அதித்யநாத் பெயர் உட்பட 13 பெயர்கள் உள்ளது என்று மிஷ்ரா தெரிவித்துள்ளார். இந்த மனு குறித்த பணிகளை குளிர்கால விடுமுறை முடிந்ததும் தாங்கள் முன்னெடுக்க இருப்பதாக மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

கோரபூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தூண்டி விட்டதற்கும் அதனை முன்னின்று நடத்தியது தொடர்பான வழக்கில் இருந்தும் அதித்யநாத்தை விடுவிக்க கூறி கடந்த 2017 மே மாதம் உத்திரபிரதேச அரசு தரப்பில்126 பக்க ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது.

தன் மீதான குற்றங்கள் என்று முதல் தகவல் அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றங்கள் எதனையும் யோகி அதித்யநாத் மறுக்கவில்லை. 2014  ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி பேட்டியில் பொது தான் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளை பேசியதாகவும் அது மிகப்பெரிய கலவரமாக மாறி பல உயிர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த வழக்கை திருப்பப் பெறக் கூறி அரசு தாக்கல் செய்த அஃபிடவிட்டில் அவர் அந்த வெறுப்புப் பேச்சுக்களை பேசவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Comments are closed.