ஆந்திரா என்கௌண்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை

0

ஏப்ரல் 7 அதிகாலையில் திருப்பதியை ஒட்டியுள்ள சேஷாசலம் காடுகளில் வேலை தேடிச் சென்ற 20 தொழிலாளிகள் ஆந்திர சிறப்பு காவல் படையால் சுட்டுக் கொல்லப்பட்டது தமிழக மக்களை மட்டுமின்றி, மனிதாபிமானம் மிக்க அனைவரையும் அதிச்சியடைய வைத்துள்ளது. செம்மரக் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து கொல்லப்படுவதும், கைது செய்யப்படுவதும் பெரிய அளவில் தமிழர்களாகவே இருப்பது தமிழகத்தில் கூடுதலான ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தவிரவும் கொல்லப்பட்டவர்களின் மீதான குண்டுக் காயங்கள் பெரும்பாலும் மார்புக்கு மேலாகவும், தலையில் உள்ளதும், அவர்களது உடல்கள் சிதைக்கப்பட்டிருப்பதும் இது போலி என்கௌண்டர் என்பதை மெய்ப்பிப்பதாக உள்ளது என தமிழ் மற்றும் ஆந்திர மாநில மனித உரிமை இயக்கங்கள் மட்டுமின்றி, சிந்தா மோகன் போன்ற ஆந்திர எதிர்க்கட்சி தலைவர்களாலும் கூறப்பட்டது.

பேருந்துகளில் சென்று கொண்டிருந்த தொழிலாளிகள் இடையில் இறக்கப்பட்டு கொலைக் களத்திற்கு அழைத்து செல்லப்பட்ட செய்தி, சம்பவம் நடந்த அடுத்தடுத்த நாட்களில் வெளியானபோது ஆந்திர காவல்துறையின் நாடகம் முழுமையாக அம்பலப்பட்டது.

ஆந்திர காவல்துறையும், அமைச்சரவையும் தமது கொடுஞ் செயலை நியாயப்படுத்தி இன்று பேசிக் கொண்டுள்ளன. அம்மாநில காவல்துறை தலைமை அதிகாரி ஜே.வி. ராமுடு நடுநிலையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், “போலீசுக்குத் தெரியாதது. உங்களுக்கு தெரியுமோ” என்றெல்லாம் ஆத்திரப்பட்டு கத்த வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

எனினும், ஆந்திர மாநில மனித உரிமை இயக்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாடுகளின் விளைவாக இன்று கொலை செய்த காவல்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ‘மோதல்’ கொலைகள் தொடர்பான உண்மைகளையும், இதற்கு பின்னணியாக உள்ள அரசியலையும், தமிழகத் தொழிலாளிகள் இப்படி உயிரையும் பணயம் வைத்து இத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவானதின் பின்னணியையும் ஆய்வு செய்ய கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

உண்மை அறியும் குழு

 அ. மார்க்ஸ்  (National Confederation of Human Rights Organizations, NCHRO), சென்னை

 கோ. சுகுமாரன், மக்கள் உரிமை கூட்டமைப்பு, பாண்டிச்சேரி

 பேரா. பிரபா கல்விமணி  பழங்குடி இருளர் பாதுகாப்பு இயக்கம், திண்டிவனம்

சீனிவாசன்  சுற்றுச்சூழல் ஆய்வாளர்,சென்னை

 ரமணி  ஜனநாயக தொழிற்சங்க மையம்,சென்னை

 முகம்மது தன்வீர்  NCHRO, சென்னை

 தை. கந்தசாமி,  தலித் மக்கள் பண்பாட்டுக் கழகம், திருத்துறைப்பூண்டி

பரிமளா,  இளந்தமிழகம் இயக்கம், சென்னை

சே. கோச்சடை,  மக்கள் கல்வி இயக்கம்

 தமயந்தி  வழக்கறிஞர், விடியல் பெண்கள் மையம், சேலம்

 அப்துல் சமது,  மனிதநேய மக்கள் கட்சி, வேலூர்

விநாயகம்,  மக்கள் விடுதலை இதழ்

 சேகர்,  மக்கள் வழக்குரைஞர் கழகம், திருவண்ணாமலை

வேடியப்பன்,  சமூக செயற்பாட்டாளர், அரூர்

மணியரசன்,  வழக்கறிஞர், செங்கம்

பாரதிதாசன், இளந்தமிழகம் இயக்கம்,சென்னை

எங்கள் ஆய்வு முறை

என்கௌண்டர் கொலைகள் நடந்த இடங்களுக்கு இப்போது யாரும் செல்ல இயலாது. ஆந்திர அரசின் 144 தடை உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. தவிரவும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாரிடமும், தொடர்புடைய அதிகாரிகள் எந்தக் கருத்துகளையும் தெரிவிக்கக்கூடாது என்கிற தடையும் உள்ளது.

