ஆந்திரா: செம்மரம் கடத்தியதாக 20 நபர்கள் சுட்டுக் கொலை

0

ஆந்திர மாநிலத்தின் திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்திய கும்பலில் 20 நபர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக ஆந்திர மாநில காவல்துறை அறிவித்துள்ளது.இதில் 12 நபர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 200 பேர் செம்மரம் வெட்டுவதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் அதனை தொடர்ந்து தாங்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாகவும் ஆந்திர காவல்துறை தெரிவித்தது.அப்போது காவல்துறையினர் மீது செம்மரம் வெட்டியவர்கள் கற்களை வீசி தாக்கியதாகவும் அதனால் தாங்கள் சுட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை சார்பில் இரண்டு நபர்கள் காயமடைந்ததாக கூறப்பட்டாலும் விரிவான தகவல்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.ஒரே சமயத்தில் 20 நபர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்திற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.இச்சம்பவத்தை பெரும்பான்மை அரசியல் கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளன.காஞ்சிபுரம் அருகே ஆந்திர பேருந்து ஒன்று சிறைபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள ஆந்திர ஹோட்டல்கள் மற்றும் கிளப்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.