இது ஒரு உண்மையான மோதல்தான் எனவும், மரம் வெட்டிக் கொண்டிருந்தவர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவே தாங்கள் இந்த என்கௌண்டரை செய்தோம் எனவும் தலைமைக் காவல் அதிகாரி ராமுடு ‘டெக்கான் கிரானிகலு’க்கு அளித்துள்ள நேர்காணல் இந்திய ஊடகங்கள் பலவற்றிலும் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் எங்கள் குழு ஏப்ரல் 17,18 தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையிலுள்ள ஜமுனாமருதூர் ஒன்றியம், தருமபுரி மாவட்டம் சித்தேரிமலை ஆகிய பகுதிகளுக்கு சென்று பல தரப்பினரையும் சந்தித்தது. கொலையுண்ட 20 பேர்களில் மெலக்கணவாயூர் பன்னீர் செல்வம், கல்லுக்காடு சசிகுமார் தவிர அனைவரது குடும்பத்தினரையும் சந்தித்து விரிவாகப் பேசினோம்.

அவர்களின் குடும்ப நிலை, அவர்களது வாழ் நிலை, அவர்களின் கிராமங்களின் நிலை ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்தோம். முன்னதாக எம் குழு உறுப்பினர்களில் விநாயகம், வேடியப்பன் முதலானோர் பலமுறை இப்பகுதிகளுக்கு சென்று கொலையுண்டவர்களின் குடும்பங்களை சந்தித்து வந்தனர்.

இந்த சம்பவம் மற்றும் இதன் பின்னணி தொடர்பான ஊடகக் கட்டுரைகள், இணையப் பதிவுகள், வன உரிமை சட்டங்கள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டோம். பழங்குடியினர் பகுதிகளில் பள்ளிகள் செயல்படும் விதங்களையும் ஆய்வு செய்தோம்.

செம்மரக் கடத்தலின் பின்னணி, அரசியல், இது தொடர்பாக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி முன்னதாக வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டோம்.

ஏப்ரல் 7 சம்பவமும் அதன் தொடர் நிகழ்வுகளும்

காலை 10 மணி வாக்கில் திருப்பதியை ஒட்டிய சேஷாசலம் காடுகளில் ‘செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்த’ 20 பேர்கள் கூட்டுக் கொலை செய்யப்பட்ட செய்தி காட்சி ஊடகங்களில் வெளிவந்து அதிர்ச்சியை விளைவித்தன. கைது செய்ய முயன்றபோது இவர்கள் தாக்கியதாகவும் அதனால், டி.ஐ.ஜி. காந்தாராவ் தலைமையில் வந்த சிறப்பு காவற்படையினர் ‘தற்காப்பிற்காக’ சுட்டுக் கொன்றதாகவும் ஆந்திரத் தரப்பில் சொல்லப்பட்டது.

எனினும், இது தற்காப்புக்காக கொல்லப்பட்டதல்ல, குண்டுக் காயங்கள் இடுப்புக்கு மேலாகவே உள்ளன என்கிற தகவல்களை விரிவான ஆதாரங்களுடன் மனித உரிமை அமைப்புகளும், ஊடகங்களும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தன.

அடுத்தடுத்த நாட்களில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, தமிழக காவல்துறை உதவியுடன் மூட்டைகளாக கட்டப்பட்டு உறவினர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டன. உடல்களோடு இறப்பு சான்றிதழ் ஒன்றும், அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட உயிர் வளங்களை கொள்ளை கொண்டது, தடுக்க வந்த அரசுப் படையினரை கொலை செய்ய முயன்றது முதலான குற்றங்களை கொலையுண்டவர்களின் மீது சுமத்திய முதல் தகவல் அறிக்கை பிரதி ஒன்றும் உறவினர்களிடம் அளிக்கப்பட்டன.

20 பேர்களும் சேஷாசலம் காட்டில் இரு இடங்களில் நடந்த மோதல்களில் கொல்லப்பட்டதாக ஆந்திர காவல்துறை கூறியது. ஒரு இடத்தில் 9 பேரின் உடல்களும் இன்னொரு இடத்தில் 11 பேரின் உடல்களும் கிடத்தப்பட்டு ஊடகங்களுக்கு காட்டப்பட்டன. உடல்களுக்கு இடையில் அவர்களால் ‘வெட்டப்பட்ட’ செம்மரத் துண்டுகள் எனக் காட்டப்பட்டவைகளில் பொறிக்கப்பட்டிருந்த எண்கள் அவை முன்னதாகவே வெட்டப்பட்டவை என்பதை காட்டுவதை ஊடகங்கள் சுட்டிக்காட்டின.

மேலே குறிப்பிட்டவாறு, கொண்டு வரப்பட்ட பழங்குடியினரின் உடல்களில் எட்டு எரிக்கப்பட்டன. ஐந்து உடல்கள் புதைக்கப்பட்டன. அடிவாரத்தில் வாழ்ந்தவர்களில் பழனியின் உடல் எரிக்கப்பட்டது.

வன்னியர்கள், நீதி வேண்டும் என சாலை மறியல் செய்தனர். மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என பா.ம.க நீதிமன்றத்தை அணுகி மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக ஆறு பேர்களில் உடல்கள் ஆந்திராவிலிருந்து வந்த மருத்துவர்களால் மறு பரிசோதனை செய்யப்பட்டபின் புதைக்கப்பட்டன. மறு பரிசோதனை அறிக்கை ஆந்திர உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆந்திர காவல்துறையின் ‘என்கௌண்டர்’ கதை குறித்த வேறு சில கூடுதல் தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

இதற்கிடையில் மோதலின் போது தற்காப்புக்காகத்தான் சுட வேண்டியதாயிற்று என ஆந்திர காவல்துறை சொல்வதற்கு எதிரான ஒரு மிக முக்கிய ஆதாரம் பார்வைக்கு வந்தது. கொல்லப்பட்டவர்களின் ஏழு பேர்கள் திருப்பதி செல்லும் வழியிலேயே ஆந்திர காவல்துறையால் கடத்தி செல்லப்பட்ட செய்திதான் அது. ஆந்திர எல்லையில் உள்ள நகரி புதூர் என்னும் இடத்தில் பேருந்தை நிறுத்தி அவர்கள் அழைத்து செல்லப்பட்டதை நேரடி சாட்சியங்கள் இன்று நிறுவுகின்றன.

எங்களது விசாரணையும் இதை உறுதிப்படுத்தியது. மரக்கடத்தல் மாஃபியாவின் உள்ளூர் ஏஜெண்டான புதூர் வெங்கடேசன் என்பவர் மூலம் வேலைக்கு அழைத்து செல்லப்பட்ட ஒரு குழுவில் எட்டு பேர்கள் இருந்துள்ளனர். தற்போது கொல்லப்பட்டுள்ள படவேடு வட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் பழனி ஆகியோர் மூலமாக சித்தேரி மலையிலிருந்து சனிக்கிழமை (ஏப்ரல் 4) மாலையே புறப்பட்டு வந்து அக்குழு ஜவ்வாது மலையில் தங்கி பின் ஞாயிறு மதியம் அவர்களை கண்ணமங்கலம் கொண்டு வந்து அங்கிருந்து பேருந்தில் திருத்தணி வழியாக ரேனிகுண்டா கொண்டு செல்வது ஏஜெண்டுகளின் திட்டம். இக்குழுவில் தற்போது உயிர் பிழைத்துள்ள படவேட்டை சேர்ந்த சேகர் (45), சித்தேரியை சேர்ந்த பாலச்சந்திரன் ஆகியோரும் இருந்துள்ளனர்.

இவர்களில் பாலச்சந்திரன் தன் நண்பர் ஒருவருடன் கண்ணமங்கலத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றதால் மற்றவர்களோடு பஸ் ஏற இயலாமற்போயிற்று. அந்த குழுவில் அவரது தந்தை அரிகிருஷ்ணனும், மைத்துனன் சிவகுமாரும் இருந்துள்ளனர். போதை தெளிந்த பாலச்சந்திரன் அந்தக் குழுவில் இருந்த சிவக்குமாரை தொடர்பு கொண்டபோது, அவர்கள் நகரி புதூரில் ஆந்திரக் காவலர்களால் இறக்கி அழைத்து செல்லப்படுவது தெரிந்தது. பின் அவர் ஊருக்கு திரும்பினார். பாலச்சந்திரனின் சகோதரன் பிரபாகரன் இவற்றை விரிவாக எங்களிடம் விளக்கினார்.

ரேனிகுண்டாவை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, நகரி புதூரில் நிறுத்தப்பட்டு ஆந்திர காவல்துறையால் அக்குழுவில் இருந்த எட்டு பேர்களில் ஏழு பேர்களை இறக்கியபோது, யாரோ ஒரு பெண்ணருகில் அமர்ந்து சென்று கொண்டிருந்த சேகரை அப்பெண்ணின் கணவர் என நினைத்து, அவரை விட்டுவிட்டு மற்ற ஏழு பேர்களை மட்டும் அழைத்து சென்றனர். சேகர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி திருத்தணி செல்லும் பேருந்தைப் பிடித்து தப்பித்து வந்துள்ளார்.

இப்படி வெவ்வேறு பேருந்துகளில் வந்துள்ள பலரும் ஏப்ரல் 6 அன்று வாகனங்களிலிருந்து இறக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட பன்னீர் செல்வமும் இப்போது தப்பியுள்ள இளங்கோவும் ஒரு ஆட்டோவில் வந்தபோது பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கொண்டு சென்று வைத்திருந்த இடத்திலிருந்து மங்கலான வெளிச்சத்தில் தப்பி ஓடி வந்துள்ளார் இளங்கோ.

ஆந்திர காவல்துறையின் என்கௌண்டர் கதையை பொய்யாக்கும் வலுமிக்க சாட்சியமாக இன்று சேகர், பாலச்சந்திரன், இளங்கோ ஆகியோர் உள்ளனர். மதுரையை சேர்ந்த பீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பு இம்மூவரையும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன் நிறுத்தி நடந்த உண்மைகள் குறித்த வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளது.

இளங்கோ முதலானோர் சொல்வதிலிருந்து, அன்று ஆந்திர காவல்துறையால் கடத்தி செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இருபதை தாண்டும் எனத் தெரிகிறது. மற்றவர்களின் நிலை என்ன என்பது மர்மமாக உள்ளது.

இதற்கிடையில் ஆந்திர மாநில சிவில் உரிமைக் கழகம் தொடுத்த வழக்கொன்றின் ஊடாக ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்பு படையினர் மீது ஆட்களை கடத்தியது, கொன்றது ஆகிய குற்றங்களை சுமத்தி இரு முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன.

ஆந்திர மாநில டி.ஜி.பி. ஜே.வி. ராமுடு இது பற்றி கூறுவது:

“2014ல் கடும் நடவடிக்கைகள் தொடங்கியபின் இதுவரை 831 வழக்குகள் தொடுக்கப்பட்டு 5,239 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 715 வாகனங்கள், 15,520 மரத்துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஜனவரி 2014 தொடங்கி இன்று வரை கைது செய்யப்பட்டவர்களில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் 2202 பேர். பிற மாநிலத்தவர் 3033 பேர். இவர்களில் தமிழகம் மற்றும் கர்நாடகத்தை சேர்ந்தவர்களே அதிகம்.

31 கடத்தல்காரர்கள் பிடிபட்டுள்ளனர். இவர்களில் 16 பேர் ஆந்திரத்தவர், 10 தமிழர்கள், கர்நாடக மாநிலத்தவர் 3, பிற மாநிலத்தவர் இருவர். 45 செம்மரக் கடத்தல்காரர்கள், தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.” (டெக்கான் க்ரானிகல், ஏப்ரல் 15)

ஆக, ஆந்திர டி.ஜி.பி. சொல்வதிலிருந்து கடந்த 14 மாதங்களில் மட்டும் சுமார் 2,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறைகளில் உள்ளனர் என்பது தெரிகிறது. இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் உள்ள பழங்குடி மற்றும் அடித்தள சாதியினர். பெரும்பாலும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளில் பயணிக்கும் போதும் கைது செய்யப்பட்டவர்கள். கேட்ட கேள்விக்கு அவர்கள் தமிழில் பதில் செõல்வதொன்றே போதும் அவர்கள் கைது செய்யப்படுவதற்கு.

இந்த முறை 20 பேர்கள் கொல்லப்பட்டுள்ள அதே நேரத்தில், 61 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஆந்திர காவல்துறை கூறியுள்ளது. ஆனால், 150 பேர்களுக்கும் மேல் அன்று இழுத்து செல்லப்பட்டதாக தப்பி வந்தவர்கள் கூறுகின்றனர். மீதமுள்ளவர்களின் கதி என்னவெனத் தெரியவில்லை.

கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய் இழப்பீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது. அ.தி.மு.க. தலா இரண்டு லட்சமும், தி.மு.க. ஒரு இலட்சமும், தே.மு.தி.க. 50,000மும், தமிழ் மாநில காங்கிரஸ் (ஜி.கே. வாசன்) 25,000மும் வழங்கியுள்ளன. பா.ம.க. கொல்லப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு பட்ட மேற்படிப்பு வரைக்கும், அதற்கு மேலும் முழுமையாகக் கல்வி செலவுகளை ஏற்பதாக அறிவித்துள்ளது.

செய்ய வேண்டியவை

இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டும். இந்த விசாரணை உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட வேண்டும். செம்மரக் கடத்தல் தடுப்பு படையின் தலைவர் டி.ஐ.ஜி. எம். காந்தாராவ் உட்பட கொலைச் செயலில் ஈடுபட்ட அதிகாரிகளும் காவலர்களும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

கொல்லப்பட்ட 20 பேர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர மாநில அரசு தலா 30 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

கொல்லப்பட்ட அன்று இந்த 20 பேர்களைத் தவிர வேறு யாரும் கொல்லப்பட்டார்களா, சுற்றி வளைக்கப்பட்ட மற்றவர்களின் கதி என்னாயிற்று என்பவற்றை நேரில் கண்டறிய மனித உரிமை அமைப்புகள் அனுமதிக்கப்பட வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையமும் இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

செம்மரக் கடத்தல் மாஃபியா குறித்தும், அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவு குறித்தும் ஆராய ஆந்திரம் மற்றும் தமிழகம் அல்லாத மாநிலம் ஒன்றை சேர்ந்த பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்க வேண்டும்

2014 மே மாதம் சந்திரபாபு நாயுடு அரசு செம்மரங்களை டன் ஒன்று ரூ. 27 லட்சம் என ஏலத்தில் விற்றபோது ஹரித்வாரில் உள்ள பாபா ராம்தேவின் பதஞ்சலி யோக பீடம் மட்டும் 270 கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்களை ஏலம் எடுத்துள்ளது. பன்னாட்டு சந்தையில் இம்மரங்களின் மதிப்புடன் ஒன்று ஒரு கோடி ரூபாய் வரை உள்ள நிலையில் இவற்றை அவ்வமைப்பு வெளியில் விற்று ஏராளமான லாபம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. இது தடுக்கப்படுவதோடு, இதுவரை மருந்து தயாரிக்க ராம்தேவின் அமைப்பு எவ்வாறு செம்மரங்களை பெற்று வந்தது என்பது குறித்தும் உரிய விசாரணை செய்யப்பட வேண்டும்.

தமிழக அரசு இதுவரை வனப்பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளால் உருவாகியுள்ள தடைகளை நீக்கி, பிற மாநிலங்களைப் போல அச்சட்டம் இங்கு உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

பேருந்துகளிலிருந்து இறக்கி அழைத்து சென்று சுட்டுக் கொல்வது, தமிழ் பேசினாலே கைது செய்து கொடும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் போட்டு சிறையில் அடைப்பது என்கிற நிலையில் தமிழக அரசு, ‘முறையான விசாரணை வேண்டும் ’என ஆந்திர அரசை வேண்டிக் கொண்டதோடு நிறுத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முறையான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு என்கௌண்டர் கொலைக்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும், அப்பாவிகளுக்கு உரிய இழப்பீடுகள் கிடைப்பதற்கும் சிறைகளிலுள்ளவர்களை விடுதலை செய்வதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை இக்குழு வற்புறுத்துகிறது.

மேலும் பழங்குடி இன மக்கள் வாழும் பகுதிகளில் பள்ளிக்கூடம், மருத்துவமனை மற்றும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் இக்குழு கேட்டுக் கொள்கிறது.

(மே 2015 இதழில் வெளிவந்த அறிக்கை)

Comments are closed.